January 17th, 2008

சைத்ரிகன் கவிதைகள்

Print This Post Print This Post

சித்திரை மழையைப் போலும் உனக்கான இந்தக் காமம்

ஈரமிக்க மழைப் பொழுதின் முடிவைப் போல
அனைத்துமே பிசுபிசுக்க
காமம் பிணைகிறது
மழைக்காலங்களின் விறகடுப்பைப் போல…

திரைச்சீலைகளையும் இழுத்து மூடி
மெழுகுருகித் தீர்ந்து கவிந்த இருளில்
வாசிப்பதற்காய் என்னைத் தீண்டுமுன்
இன்னமும் ஆறிப்போய்விடாத
உன்னுடைய காதலை
ஒரு மதுக்குவளையளவு பருகினேன்

மழையெனப் பெய்யும் உன்னால்
நனைந்து ஊறும்
இரகசியத்தின் மணமிக்க அறை.

மஞ்சள் நிறமடையும் பொலிவிய நாட்குறிப்பு

என்னிடமிருக்கிற
பொலிவிய நாட்குறிப்புகள் பிரதி
மிகவும் பழசானது தான்

நாளுக்கு நாள்
அதன் பக்கங்கள் மஞ்சளாகிக் கொண்டிருப்பதை
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சொல்லித் தரப்பட்ட மௌனத்துடன்

எல்லா சிவப்புக் கனவுகளும்
இப்படியாக,
இப்படியாகவேதான்,
ஆமாம், இப்படியான மௌனத்துடன் தான்
நிறமிழந்து -அழிந்து- இல்லாது போயிற்று

சே
ஒக்டோபர் ஏழாம் தேதி*
இப்படியெழுதியிருந்தார்;
At 2 we rested
as it was now useless try
to advance.
____________________
• சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட தினம்

மத்தியகாலக் கடவுள்கள் பற்றியதொரு கேலிச்சித்திரம்

அறையெங்கும் நகர்ந்துகொண்டிருக்கும்
தனிமைக்கு
இடுப்பில் துணியிருப்பதில்லை
கடவுள்கள் உட்பட எல்லாருமே
அதைப் பார்த்துத் தானிருக்கிறோம்.

அந்தரங்கமாக - மிக அந்தரங்கமாக
இக்கவிதையின் அசைவைப் போன்ற
வேட்கை மிகும் அசைவுகளுடன்
தனிமை தம்மைப் புணர்ந்து முடித்ததை
என்னிடம் சொன்னார்கள்,
விளக்கணைந்த தருணத்தில்.

அவர்களது சங்கடங்கள் எல்லாம்
அசந்தர்ப்பமாய்
விறைத்துப் போய்விட்ட உறுப்பை
நினைவுறுத்துபவை.

நானும்
இதே சிக்கலைப் புரிந்து வைத்திருக்கிறேன்.
அவர்களைப் பொறுத்த்வரை
இந்த விறைப்பு
சொல்ல முடியாத வார்த்தைகளாலும்
வெட்கப்பட வேண்டிய ஒலிக்குறிப்புக்களாலும்
ஆகியிருக்கிறது.

எல்லாம் முடிகையில்
எல்லாச் சொற்களும்
எல்லா ஒலிக் குறிப்புகளும்
கரைந்து முடிந்திருக்கும்.

பிறகு அவர்கள் தம்மைக் கழுவுகையில்
அனைத்தின் இருப்பும் இல்லாமலாகும்

பிறகு,
‘இது நடப்பது தானே’ என
மிகவும் சுருங்கிப் போய்விட்ட
வார்த்தையொன்றை
விறைப்புடன் சொல்வார்கள்


January 17th, 2008

சோளகக் காற்றில் அம்மா அலைந்து திரிகிறாள் | சைத்ரிகன்

Print This Post Print This Post

சோளகக் காற்றின் காலம்
மறுபடியும்
தொடங்கி விட்டது.

கொடியில் உலரும் ஆடைகளுக்கு
‘கிளிப்’ போடும் அம்மா
லாந்தரின் சிம்னியை
ஒவ்வொரு மாலையிலும்
துடைத்து வைக்கிறாள்.

சோளகக் காற்று வீடெங்கும் நிறைய
மங்கிய வெளிச்சம் தரும் விளக்கின்
நிச்சயமற்ற சுடர் காற்றிலாடுகையில்
அம்மா;
உப்பிட்டு அவித்த சோள விதைகளையும்
கறுப்புத் தேநீரையும்
என் மேசையில் வைக்கிறாள்

தேநீர்க் கோப்பைக்குள்
அலையடிக்கிறது

சோளகக் காற்றில் கூந்தல் அலைவுற
பைத்தியக்காரிகளைப் போல
தன்னுடலில் இருந்தும் வெளியேறி
இரவெரியும் தெருக்களில் நடக்கிறாள் அம்மா.
[தெருவெங்கும் அன்னையரும் பிணங்களும்…]

அவள் அலைந்து திரிந்து
அதிகாலையில் திரும்பும் வரை
வீழ்ந்து கிடக்கும் அவளுடலைப் போர்த்தி
தூக்கமாத்திரைக் குப்பியை ஒளித்து வைக்கிறேன்

மறுநாள் பகலில்
நான் மீண்டும் அவளைக் கண்ட போது
சோளகக் காற்று
சருகுகளை அலைத்துக் கொண்டிருந்தது.
பைத்தியக்காரியைப் போல கூந்தல் அலைவுற
வெய்யிலில் உலரும் அரை ஈர ஆடைகளுக்கு
‘கிளிப்’ போட்டுக் கொண்டிருந்தாள்.

இன்னும்,
இது முடிந்த பிற்பாடு
சிம்னியை திருநீறிட்டு மினுக்குவாள்,
தூக்க மாத்திரைகள் இரண்டை விழுங்குவாள்,
பிறகு…
தன்னுடலை விட்டிறங்கி
இரவெரியும் வீதிகளிலும் தெருக்களிலும்
குருதி பிரளப் பிரள அலையத் தொடங்குவாள்
பிணங்களுக்கிடையே…

கொல்லப்பட்ட இன்னொரு சடலமென
வீழ்ந்து கிடக்கும் அவளுடல் - மறுநாள் காலைவரை.
***

[முப்பது வருட கால யுத்தத்தால் விதவைகளாக்கப் பட்ட எல்லா அன்னையர்களுக்கும்]


October 22nd, 2007

பெண்கள், அடையாள அரசியல், பிரதியாக்கம் மற்றும் பெண் எழுத்து

Print This Post Print This Post

‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுப்பை முன்வைத்து சில அவதானங்கள்

-நிகிதா இம்மானுவல்பிள்ளை-
peyal manakkum
பெயல் மணக்கும் பொழுது
ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்
தொகுப்பு - அ.மங்கை
வெளியீடு - மாற்று
முதல்பதிப்பு - மே 2007
விலை - இந்திய ரூபா 130
தொடர்புகளுக்கு:
இந்தியன் வங்கிக் காலனி
வள்ளலார் தெரு, பத்மநாபா நகர் சூளைமேடு, சென்னை 94
தொலைபேசி:
0091 44 24742886

மொழியின் எழுத்துச் செயல்பாட்டில் இருந்தும் ‘பெண்’ ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறாள்1. மொழிவழிச் செயற்பாடுகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப் பட்டிருக்கிற அவளின் அடையாளம் உயிர்ப்புடன் வினைபுரிவதென்பது மிகச் சமீபகாலமாய்த் தான் சாத்தியமாகியிருக்கிறது. வரலாறுகளில் தனக்கான இடத்தை மறுபடி பெற்றுக்கொள்ளுவதற்கான பெண்ணிய நுண்-அரசியல் ((feminist micro-politics) ) மற்றும் பெண்ணியக் கதையாடற் களங்கள் (feminist discourses) ஆகியவற்றின் நீட்சியாகப் பெண்ணியக் கவிதையியல் சாத்தியமாகிறது. இக்கவிதையியல் இயக்கமடைகிற எல்லா மொழிவழிச் செயற்பாடுகளையும் ‘பெண் எழுத்து’(ecriture feminine) எனும் பெயரால் அறிகிறோம். பெண் எழுத்தை வரைவிலக்கணப்படுத்த முடியாது, அது வரைவிலக்கணங்களுக்கும் கருத்தியல் சட்டகங்களுக்கும் அப்பால் பட்டது என்றெல்லாம் பல பின்னமைப்பியல் பெண்ணியர்கள் கூறிச் சென்றிருந்தாலும் கூட ‘பெண் எழுத்து’ என்பதற்கான பண்புகள் சிலது இருக்கிறது.
‘பெண்’ எனும் அடையாளத்தைச் சுமந்து வருகிற பிரதிக்கு இருக்கும் கடப்பாடுகளும் சவால்களும் கடினமானவை. ‘பெண்’ அடையாளம் விளிம்புநிலையிலிருக்கிற ஒன்று என்பதால் தன்னை முதலில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறது. இத் தேவையின் அடிப்படையில், பெண்ணியச் செயல்பாடுகளின் ஒரு அங்கமாகவும் தன்னளவில் முழுமையுடையதாகவும் பெண் எழுத்து இயக்கமடைகிறது. இது போராட்டக் குணமுடையதாயும், தனித்துவமிக்க பெண்மொழியை ஆயுதமாக்கி ஆண்வழிச் சமூக ஒழுங்கைச் சிதைப்பதாயும் இருக்க வேண்டும்; பெண்ணை எழுதுவதாகவும், பெண்ணைப் பற்றியதாகவும், பெண்மையினை ‘எழுத்து’ என்பதற்குள் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும்.2
சொல்லப்படுகிற வரலாற்றிலும் எழுத்திலும் தனது தீவிரமான இடையீட்டை நிகழ்த்தக் கூடிய பெண் எழுத்து என்பது ஒரு மாற்றுச் செயல்பாடே. தற்போதுள்ள எழுத்தின் மொழி ஆண்மைய ஒழுங்கினால் உருவாக்கப் பட்டு பரிபாலிக்கப் படுகிற ஒன்று. அதன் மூலம் பெண் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலவே இயலாது என்றார் Helen Cixous.3 இந்தப் புரிதல் புதிய மொழியொன்றை, மாற்று எழுத்து முறைகளை நோக்கி இயங்கும்படி சொல்கிறது.
Meaghan Morris சொல்வதைக் கவனிப்போம்: ‘feminist writing is one of the ways in which feminism tries to challenge (misogyny’s) history and refuse it’s inheritance. To enter into feminist practice of writing is to accept to face both tasks.’
Meaghan Morris குறிப்பிடுகிற இரண்டு செயல்பாடுகளையும் மொழிவெளியில் நிகழ்த்தும் கவிதையியல் ஒன்றைக் கட்டமைக்கிற பிரதிகளை பெண் பிரதிகளாய் அணுகி உரையாடலைத் தொடங்க முடியும்.
ÒÒ
80களின் இறுதிப்பகுதியில் ஈழத்திலும் 90களின் இறுதியில் தமிழகத்திலும் எழுந்த பெண்நிலைநோக்குச் சொல்லாடல்களின் மறுவிளைவாக சுவாரஸ்யமானதும், அதேசமயம் தீவிர மறுபார்வைகளை முன்வைப்பதுமான பல பிரதிகள் நமக்குக் கிடைத்தன. இவற்றுள் மாலதி மைத்ரி என்கிற ஆளுமையின் அசைவியக்கம் கவிதையிலும் பெண்ணிய அரசியல் புரிதல்களிலும் ஏற்படுத்திய தாக்கம் வலிமையானது. கலாச்சாரத் தளத்தில் ஆண்மைய ஒழுங்குவழிப்பட்ட சொல்லாடல்களில் தமது இடையீடுகளை நிகழ்த்தி உரையாடலைச் சாத்தியமாக்கிய சுகிர்தராணி, சல்மா, குட்டி ரேவதி போன்ற கவிகளும் பாமா, சிவகாமி போன்ற புனைகதையாளர்களும் பெண்ணிய சிந்தனைத் தாக்கத்தின் வெளித்தெரியும் அடையாளங்கள்.
இந்தப் பெண்ணிய அதிர்வுகள் அனைத்துமே இன்றைய தேதியில் நுகர்வுமயப்பட்டிருப்பது4 வேதனையான உண்மை. Male voyeurism இதற்கு முக்கிய காரணம். ஆண்களால் உருவாக்கப்பட்டுள்ள சந்தையின் தேவைகளுக்கேற்பவே பெரும்பாலான பெண் எழுத்துக்கள் இனி வெளிவரும் என நம்பலாம். அடையாளங்களை நுகருகிற ஒரு போக்கும் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. தலித் படைப்புகளின் தொகுதி, பெண் எழுத்துக்களின் தொகுதி என்று tag இடப்பட்டு விற்பனைக்கு வைக்கப் படும் பிரதிகள், ஒரு பிராண்ட் நேம் ஆக அடையாளங்களை உருவாக்கி நுகர வைக்கிற பதிப்பகங்களின் போக்கு கவலைதருவது. Made in Japan/All American சுலோகங்களை வாங்குகிற நுகர்வோரையொத்த வாசிப்பாளர்கள் பெருகிப் போயிருக்கிறார்கள். ப.திருநாவுக்கரசுவின் ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ தொகுப்புத் தொடங்கி அண்மையில் வெளிவந்திருக்கும் தலித் படைப்புகளின் தொகுதியான ‘கோடை உமிழும் குரல்’(அம்ருதா வெளியீடு) வரை இதற்கு உதாரணங்கள் அதிகம். ‘அடையாளப்படுத்தப் பட்ட பிரதிகள்’ (identity marked texts) பிரதிமைய வாசிப்பை நிகழ்த்த ஒருபோதும் அனுமதிக்காதவை என்பதும் இதனால் பிரதிக்குள் இயக்கமுறும் அடையாளம் கவனிப்பிலிருந்து தவறி விடும் என்பதும் தெரிந்த விடயங்கள். ஆண் பெண் அடையாளங்கள் பற்றியதன்று எனது அக்கறை. கதையாடற்களங்களில் இவ்வடையாளங்கள் எப்படி/எதுவாக இடப்படுத்தப்படுகின்றன என்பதையே ஆராய வேண்டும். மேலும் நான் இங்கு குறிப்பிடுவது: ‘பிரதியாளரின் அடையாளம்Xபிரதியின் அடையாளம்’ எனும் துவித எதிர்மையையே!
ஈழத்தைப் பின்புலமாய்க் கொண்ட பெண்பிரதியாளர்கள் சிலரின் கவிதைப் பிரதிகளிள் சிலதைப் பொறுக்கியெடுத்து (தேர்ந்தெடுத்து அல்ல!), தொகுப்பு அறம், பிரதியாளர் உரிமை, பிரதியாளர் அனுமதி என எந்த ஒன்றைப் பற்றியும் கவலைப்படாமல் ‘பெயல் மணக்கும் பொழுது’ எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார் அ.மங்கை.
இதைப் போலவே ‘ஊடறு’ அமைப்பும், தமது வலைப்பதிவுக்கு அனுப்பி வைக்கப் பட்ட கவிதைப் பிரதிகளை, பிரதியாளர்களின் சம்மதமின்றி நூலுருவாக்கியிருக்கிறது (‘மை’ஜுன் 2007).
இரண்டு தொகுதிகளும் ‘பெண்களால் எழுதப்பட்டவை’ என்கிற பொதுமைப்பாட்டை(ஒப்புமை அல்ல) மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்டிருப்பவை. அதுவும் பெயர்களின் பெண் தன்மையைக் கொண்டே (இறுதி எழுத்தின் ‘ஆ’ ‘இ’க்கள்!!) பிரதிகள் தேர்வுசெய்யப்பட்டிருப்பதை ஆமிரபாலி, ஆதிரா ஆகிய பௌதீக ரீதியில் ஆண்களாயிருப்போர் உள்ளடக்கப்பட்டிருப்பதிலிருந்து உணர முடிகிறது. ‘பெண்களால் எழுதப்பட்டிருக்கிற’ காரணத்தினாலேயே ‘பெண் எழுத்து’ எனும் தகுதியைக் கோரி நிற்கிற பிரதிகள் இவை. Sexual Difference உடலியல் ரீதியில் கட்டமைக்கப் பட முடியாதது5 என்பதைக் கூட அறியாதிருப்பதன் வெளிப்பாடுகளாகவே இவ்விரு தொகுப்புகளையும் கருத நேர்கிறது.
ஊடறுவினால் வெளியிடப்பட்டுள்ள ‘மை’ தொகுப்பு இந்தியா, ஈழத்தமிழரின் புலம்பெயர் நாடுகள், மற்றும் இலங்கை எனப் பல்வேறு நிலப்பரப்புக்களுடன் தன்னைத் தொடர்பு படுத்துகிறது. ஊடறுவின் தொகுப்புச் செயல்பாடு சிரமங்கள் தராத ஒன்று - கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதை அப்படியே ப்ரின்ற் செய்வது! இதில் தொகுப்பாளருக்கென்று என்னதானிருக்கிறது??
‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுப்பு ஈழம் என்கிற ஒன்றுடன் மாத்திரம் தனது தொகுப்பு அடையாளத்தைப் பகிர்கிறது. ‘மை’ தொகுப்பைப் போலன்றி இதில் தொகுப்பாளர் வினைபுரிவராக இருக்கிறார். பெண் எழுத்து, பிரதிகள், அடையாளம் தொடர்பில் நிறையப் பேசுவதற்கு ‘பெயல் மணக்கும் பொழுது’ உகந்தது. ‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுதிக்குள் மட்டுமாகவே எனது அவதானிப்புகளை முன்வைக்கிறேன். இத்தொகுதியின் உள்ளடக்கம், தெரிவு அடிப்படை, தொகுப்புச் செயன்முறை ஆகியவற்றை விசாரிப்புக்குட்படுத்துவதன் மூலம் பெண்ணியம், பிரதிக்குள் இயங்கும் அடையாளம், தொகுப்பாக்கம் பற்றிய சில புரிதல்களை எட்ட முயல்வதே எனது நோக்கமாகிறது.
‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுப்பின் தலைப்பு மஹாபாரதக் குருஷேத்திரத்தின் பின்னான உயிர்ப்பு மிக்க பொழுதொன்றை நினைவுறுத்தும் சங்கேதமாய்ப் பயன்படுகிறது எனக் குறிப்பிடுகிறார் அ.மங்கை. மஹாஸ்வேதா தேவியின் சிறுகதையொன்றிலிருந்து எடுத்தாளப்படுகிற இச்சங்கேதம் ஈழத்தின் நிலவரங்கள்(குருஷேத்திரம்) தொடர்பில் ஒரு விதமான பரிதாபம் கலந்த, நெகிழ்வான, துயரம் கசிகிற நினைவடுக்கொன்றை வாசிப்பாளரின் மனதில் உருவாக்குகிறது. அடுத்து வரப்போகிற கவிதைப் பிரதிகளை வாசிப்பாளர் இந்த வகையான நினைவடுக்கில்தான் இயக்கி உள்வாங்க முடிகிறது. இங்கு நிகழ்த்தப் படுவது பிரதியை வாசித்தலாக(textual reading) மட்டுமில்லை, அதன் சூழலையும் வாசித்தலாக(reading the context) உள்ளது என வாதிடுபவர்கள், அ.மங்கையின் வரிகள் ‘உருவாக்கித் தருகிற சூழல்’ பற்றிக் கவனிக்க வேண்டும். அ.மங்கை கையாள்கிற சங்கேதம் கிளர்த்துகிற நினைவலைகள், தொகுப்பிலிருக்கிற பெரும்பாலான பிரதிகளுக்குச் சற்றும் பொருந்தாதவை. புலம்பெயர்ந்தோரின், சமாதானக் காலத்தின், மலையகத்தின், முஸ்லிம் பெண்களின் சூழமைவுகளுக்கு இழைக்கப் பட்டுள்ள பெரும் அநீதியாகவே இதைக் காண முடிகிறது. வடக்குக் கிழக்கின் சூழலில் இருந்து வெட்டியெடுத்த படிமம் சகலருக்கும் பொதுவானதாய் வைக்கப் படுவது பெரும் வன்முறை: அது வடக்கு-கிழக்கு அல்லாத பிறவற்றை மறுப்பதாய் உள்ளதுடன் வடக்கு-கிழக்கின் உண்மையான துயரத்தைக் கொச்சைப் படுத்தவும் செய்கிறது.
மேற்குறித்த சங்கேதம் அதற்கடுத்து வருகிற பிரதிகளைப் பரிதாபத்துடன் அணுகும்படி கட்டாயப் படுத்துகிறது. ‘பாவப்பட்ட சீவன்களாய்’ ஈழப் பெண் எழுத்துக்களை அணுகும் விமர்சனச் சொல்லாடல்கள் சமீபகாலமாய் மறுக்கப் படுவதை அறிவோம்.6
பரிதாபம், அனுதாபம், இரக்கம், தயவுதாட்சண்யமெல்லாம் அவரவர் ஈகோக்களைத் தடவிக் கொடுக்கிற கேவலங்களாகக் கூட இருக்க முடியும்(ego boosting). ‘பரிதாபத்தையும்’ ‘அனுதாபத்தையும்’ இவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்கிற போது மிகத் தெளிவாய் இது பல்லிளிக்கிறது.7 ‘அனுதாபம்’ ‘இரக்கம்’ போன்றவற்றின் அரசியல் பற்றிய தெளிவுடன் அவற்றை அப்பால் வைத்துவிட்டே இப்பிரதிகளை நாம் அணுக வேண்டும்.
எனது வாசிப்புகளில் மொழி விளையாட்டின் போதையை, காட்சிப்படிமங்களின் நெருக்கீட்டிலுருவாகிற லயிப்பை, இலக்கிய மொழிபொன்றிடமிருந்து நாம் எதிர்பார்க்கிற இன்பத்தை ஓரளவுக்கு வழங்க முடிகிற பிரதிகள் பலதை இனம் காண முடிந்தது. ஆழியாள், அனார், கற்பகம்.யசோதர, மைதிலி, ஆகர்ஷியா போன்றோரது பிரதிகளை இவ்வாறானவையாய் அடையாளப் படுத்தலாம். ஒரே சமயத்தில் பல்வேறு வித்தியாசமான குரல்களை அடுத்தடுத்த நிலையில் (differences in juxtaposition) வாசிப்பிற்குட்படுத்த முடிவது ஓர் வித்தியாசமான அனுபவம். இப்பெண்கவிகளின் தமக்குள்ளாக வேறுபடுகிற கவிதைக் களன்கள், மொழி, வெளிப்பாட்டு முறை, வடிவம் எனப் பல்வேறு பிரதியாக்கல் நுட்பங்களை ஒரே சமயத்தில் அனுபவித்தலும் இத்தொகுதியில் சாத்தியமாகிறது.
தொகுதியில் உள்ள கவிதைப் பிரதிகளை அவற்றின் வித்தியாசங்களின் அடிப்படையில் பிரித்து, ஒப்புமைகளின் அடிப்படையில் தொகுத்தும் அணுகுவதன் மூலம் எனது இடையீட்டை நிகழ்த்த விரும்புகிறேன். இங்கும் பிரதியாக்கல் நுட்பங்களையன்றி, பிரதியின் பேசுபொருட்களையே எனது இடையீடு கவனத்திற்குட்படுத்துகிறது.
மரணத்துள் வாழ்பவள் என்கிற வகையில் என்னை முதலில் கவர்பவை ‘போர்’ ‘வன்முறை’ பற்றிய கவிதைப் பிரதிகள் தான், ‘பெயல் மணக்கும் பொழுது’ என்ற அ.மங்கையின் வலிமையான சங்கேதம் தவிர்க்கமுடியாதபடிக்கு எனக்குள்ளும் கிளர்த்தி விடுகிற வலிமிகுந்த நினைவுக்களனில் நிகழ்கிற வாசிப்பில்;
அனாரின் ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதை மிகவும் அலைக்கழிப்பதாயிருக்கிறது. அந்தக் கவிதைக்குள் கசிந்துகொண்டிருக்கிற குருதி, வாசிப்பின் பின்னான தருணங்களில் ‘சாவின் தடயமாய் என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தது’. அக்கவிதையில் நிசப்தமாய் விசும்பிக்கொண்டிருக்கிற பெண்மையின் சுவடுகள் வன்முறைக்கெதிரான வலிமையான பிரதியியல் நடவடிக்கைகளாகும். ஈழத்திலிருந்து வன்முறை-வலி தொடர்பில் பெண்களால் எழுதப் பட்டவற்றுள் மிகவும் சிறந்த கவிதைப் பிரதி அதுவெனலாம். வடக்கிலிருந்து துரத்தியடிக்கப் பட்ட முஸ்லிம்களின் குரலாய் ஒலிக்க முயற்சி செய்கிற அனாரின் ‘ஈறல்’ கவிதை இப்படியான அதிர்வுகளெதையும் தருவது இல்லை. மிகவும் மேலோட்டமான யதார்த்தவாதப் பதிவாய் அது எஞ்சுகிறது.
ஆகர்ஷியாவின் படிமங்கள் ‘குரூரச் சித்திரவதைகளால் தொங்கிப் போன கரிய கோடுகளென’ அதிர்வுடன் கூடிய வலியைப் பகிர்ந்து கொள்பவை. தொலைதூரத்திலிருக்குமாறு சபிக்கப்பட்டவனின் மீதான புரிதலை, நேசிப்பை வெளிப்படுத்தும் அற்புதமான வரிகள்: ‘தடித்த அங்கியின் கீழாகத் துடித்துக் கொண்டிருக்கிற உன் இதயம் பற்றி நான் அறிவேன்’ ஆனாலும் அவனை நினையாதிருக்கப் பல்லாயிரங்காரணங்களாய் வாழ்க்கை இருக்கிறது. நடுக்கூடத்தில் துண்டமாக்கப்படுகிறாள் தோழி, இப்படியாக மிகவும் இயல்பான மொழியில் கனதியான நினைவலைகளை எழுப்புகிறது ஆகர்ஷியாவின் பிரதி. நேசத்தைக் கூடப் பரிமாறிக்கொள்ளவியலாத வலி அலைக்கழிப்பது.
‘அதிகாரத்தின் ஆண்குறி’யென ஆமிரபாலியால் வெறுப்புடன் விளிக்கப்படும் ஆண்மை+அதிகாரம்+மேலாதிக்கம் என்னும் கூட்டை ஆழியாள் ‘பாஷை’யுடன் தொடர்வுறுத்தும் இடம் கவனிப்புக்குரியது; கணவன், பாலியல் வன்முறை, பாஷை எனும் மூன்று புள்ளிகளில் ஆழியாளின் கவிதை வரிகள் இயங்கிப் பிணைகின்றன;

“அவள்களுக்கும் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப் பட்ட
பாஷையைப் புரிந்துகொண்டேன்

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்”

யுத்தம், வன்முறை, சிதைவுகள் பற்றிய செய்திப் பிம்பங்களின் பெருக்கத்தின் முன் பார்வையாளர்களாக வைக்கப் பட்டிருப்பவர்களாகிய எமது ‘இரக்கம்’ எப்படியாய் இருக்கிறது என்பதை/எப்படியாய் இருக்கும்படி வைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்கிற ‘கி.பி2003இல் ஒரு தைகிரிஸ்’ கவிதை ஆழியாளை நல்ல கவிஞராய் நிறுத்தி வைக்கிறது. ‘சுருங்கிய வெறுங்கைகள் வெதும்பி அல்லாடி, வேண்டாம் போர்!’ என்று சொல்வதாய் தனக்கு முன்னிருக்கும் படிமங்களை வாசிக்கிற ஆழியாளின் கவிதைப் பெண்ணின் கண்கள் கலங்குகின்றன. ஆனால், இறுதியில் பார்த்தால் அவள் மடியிலிருந்த வாட்டிய பாண்துண்டுக் கிண்ணமும், ஆவிபறக்கும் தேநீர்க் கோப்பையும் காலியாகிக் கிடக்கிறது. நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளியபடி ஜெனோசைட் டொக்யூமென்ரறிகளைப் பார்வையிடும் பார்வையாளரென நாம் பிம்பங்களின் பெருக்க உலகில் வாழ வைக்கப்படுகிறோம். ‘இரக்கம்’ ‘அனுதாபம்’ எல்லாம் அர்த்தமிழந்து போய்விட்ட நிலை! யாரையும் குற்றம்சாட்டுகிற தொனியிலன்றி, தானே ஒப்புக்கொள்வதான தொனியில் சொல்லப்படுவதனால் மேலும் மேலும் கவிதை தாக்கவன்மையுடையதாய் இருக்கிறது. இது ஆழியாளின் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று. அடையாளங்களின் திணிப்பை மிகவும் எளிமையான மொழியில் இலகுவாக ஆனால் தீவிரத்துடன் கேலி செய்கிற ‘அடையாளம்’ கவிதையும் இத்தொகுப்பில் உண்டு. அடையாளங்களைச் சுமந்து திரிதலில் இருக்கிற அபத்தத்தை வெளிப்படுத்தும் இக்கவிதையும் ஆழியாளின் நல்ல கவிதைகளில் ஒன்று. அதிர்ச்சிகரமான விவரணைகளால் நிரப்பப் படுகிற ‘சின்னப் பாலம்’ கவிதையில் ஆழியாள் சிறந்த அதிர்ச்சியூட்டுனராய் இருக்கிறாரே தவிரக் கவிஞராக இல்லை.
அம்புலியின் கவிதைகள் ‘போராளி’ எனும் கடப்பாட்டினடியாக ‘நம்பிக்கையை’ப் பேச முனைபவையெனினும் மிகையோங்கும் தன்மையாய் ‘தாய்மையை’ உணர்த்துபவை. வன்முறை பற்றிய வெறுப்புடன் ‘பாலைவன நாட்களையே உனக்குப் பரிசளிக்கிறேன்’ என்கிறார். ‘யாரும் தனித்திருக்க விரும்பாத காற்று வெளிகளை’ப் பற்றியெல்லாம் அவரது கவிதைகள் அச்சத்துடன் பேசும்போது நம்மால் புரிந்து கொள்ளப் படுகிற அன்பு, நேசம், இணைவுக்கான விருப்பு எல்லாம் வன்முறைக்கு அப்பாலானவை.
மணிரத்னம் வகையறா படிமங்களுடனும், நா.முத்துக்குமாரின் மொழியுடனும் தமது கவிதைகளை உருவாக்கும் ஒரு பண்பை விநோதினி, பஹீமா ஜகான் ஆகிய இருவரிடமும் காண முடிகிறது. இருவரின் மொழியும் மெல்லிய துயரம் கலந்த இசைத்தன்மையைக் கொண்டது. இக்கவிதைமொழியும் வெளிப்பாட்டுவடிவமும் ஓர் முகிழ்நிலை வாசிப்பாளருக்குள் கிளர்த்துகிற அருட்டுணர்வு மிகவும் தற்காலிகமானது. உணர்வுகளைப் பிரதியாக்கம் செய்கையில் எதிர்-ரொமாண்டிக் தளத்தில் இயங்க வேண்டியிருப்பது பற்றி எலியட்டின் காலத்திலேயே விவாதிக்கப் பட்டாயிற்று. மனித ஓலம் ஊளையாய் ஒலிக்கிற இனப்படுகொலையின் தருணத்திற்கூட ‘தேவதைகள் வரவில்லை’ என்று ரொமாண்டிசிசம் பேச இடமிருக்கிறது பஹீமா ஜகானுக்கு(பக்.170). உண்மையில் அப்படியான நிலமைகளில் நாங்கள் தேவதைகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை; எங்களுடைய உடலுறுப்புகளாவது எம்மிடமிருக்கிறதாவென்பதையே நாம் உறுதி செய்ய வேண்டியிருந்தது. மனித ஓலத்தை விட ரொமாண்டிக் போலித்தனங்கள் நிரம்புகிற இக்கவிதைகள் பேசுகிற யுத்தம், தனிமனித இழப்புகள், பிரிவுகள், நேசம் இன்னபிறவற்றையெல்லாம் மேலும் தீவிரத்துடன், இயல்பாக, தாக்கவன்மையுடன் சொல்கிற கவிதைப் பிரதிகளை அனார், கற்பகம் யசோதர, ஆழியாள், மைதிலி போன்றவர்களிடமிருந்து பெற்றிருக்கிறோம். கவிதைகளின் ரொமான்ரிசிசம், குறித்த சூழமைவின் கொடூரத்தையும் அவலத்தையும் மதிப்பிழக்கச் செய்து ப்ளர்(blur) செய்யப் பட்ட ஒரு உலகைக் காட்ட எத்தனிப்பதால் தான் பஹீமா ஜகான், விநோதினி போன்றோரின் கவிதைகளை மறுக்க நேர்கிறது. அலங்காரங்கள் அற்ற, வெறுமனே ஒரு சம்பவம் பற்றிய விவரணையாகவிருக்கிற நாமகளின் ‘யதார்த்தம்’ கவிதை(பக்155) இவர்களுடையதோடு ஒப்பிடுகையில் கூடுதல் அதிர்வுகளைத் தருவதாயிருக்கிறது.
ஷெல்வீச்சில் ஒருத்தன் செத்துப் போக, அதன் பின்னான நிலவரத்தை எவ்வித ரொமாண்டிக் போலித்தனங்களுமற்று மிக இயல்பாய், கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் நாமகள்:

“எஞ்சியதாய்
கொஞ்சமாய் அவனது இரத்தம்.
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்
ஷெல் துண்டுகள்…
அவ்வளவு தான்

வாகனங்கள்
அவற்றையும்
துடைத்துக் கொண்டே கடந்தன

வீதியில்
இப்போது எதுவுமேயில்லை
பழையபடி…
மண்ணெண்ணை வரிசை
முன்பைவிட நீண்டிருக்கிறது
தேநீர்க்கடையிலும்
புதிதாய்
ஒரு பாட்டு ஆரம்பமாகிறது
சனங்கள்
விரைந்து கொண்டிருக்கிறார்கள்
எதுவுமே நிகழாத மாதிரி”

நாமகளின் கவிதை வெறும் ஒரு சம்பவத்தின் விபரிப்பு மட்டும்தான் எனக் கூறிவிட முடியாது. இக்கவிதையில் இடம்பெறுகிற ‘வாகனங்கள் எல்லாவற்றையும் துடைத்துக் கொண்டு கடத்தல்’ ‘புதிதாய் ஒரு பாட்டு ஆரம்பமாகிறது - கடையில்’ என்பதெல்லாம் மிகவும் குறியீட்டு வலிமை கொண்டவை. இதை விளங்கியபடி கவிதையை வாசிப்புச் செய்தால், அது தருகிற அர்த்த விரிவுகள் சுவாரஸ்யமானவை.
இருளின் பயங்கரங்களினூடாக வாழ்ந்து கொண்டிருந்த செல்வி, சிவரமணி ஆகியோரின் ‘யுத்த கால இரவுகளின் நெருக்கடியை’ பதிவு செய்கிற வலிமையான கவிதைப் பிரதிகளும் இத்தொகுப்பில் உண்டு. இவ்வளவு வன்முறைகளுக்குள்ளும் நேசமும், காதலும், இதம்தரு மென்னுணர்வுகளும் நிரம்பிய பெண்ணாக நாட்களை நகர்த்துதல் எவ்வாறிருந்திருக்கக் கூடும் என்பது பற்றிய கூட்டுச் சித்திரமொன்றை இப்பெண்கவிகளது பிரதிகள் மூலம் வரைந்து கொள்ள முடிகிறது.
80களின் கொந்தளிப்பான நிலவரங்களில் தாயாக, காதலியாக, மனைவியாக, இடம்பெயர்பவளாக இருக்க நேர்ந்ததைப் பேசுகிற கவிதைப் பிரதிகளும் கவனிப்புக்குரியவை. ஒளவையின் ‘தாயின் குரல்’ கவிதைப் பிரதி பெண்மையின் முக்கியமான மறுப்புக் குரலாய்க் கொள்ளப்படத் தக்கது. நேசிப்பினடியாக எழும் இழப்பின் துயரத்தை ஊர்வசி, ஒளவை, சன்மார்க்கா போன்றோரிடம் உணர முடிகிறது.
புலம்பெயர் பெண்களின் பகிர்வுகள், ‘மறையாத மறுபாதி’ தொகுப்பிலிருந்தும் பிற புலம்பெயர் சஞ்சிகைகளிலிருந்தும் எடுத்து இணைக்கப் பட்டுள்ளன. ‘பெண்ணாக ஒரு அகதி’ (ப195) என்று எழுதுகிறார் பிரியதர்ஷினி. ஆனால் அப்படியான ஒரு நோக்குநிலைப்பட்ட கவிதைகளெதுவும் இத் தொகுப்பில் இல்லை. நிறவன்முறை பற்றியெல்லாம் கூட இக்கவிகள் கதைக்கிறார்கள் பெண்ணாயிருத்தல் பற்றித்தான் வாய்திறக்கிறார்களில்லை.
நாடற்று, பதிவுகளற்று அகதியாய், பெண்ணாய் இருத்தல் பற்றிய வலிமையான கவிதைகளெதுவும் இத்தொகுப்பில் உள்ளடக்கப் படவில்லை. ஆழியாளின் ‘துவிதம்’ தொகுப்பிலுள்ள ‘எட்ட ஒரு தோட்டம்’ கவிதை மிக முக்கியமானது. ‘வழக்கமான ஒய்யாரத்துடன் வேர்விடும் களைகளின் பெயர்களைத்’ தெரிந்துகொள்ள முடியாத கலாச்சார அந்நியமாதலின் மோதுகை மிகவும் கவர்கிற ஒன்று. எதனடிப்படையில் கவிதைகள் தேர்வுசெய்யப் பட்டனவென்றே கூறமுடியாத ஒரு தொகுப்பில் இதையெல்லாம் எதிர்பார்க்கமுடியாதுதான்.
‘ஆப்பிள் மரத்தடியில் மாங்காய்கள் தேடுகிற’(நிருபா கவிதை - மறையாத மறுபாதி) புலம்பெயர் nostalgia பல புலம்பெயர் கவிதைகளில் இயங்குகிறது. இந்த வழக்கமான புலம்பெயர் cliché-வுக்கு எதிர்த்திசையில்சென்று, ‘எமது பூமி ஒரு சொர்க்கம்’ என்கிற மாயையைச் சிதறடிக்கிற பிரதீபா தில்லைநாதனின் கவிதை சுவாரஸ்யமானது;

விடை பெறும் போது
கலங்கும் முதுமையை
முக்காடிட்டு மறைத்து
‘சின்னக் காக்காவை
கொழும்பில் கண்டனியோ’
கேள்வியில் வெளிறும்
சொர்க்கமே எனது பூமி”

(பக் 190)

புலம்பெயர்ந்த ஆண்கவிகளின் (சேரன், ஜெயபாலன், தா.பாலகணேசன், அரவிந்தன் போன்றோர்) ‘தாயகம்’ பற்றிய பசுமையான நினைவுத் தளத்தைக் கேள்வியெழுப்பி மறுக்கிற இப்பிரதி மிக முக்கியமான ஒன்று. பிரதீபாவின் நினைவுத்தொகுப்பு முழுதும் ‘வெளியேற்றப் பட்ட சனங்களை வவுனியா வழிகளில் கண்ட கவலைகள் கவலைப்படாமல் கெந்தித் தட்டிய’ நாட்களின் கறை படிந்திருக்கிறது.
தொழிலாளியால் எழுதப்படும் எதுவும் சோஷலிச இலக்கியம், முஸ்லிமால் எழுதப்படும் எதுவும் முஸ்லிம் தேச இலக்கியம், இந்துமதத்தைப் பிறப்பு மதமாகக் கொண்டவர்கள் அனவரும் எழுதுவது இந்து இலக்கியம் போன்ற அபத்தங்களை அடியொற்றி பெண்களால் எழுதப்படுகிற எல்லாம் ‘பெண்ணிலக்கியம்’ என்கிற கேலிக்கூத்து நடைபெறுகிற காலம் இது. பெண்களால் கவிதை எனும் அடையாளப்படுத்தலுடன் எழுதப்பட்ட பிரதிகளனைத்தையும் இணைத்தல் இத் தொகுப்பின் நகைப்புக்குரிய அடிப்படையென்பதால், அருட்கவிதா தேவநாயகம்(பக்.19), கலைக்கதிர் (பக்.73), மைத்ரேயி(பக்.208), யாழினி(பக்.216), ஜமுனா(பக்.254) ஆகியோரின் பிரதிகள் உள்ளடக்கப் பட்டுள்ளன. கவிதை என்னும் வடிவத்திடம் இருந்து(வரிவடிவம் மட்டுமல்ல) எதிர்பார்க்கப் படுகிற எந்த ஒன்றையும் எமக்களிக்காத வெறும் சொற்குவியல்களாய் எஞ்சுகிற பிரதிகள் இவை. நவீன தாய்மார்கள் பற்றிய விமர்சன(?)மாக இருக்கிற ஜமுனாவின் ‘பா(ல்..!)ழ்…!’ பிரதி(பக்.254) ‘உறைசாதனப் பெட்டிக்குள் முலைப்பால் உறைந்து போகிறது’ ‘இண்டர்நெட்டில் தாயின் முத்தம் பரிமாறப்படுகிறது’ ‘டிஜிட்டல் தாய்பால் கிறிஸ்மஸ் கழிவு விற்பனை’ என்றெல்லாம் அலட்டி, நவீன வாழ்க்கை முறைகளின் கீழ் தாய்மை காணாமல் போய்விட்ட நிலையைச் சொல்கிறது. இதில் நவீன வாழ்முறைகளின் மீதான புரிதலின்மை ஒருபுறமிருக்க, ‘தாய்மை’ என்பதையெல்லாம் அதன் மரபான அர்த்தத்தில் வலியுறுத்துவது ஆண்மையம் கொண்டதாக அல்லவா இருக்கிறது? இக் கவிதை எந்த அடிப்படையில் தொகுப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது? பெண்ணால் எழுதப் பட்டது என்பதாலா? – ‘பெண்களால் எழுதப்பட்ட எதையும் பெண்ணிலக்கியமாகவே கொள்ள வேண்டும்’ எனுகிற முட்டாள்த்தனங்களை சற்று யோசித்தால் சிரிப்புத் தான் வருகிறது. இதுபற்றி இக்கட்டுரையின் பிறிதோரிடத்தில் விரிவாக ஆராயப்படுகிறது. அப்பகுதியை இணைவாசிப்புச் செய்யவும்.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் பிரச்சனைப்படுத்தியிருந்த பெண்ணிய அரசியலுக்கு மீளவும் வரலாம்:
வித்தியாசங்களை உணர்தல் - அறிதல் (recognition of differences) - பெரும்பாலும் ஆண்மைXபெண்மை8 எனுகிற dichotomyயை - என்பதிலிருந்தே பெண்மைய அரசியலும் அதற்கான கவிதையியலும் (feminist politics and it’s poetics) கட்டமைய முடியும். வித்தியாசங்களை உணர்தல், வெளிப்படுத்துதல் என்று வருகையில் அனார் முக்கியமானவர். தனது வித்தியாசத்தின் இருப்பை சாராம்சப்படுத்துதலினூடாகவே அவர் கட்டமைக்கிறார் (essentialising). ஆனாலும் கூட, ஆண்புனைவுக்கு எதிரான எதிர்ப்புனைவாய் குறித்த சாராம்சப் படுத்துதல் அமைந்துபோவதால், ஒரே சமயத்தில் அது சுமைநீக்குவதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது (காண்க: ‘மை’ தொகுப்பிலுள்ள ‘பருவகாலங்களைச் சூடித்திரியும்’ கவிதை) அனாரின் கவிதைப் பெண் ‘விலகி நிற்பவள்’. அவள் சொல்கிறாள்:

“இன்னும்
இந்த ஒரே உலகத்திலேயேதான்
இருக்கின்றன
எனக்கும்
அவனுக்குமான
வெவ்வேறு உலகங்கள்”

(பக்.24)

வன்முறையைப் பதிவு செய்கிற போதிலும் கூட அனார் ‘பெண்ணிலைப் பட்ட’ படிமங்களையே கையாள்வதை இங்கு குறிப்பிட வேண்டும். ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதையில் வருகிற மாத உதிரம் பற்றிய சங்கேதமே அக்கவிதையின் ‘பெண்மை’யை மீள்வலியுறுத்திக் கொண்டியங்குகிற ஒன்றாய் அமைகிறது.
தனது வித்தியாசங்களைக் கொண்டாட அவர் முயல்வது மகிழ்ச்சி தருகிற விடயம். பெண்ணிய அரசியலிலும் கவிதையியலும் ‘கொண்டாட்டம்’ என்பது மிக அவசியமான ஆயுதம். ‘நான் பாடல், எனக்குக் கவிதை முகம்’ என்றெழுதுகிறார் அனார். இப்படியான கொண்டாட்டம் ‘பிச்சி’ கவிதையில் ‘உடலைக் கொண்டாடுதல்’ என்பதாகவும் மாறுகிறதை நாம் கவனிக்கலாம். கலாச்சாரத்தின் வழி கட்டமைக்கப்பட்ட உடல் குற்ற உணர்வையே அதிகமும் பெண்களுக்கு வழங்குகிறது (எகா: தீட்டு). குற்ற உணர்விலிருந்து விடுபட சமூகம் வடிவமைத்த உடலை (socially constructed body) மீற வேண்டியிருக்கிறது. உணர்வுகளில் இருந்தும் வடிவமைக்கப்பட்ட சிறையான உடலிலிருந்தும் அவளை விடுவிக்க வேண்டுமெனில் அந்த உடலின் பெண்மையைக் கொண்டாட வேண்டியிருக்கிறது; அவ்வுடலின் ஆதிவடிவங்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. மாலதி மைத்ரியின் கவிதைகளில் ‘நீர்மை’ எனும் உயிர்ப்பான அம்சத்துடனும், தாவரப் பசுமையுடனும் உடல் தொடர்வுறுவதைப் போல அனாரின் கவிதையான பிச்சியில்(பக்.25) உடல் ‘மா கடல்’ஆகி விடுகிறது.
இத்தொகுப்பிலிருக்கிற மற்றுமொரு முக்கிய கவிஞர் ஆழியாள். ஆழியாளின் கவிதைகள் லயிப்பு மிக்கவை. அவருடைய அடையாளம் கவிதை எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. ‘கி.பி2003இல் தைகிரிஸ்’, ‘எட்ட ஒரு தோட்டம்’ ‘அடையாளம்’ போன்ற கவிதைகள் ஈழக் கவிதைப் பரப்பில் அவரது இடத்தை உறுதி செய்பவை. ஆனாலும் ஆழியாளிடம் பெண் அடையாளம் தீவிரத்துடன் வினைபுரிவதில்லை. ஒளவையின் நிலையும் பெருமளவுக்கு இவ்வாறான ஒன்றே.
பிரதிகளில் இயங்காத பெண்ணிய அடையாளத்தை இவர்கள் தமது தன்விளக்கக் குறிப்புகளில் இயங்குவதாகக் குறிக்கிறார்கள். ‘தலித்’ இதழுக்கு ஒளவை அளித்திருக்கும் செவ்வி, ஆழியாளின் துவிதம் தொகுப்பிற்கு தெ.மதுசூதனன் வழங்கியிருக்கிற முன்னுரை ஆகியவற்றில், இவர்கள் பெண்ணியம்/பெண் எழுத்து ஆகியவற்றுடன் வலிந்து இறுக்கமாய்ப் பிணைக்கப் படுகிறார்கள். இந்தப் பிணைப்பை பிரதிகளில் காண முடிந்தால் நல்லது. இப்படியான ஒரு நிலை மிகவும் பிற்போக்கானது. பயிற்சியையும், தேடலையும் கோரிநிற்கிற ஒரு எழுத்துமுறை இவர்களால் தடைப்பட்டுக் கிடக்கிறது. இப்படியானதொரு நிலையிலிருந்து இவர்கள் விடுபட்டு முன்நகர வேண்டும்.
இந்தப் பெண் கவிகளுக்கு முந்தைய காலகட்டங்களில் இயங்கிய சங்கரி, செல்வி போன்றவர்களிடம் கூட ‘கொண்டாட்டம்’ எனும் அம்சத்தை இனம்காண முடிகிறது. சங்கரியின் பின்வரும் வரிகளைக் கவனியுங்கள்;

எல்லையில்லா அண்டப் பெருவெளியில்
என்னை இழந்து
என் நாமம் கெட்டு
சதுராடிச் சுழல்வேன்
துயர் மறுப்பேன்

(பக்.87)

‘தன்னை இழந்தாள், தன்நாமம் கெட்டாள்’ என்ற பக்தி இலக்கிய வாசகங்களின் மறுதலையாய் துயர் மறுத்து இயங்குகிற, இக் கொண்டாட்டம் பின்னர் செல்வியிடம் உயிர்ப்புமிகு தன்மையுடையதாய் மாறுகிறது. பிரபஞ்சத்தை உற்பவிக்கிற ஒன்றாய் அக்கொண்டாட்டம் இயங்குவதை நாம் கவனிக்க வேண்டும்;

வானம் பொழியும், எரிமலைக் குழம்பிலே
ஆறு பாயும்
அதில் நான் நீந்துவேன்
சமவெளிகள் காடுகள் மலைகள் எங்கும்
தனித்தே சுற்றுவேன்
இனிய மாலை, எழில்மிகு காலை எல்லாம்
எனது மூச்சிலே உயிர்க்கும்

(பக்.128)

ஆணை8 நிராகரித்து ‘தனித்தே’ சுற்ற விரும்புகிற செல்வியின் வாசகங்களின் அடுத்த கட்ட இயக்கமாய் விலகிச் செல்ல வேண்டிய தேவையை பிரதீபா தில்லைநாதன் ‘எவனதும் பாதிப்பற்று எழுதும் ஆசை’ என்கிறார். தொடர்ந்து அவர் எழுதுவதைப் பாருங்கள்;

“எவளைக் கேட்டாலும்
பாரதி என்கிறாள்
சரி அப்புறம் என்றால்
இன்னொரு பாரதி
யுகக் கவியாய் முளைத்து விடுகிறான்”

(பக்.193)

இயல்பான நாளந்தப் பேச்சு வழக்கு மொழிபில் பிரதீபா தில்லைநாதன் ஏற்படுத்துகிற அதிர்வு அசாதாரணமான ஒன்று. இதுவரையிலுமான எழுத்துவெளியின் ஆண்மையத்தைச் சுட்டி அதனடியாக பெண் எழுத்தின் தேவையை சொல்கிறார்:

“எவனதும் பாதிப்பற்று
எழுதும் ஆசை
வேராய் இருக்கிறது என்னுள்”

(பக்.191)

இதேவகையான வலிமையான பெண்ணியப் பிரகடனங்களை பெண்ணியாவிடமும் (தொகுப்பில் நஜீபா) நாம் காணலாம்;

“என் பயணம் ஆரம்பித்தாயிற்று
முடிவுகளற்ற இலக்கை நோக்கி
தனித்தாயினும் பயணிப்பதே இயன்றவரை
என் சிறகுகளின் மீது நீளும்
எல்லாக் கைகளுக்கெதிராகவும்”

(பக்.152)

‘ஆண்மை’ என்பதை நிராகரித்து விடுகிற இக் கவித்துவப் பிரகடனங்களின் வலிமையான கவித்துவ அதிர்வை நாம் றஞ்சனியிடமும் மைதிலியிடமும் காண்கிறோம். றஞ்சனியின் கவிதைப் பரப்புக்குள் ஆண் தொடர்ந்து தொந்தரவுக்காளாக்கப்பட்டு நிராகரிக்கப் படுகிறான். பெண்ணியம் பேசிக்கொண்டிருக்கிற ஆண்களைக் கூட நிராகரிக்க முனைகிறது றஞ்சனியின் மூர்க்கம். பெண்ணியம் பேசும் போலிகளின் ‘பரிதாபம்’ ‘இரக்கம்’ அன்னபிற விமர்சனப் பரிவுகளைத் தூக்கியெறிந்து ‘நீதானடா முட்டாளே தனியாக இருப்பவன்’ என்று பயமுறுத்துகிறாள் றஞ்சனியின் கவிதைப் பெண். அவரது ‘உன் தனிமை’ கவிதைப் பிரதியில்(பக்.253) ஆண் வாசிப்பாளர்கள் வன்மத்துடனான நிராகரிப்பை சந்திக்க நேர்கிறது. ஆண்முதன்மையை சிதறடிப்பதற்கு இப்படியான நிராகரிப்புகள் அவசியமானவை.
பாலுறவின் தருணங்களின் உடல்களின் அரசியலைப் பிரதியாக்கம் செய்கிற பெண் எழுத்தாளர்கள் தமிழில் குறைவு. தமிழகத்தைப் பொறுத்தவரை சல்மா, சுகிர்தராணி, குட்டி ரேவதி போன்றவர்கள் தற்போது துணிகிறார்கள், புலம்பெயர்ந்து எழுதும் றஞ்சனியும், மைதிலியும் பலத்த அதிர்வுகளைத் தரும் கவிதைகளை இது தொடர்பில் எழுதியிருக்கிறார்கள்.12 (நிவேதா, கற்பகம் யசோதர போன்ற வலைப்பதிவுக் கவிகளின் வெளிப்பாடுகள் வேறொரு தளத்துக்குரியவை.)

“முத்தங்களாகி கலவியில் மயங்கி
இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி
கரைந்து போகும் அடுத்த நிமிடமே
நீ ஆணாகி விடுகிறாய்”

என்னும் றஞ்சனியின்(பக்.252) வரிகளும்:

“என் இத்தனை நாளைய
காதலும் கனிவும்
இதம்தரு மென்னுணர்வுகளும்
பொங்கியெழுந்த குறியின் முன்
ஒழுகிக் கிடக்கிறது கட்டிலின் கீழே”

என்னும் மைதிலியின்(பக்.213) வரிகளும் பாலுறவின் அரசியலைப் பேச முயற்சி செய்பவை.
மைதிலியின் ‘பொருள்’ கவிதை, ஆணுக்குரிய ஒரு பொருளெனவே ‘பெண்’ வைக்கப்பட்டிருப்பதை நாளாந்த வாழ்வின் உதாரணங்களூடாய் எடுத்தியம்புகிறது. பெண்ணை ஒரு பொருளாகப் பாவித்தே உறவு கொள்கிறதான/ஆண் இன்பம் துய்த்துக் கொள்வதான விபரிப்பு அதிர்ச்சியளிக்கிறது;

‘அவன் தனது பேனாவால்
தாள்களில் கிறுக்குவது போல,
தனக்குரிய சீப்பால்
தலையை அழுத்தி வாரிக்கொள்வது போல,
தாடியைச் சீவுகிற சவரக் கத்தியை
கவனமாகக் கையாள்வதைப் போல
எல்லாம் முடிந்து
அமைதியாய்த் தூங்குகிறான் அருகே

(பக்213)
வெளிப்பாட்டு முறைகளின் பலவீனம், அரசியலின் தீவிரமின்மை போன்றவற்றை விமர்சிக்க இடமிருப்பினும் கூட அனார், மைதிலி, றஞ்சினி, ஆழியாள், ஆகர்ஷியா, ஒளவை, சங்கரி, சிவரமணி, செல்வி, சங்கரி, அம்புலி, ஆமிரபாலி, துர்க்கா, கற்பகம் யசோதர, தான்யா, பிரதீபா தில்லைநாதன், சுமதி ரூபன், தில்லை, ரேவதி, பஹீமா ஜகான், விநோதினி என்போரின் பிரதிகளின் ‘பெண்’ என்பது இடப்படுத்தப்பட்டுள்ள நிலை உவப்பான ஒன்றுதான். இவர்களுடைய பிரதிகளின் இணைப்பில் எனக்கேதும் ஆட்சேபணைகளில்லை. இவர்களுடைய ஆகச்சிறந்த பிரதிகள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் தொகுப்பினடிப்படையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதை அ.மங்கை செய்யவில்லை; கைக்குக் கிட்டியதை எடுத்துப் போட்டிருக்கிறார்.
ஆனால் ‘பெண்’ என்பதை இடமழித்துள்ள/இடமிழக்கும்படி செய்துள்ள பிரதிகளையும்; உள்ளடக்கிப் பொதுமைப்படுத்தி ‘பெண் எழுத்து’ என்று லேபிள் ஒட்டியிருப்பதையே கண்டிக்க வேண்டியுள்ளது. கோட்பாடுகள் தொடர்பில் போதிய தெளிவும், பிரதிகளை வாசிப்பதில், அரசியலை இனம்காண்பதில் பயிற்சியும் இல்லாதவர்கள் இப்படியான முயற்சிகளைச் செய்யும் போது ஏற்படுகிற தவறுகள் பல்கலைகழக அறிவுத்துறைக்குரியவரான அ.மங்கையிடமும் இருப்பதுதான் என்னை அதிர்ச்சியூட்டுகிறது.
இதுவரை இக்கட்டுரை கவனிப்புக்குட்படுத்திய உடன்பாடான அம்சங்களை விடவும் ‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுதியில் மிகையோங்கியொலிப்பது ‘பெண் எழுத்து’ என்பதற்கு துளியளவேனும் சம்பந்தமில்லாதவை தான்.
‘பெண்ணாய் இருத்தல்’ என்பது பற்றிய பிரக்ஞையின் சுவடுகளேயில்லாத பிரதிகளைக் கூட அ.மங்கை ‘பெண் எழுத்து’ என அடையாளமிட்டு நிறுத்துகிறார். இதை ஆமோதித்து சித்ரலேகா மௌனகுருவும், வ.கீதாவும் பின்னுரை வேறு வழங்கியிருக்கிறார்கள். தொகுப்பிலுள்ள பெரும்பாலான பிரதிகள் பெண்ணிய அரசியலுக்கும் கவிதையியலுக்கும் வெளியில் நிற்பவை.
இப்பிரதியில் கடுமையாக மறுதலிக்கப் படும் பிரதியாளர்களது நிலை கவலைக்கிடமான ஒன்றுதான். அவர்களைப் புரிந்து கொள்வது வேறு; பரிதாபப் பட்டு ஏற்றுக்கொண்டு போற்றுவது வேறு. பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தால் நாம் எங்குமே நகர முடியாது. பரிதாபம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு இலகுவான உணர்ச்சி மற்றும் கேவலமான தப்பித்தல். எட்வர்ட் செய்த், நோம் ஸொம்ஸ்கி ஆகியோர் சொல்கிற அறிவுஜீவிகளுக்கான பொறுப்பிலிருந்து வழுகியோட விரும்புகிறவர்கள் சொல்கிற சப்பைக்கட்டு நியாயங்கள் இங்கு செல்லுபடியற்றவை. பிரச்சனை; என்னைக் கட்டியிருக்கிற இந்தக் கட்டுக்களையெல்லாம் அறுத்தெறிய எந்தக் கத்தி உதவி செய்யும் என்பதைப் பற்றியது… உதவி செய்யாத ஆயுதங்களைக் கீழே போட முன்னர், ‘அவற்றை நிராகரிப்பதே வன்முறையல்லவா?’ ‘இது அறிவின் வன்முறை’ என்னும் அதிமேதாவித்தனமான ஆன்மவிசாரங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு என் கைகள் விடுபட்டாக வேண்டும். அதன் பின் தான் மற்றதெல்லாம். நான் பலதையும் நிராகரித்தே எனக்கான ஒன்றைத் தேர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது! என் மீது திணிக்கப்படும் இவற்றை ஒதுக்க நான் வேறு என்னதான் செய்ய வேண்டும்?
எமது பரிதாபங்கள், நிராகரிப்பின் வலி பற்றிய விசாரங்கள் எல்லாவற்றையும் அப்பால் அவைத்துவிட்டு இந்த விவகாரத்தை அணுகலாம்.
பிறப்பால் ‘பெண்’ என்ற அடையாளத்துடன் இருக்கிறவர்கள், பிரதியாக்க வினைக்களத்தினுள் நுழையும் போது அக்களம் ஆண்மொழியில் ஆனதாய் இருப்பதைக் கண்டு திணற நேர்கிறது. சமூக மதிப்பீட்டிபடி ‘பிரதியாக்கம்’ என்பது ஆணுக்குரியதாய் மட்டுமே வைக்கப் பட்டுள்ளது. தங்களது பிரதியாக்கத்தை நிகழ்த்த வேண்டி, பெண்கள் தமது அடையாளத்தை விட்டுக் கொடுக்கிறார்கள். அவர்களது உயிரியல் அடையாளம் ‘பெண்’ என்பதாகவே அமைகிற அதே நேரம் பிரதியாக்கத் தன்நிலையாக ‘ஆண்’ என்பதமைகிறது. இங்கு விபரிக்கப் படும் இச்சிக்கற்பாடு ராதிகா குமாரஸ்வாமி, ஸரளா இம்மனுவல், நிலோஃபர் டி மெல் போன்றவர்கள் பெண் போராளிகள் தொடர்பில் முன்வைத்த முக்கிய அவதானிப்பான ‘Emancipation of the female cadre in the Nationalist Movement’9 என்பதுடன் தொடர்புடைய ஒன்று. ‘போராட வேண்டும்’ என்றால் ஆண் தன்மைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதைப் போலவே (மறுவிளைவு: பெண்மையை இழத்தல்), எழுதவேண்டும் என்றால் ஆண் அடையாளத்தைப் பகிர வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. சிகரெட் பிடிப்பது போன்ற ‘ஆண்’ பழக்கவழக்கங்களை பெண்கள் நகலெடுப்பதன் பின்னாலிருக்கிற தாழ்வுச்சிக்கல்சார்ந்த உளவியல் உளைச்சல்களை இங்கு இணைத்து வாசிப்புச் செய்ய வேண்டும். உடல்மொழியில் ஆண்தன்மைகளை ஏற்படுத்திக் கொள்கிறதற்கும், பெண்பிரதியாளர்களின் ‘பிரதி முன்வைப்பு / வெளிப்பாட்டிற்கும்’ இடையே உள்ள ஒப்புமைகள் சுவாரஸ்யமானவை.
‘பெயல் மணக்கும் பொழுது’ தொகுப்பில் இருந்து பின்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்.

  • பக்.34-37இல் உள்ள ஆதிராவின் கவிதைகளில் ‘பெண் தன்நிலை’ இயக்கமுறவில்லை. கவிதைசொல்லி கவிதைக்குள் தன்னை ஓர் ஆணாகவே அறிவிக்கிறார். உதாரணம் : ‘நான் மனுசனாய் மிருகமாய்’ (மனுசியாய் என்றிருந்திருக்கலாம்)
  • பக் 78இல் உள்ள அ.காந்தாவின் கவிதையில் ‘மகன்கள்’தான் பாடப்படுகிறார்கள். மகனை இழத்தலின் துயரம் புரிந்து கொள்ளப் படக் கூடியதுதான்.. ஆனால் மகள்களை இழத்தல் பற்றிக் கவலைப்பட யார் தான் இருக்கிறார்கள்?
  • பக் 90இல் தே.சங்கீதா என்பவர் தனது அடையாளமாய் ஆண் என்பதையே பவனை செய்கிறார்: ‘இன்னும் உரிமைப்பதிவு செய்யப் படாத மனிதனாக நான்’
  • ஆணைப் போலச் செய்தல் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்தொகுதியில் இருப்பவர் மைத்ரேயி. பக்.208இல் பிரசுரமாகியுள்ள ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ கவிதை, ஆண் அடையாளத்தை மட்டுமன்றி அதற்கியைவான பொடியன்தரவழி நண்பர்கள், குழப்படிகள், மாலைநேரங்கள் என ஆண்மைக்கான புழங்குவெளிகளையும் புனைகிறது.
  • கிருஷாந்தி ரட்ணராஜா(பக்78-81), சத்தியா(பக்.93), சந்திரவதனா ஷா(பக்.97), சமர்விழி(பக்.99), சிரஞ்சீவி(பக்.108), தமிழவள்(பக்.131), தூயவள்(பக்.143), நவஜோதி ஜோகரட்ணம்(ப.144), நாதினி(பக்.155), ஜெ.நிரோசா(பக்.160), மீரா பாலகணேசன்(பக்.205), யாழினி(பக்.217), ஜமுனா(பக்.254) என நீண்டுகொண்டே செல்லும் பட்டியலில் உள்ள பிரதியாளர்களின் கவிதைகளில் மருந்திற்கேனும் பால் அடையாளம், பெண்ணாயிருத்தல் என்பவை சிக்கற்படுத்தப் படவில்லை. பெண்மை என்பதன் இடமழிக்கப்பட்டுள்ள பிரதிகளெனவே இவற்றைக் கொள்ள நேர்கிறது.
  • ஆண்-அடையாளத்தைப் போலச் செய்கிற/பாவனை செய்வது, ஆணாக உணர நேர்வதை வெளிப்படுத்துவது போன்ற பால்ரீதியான சிக்கற்பாடுகள் எதுவும் இப்பெண்கவிகளிடம் இருப்பதாய் எந்தத் தகவலும் இல்லை. மாற்றுப் பாலியல்பை (ஆணாக உணர நேர்வது) பாடுகிற கவிதைகள் என்று இவற்றைக் கொண்டாலும் கூட, இத் தொகுப்பில் உள்ளடக்கப்படுவதற்கான நியாயங்களைத் தருவதாக அது இராது.
    ஆணாக உணர நேர்ந்து பௌதீக ரீதியில் பெண்ணாக இருக்கிற பெண்கள், ஆண்தன்மைகளுடன் எழுதுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனைகளுமில்லை. அது அவர்களுடைய உரிமை. ஆண் அடையாளத்துடன் தமது பிரதிக்குள் இயங்குவது இப்பெண்களுடைய பாலியல்பின் தேர்வு சார்ந்த உரிமைதான் என்கிற போதிலும் இப்படியான பிரதிகளுக்கு ‘பெண் எழுத்து’ எனும் தகுதியைக் கோருகிறபோதே சிக்கல் எழுகிறது.
    இந்த அபத்தமான நிலை மிகவும் பிற்போக்கானது. Recognition of difference, Dichotomy எனும் ஆரம்பநிலைகளைக் கூடத் தாண்ட முடியாத பிரதிகளை ‘பெண் எழுத்து’ என்று அடையாளப்படுத்துவதை என்னவென்று சொல்வது? இதைச் செய்திருப்பவர்கள் பேராசிரியர்கள், ஆங்கிலத்தில் வாசிக்கிறவர்கள், தமிழ் அறிவுஜீவித்தளத்துக்குரியவர்கள் என்றெல்லாம் அறியநேர்கிற போது எழுகிற வியப்பை அடக்க முடியவில்லை.
    பிரதிக்குள் இடப்படுத்தப்பட்ட அடையாளத்தைக் கவனிக்காமல், பிரதியாளரின் மிகவும் பௌதீகமான உயிரியல் அடையாளத்தை முதன்மைப்படுத்திய முட்டாள்த்தனம் இத் தொகுப்பாக்கத்துடன் சம்பந்தப் பட்ட அ.மங்கை, வ.கீதா, சித்ரலேகா மௌனகுரு, வ.ஐ.ச.ஜெயபாலன், ஐங்கரநேசன், தெ.மதுசூதனன் ஆகியோரை உள்ளடக்கிற அறிவுசீவிகளில் யாருக்குமே உறைக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. பெண்ணியம், பிரதிக்குள் இயங்கும் அடையாளம், அடையாளங்களைக் கடத்தல், பிரதிக்குள் பிரதியாளரின் வகிபாகம் தொடர்பில் இந்த so called அறிவுஜீவிகளின் புரிதல் இவ்வளவுதானா?
    ‘தொகுப்புப் பணி சிரத்தையாக மேற்கொள்ளப் பட வேண்டிய ஆய்வுத்துறை’ என்று இதர தொகுப்பாளர்களுக்கு அறிவுரை சொல்கிற அ.மங்கையின் தொகுப்பாக்கத்தின் அடிப்படை எதுவென்றே எனக்கு அறியமுடியவில்லை. பெண்கள் உள்ளடங்கலாக விளிம்புகளால் எழுதப்படுகிற ஒவ்வொன்றுமே வெளிப்பாடுகள் என்ற அளவில் முக்கியமானவை என்பதை அறிவோம். மையத்துக்கெதிரான நுண்மையான எதிர்ப்புகளை அவை உட்பொதிபிரதிகளாய்க் கொண்டிருப்பது வழக்கம். பெண்களின் கவிதைகள் மட்டுமல்ல மரக்கறிக் கணக்குகள், எம்ப்ரொய்டரி டிசைன்கள், சமையல் குறிப்புகள் கூட முக்கியமானவையே. Personal is the political என்பதை அடிப்படையாய் கொள்கிற feminist ethnographyயில் இப்படியான துண்டுகள் அனைத்துமே ஆவணங்களாய் மதிக்கப் படுவதுண்டு.
    பெண்களால் எழுதப்படும் எதையும் ‘பெண் இலக்கியமாகவே’ கொள்ள வேண்டும் என்று ஒருவர் கூறுவாராகில், ‘Hit me baby one more time’ / ‘I’m a slave for you’ என்றெல்லாம் பாடல் எழுதுகிற ப்ரிற்னி ஸ்பியர்ஸை பெண்ணிலக்கியச் செயற்பாட்டாளராக, பெண்ணெழுத்து என்பதை சாத்தியமாக்கியவாராய்க் கொள்ள நேரிடும். “என்னை இன்னொருமுறை ***கொள். நான் உனக்கு அடிமை” என்றெல்லாம் ஆணை நோக்கிய விழைவைப் பாடுகிற பிரதிக்குப் பெயர் ‘பெண் எழுத்து’?
    இத்தகைய வேடிக்கையான போக்கு 70களிலேயே கண்டிக்கப்பட்ட ஒன்று. மேற்கில் இடம்பெறுகிற விவாதங்களில் இந்தப் புரிதல் எப்போதோ எட்டப்பட்டுவிட்டது. Helene Cixous சொல்வதைக் கவனியுங்கள்: …they do someone else’s-man’s-writing and in their innocence sustain it and give it voice, and end up producing that’s in effect masculine… to be signed with a women’s name doesn’t necessarily make a piece of writing feminine.10
    இப்படியான வெளிப்பாடுகளைத் தொகுக்க வேண்டிய தேவை உள்ளது தான்; ஆனால் அதற்கென்று வேறு பெயர், வேறு இயங்கு தளம் உண்டு - பெண் எழுத்து என்பதையும் ஆவணங்களையும் போட்டுக் குழப்பத் தேவையில்லை. குறித்த ஆவணங்கள் தம்மளவில் தவிர்க்கப்பட முடியாதவை, பெண் எழுத்து என்று அடையாளப் படுத்தி உயர்த்த வேண்டிய தேவையெல்லாம் ஒன்றுமில்லை. ‘பெண்களால் எழுதப்பட்ட’ எல்லாவற்றையும் அ.மங்கை தொகுக்க விரும்பியிருந்தால் நிறையவே Documentation Projects அதற்கென்று உண்டு. அம்பை இயங்குகிற ஸ்பரோ அமைப்பு அப்படியான ஒன்று. இந்த வேறுபாடுகள் பற்றிய அறிதலற்று, ‘பெண் எழுத்து’ ‘ஈழம்’ போன்ற லேபிள்களைத் தாம் விரும்பியபடி உபயோகிப்பது கலாச்சாரத் திருவுரு(Cultural Icons) ஆகத் தம்மைக் கட்டமைத்துக் கொள்கிற விருப்பினடியாக அல்லவா எழுகிறது?
    இத் தொகுப்பில் பிரதியாளர்கள் பற்றிய குறிப்புகள் எதுவுமே இல்லை. தொகுப்புகளில் உள்ளடக்கப்பட்டு இருக்கவேண்டிய முக்கிய விடயம் அது. பிரதியாளரின் இதர பிரதிகள், அவற்றின் தன்மைகள், இயங்குகளம் பற்றிய குறிப்புகளை அது கொண்டிருக்க வேண்டும். விபரங்களை எடுப்பது மிகவும் கடினம் என்று சொல்வது எல்லாம் மிகவும் அலட்சியமான பதில். சரிநிகர் குழு, புலம்பெயர்ந்தவர்களில் பலரையெல்லாம் இப்போது மின் -அஞ்சல் மூலம் இலகுவில் தொடர்பு கொண்டுவிட முடியும். விவரங்களைத் திரட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் அல்ல, அர்ப்பணிப்பு இருந்திருந்தால் செய்திருக்கலாம். இதற்கு மாற்று ஏற்பாடாக அ.மங்கை பிரதி பிரசுரமாகியிருந்த இதழ் விபரத்தை வழங்குகிறார். பிரதியாளரின் இயங்குகளம், சார்புத்தன்மைகளை குறித்த பிரதி வெளிவந்த இதழ் பற்றிய விபரம் வழங்கி விடக் கூடும் என எதிர்பார்க்கிறார். இதிலிருந்தே அ.மங்கையின் ஈழநிலவரங்கள்; தொடர்பான புரிதல்கள் எமக்குப் புரிந்து போகிறது. கவிதையொன்றை ‘வெளிச்சம்’ இதழில் இருந்து எடுக்கப்பட்டதாய்த் தெரிவிக்கையில் ‘போராளி/போராட்டச் சாய்வுடையவர்’ எனும் புரிதல் ஏற்படும் என்று சொல்வது கூட பல நேரங்களில் பொருத்தமற்றது; ‘வெளிச்ச’த்தின் சமீபத்தைய இதழில் முஸ்லிம் தேசக் கவியும் மாற்றுக்கருத்துடையவருமான இளைய அப்துல்லா எழுதியிருக்கிறார்! இதைக்கூட ‘சில விதிவிலக்குகள்’ எனும் அடிப்படையில் விளங்கிக் கொள்ளலாம். ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதைகள்’ போன்ற எந்த அரசியல் சாய்வுமற்ற சாம்பார்த் தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டதான தகவல், பிரதியாளர் பற்றிய எதை உங்களுக்கு சொல்கிறது? ஊடறு இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாய் சொல்கையில் ஊடறுவைத் தொடர்ந்து வாசிக்கிற, விவாதங்களில் பங்கேற்றிருக்கிற எனக்கே பலவித குழப்பங்கள் வருகின்றன என்றால் தமிழக வாசிப்பாளருக்கு? அனாரின் அரசியலை, சார்புநிலையை, அவரது கவிதை ஊடறுவிலிருந்து எடுக்கப்பட்டது என்பதான தகவல் எப்படிச் சொல்லி நிற்கிறது? (அத்துடன் அடுத்த முரண், அனாரின் ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதை வீரகேசரியில்-உயிர் எழுத்து - வெளிவந்து ஊடறுவில் மறுபிரசுரமாயிருந்தது.) தொகுப்பில் எடுத்துப் போடுகையில், கவிதை அச்சாகியிருக்கிற தாளில் உள்ள பிரசுர களம் பற்றிய தகவலையும் இணைப்பது ஒன்றும் கடினமான வேலையில்லை. அ.மங்கை அதையே ஒரு முக்கியமான விடயமாக முன்னுரையில் சொல்வதன் மூலம் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்?11
    இதழ் பற்றிய விபரம் இணைப்பதன் பின்னிருக்கிற எடுகோள்: ஒவ்வொரு வெளியீட்டுக்கும் ஸ்திரமானதும் வெளிப்படையானதுமான அரசியல் உண்டு; அதில் பங்களிப்புச் செய்கிற படைப்பாளிகள் எல்லாருமே அதன் அரசியலை ஏற்றுக் கொண்டேதான் எழுதினார்கள். எம்.பௌசரின் அரசியலை ஏற்றுக் கொண்டா மூன்றாவது மனிதனில் எழுதினீர்கள் என்று தமிழ்த்தேசப் பிரதியாளர்களை விசாரிக்க வேண்டும் போலிருக்கிறது!
    அடுத்து பிரதியாளர்களின் உரிமை, உள்ளடக்கப்படுவது தொடர்பிலான ஏற்புமறுப்புகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எடுத்து இணைத்திருப்பதை கண்டிக்க வேண்டியிருக்கிறது. இதிலும் கூட சில பிரதியாளர்களுக்குச் செய்யப்பட்டிருக்கிற அநியாயத்தைப் பாருங்கள்:

  • ஆழியாளின் முதலாவது தொகுப்பின் பெயர் ‘உரக்கப் பேசு’ (ப.42,44) என்றிருக்கிறது. ஆனால், அத்தொகுதியின் பெயர் ‘உரத்துப் பேச..’
  • பெண்ணியாவின் கவிதைப் பிரதிகளுக்குள் இயங்காத முஸ்லிம் அடையாளத்தைப் போலவே ‘நஜிபா’ எனும் அவரது இயற்பெயரும் பிரதிகளில் பயன்படுத்தப் படாத ஒன்று. நஜிபா ரூபி எனும் பெயர், பிரதியாளர் பற்றிய விபரக் குறிப்புகளிலொன்றாய் ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ பிரதியில் உள்ளது. அ.மங்கை பக்.150-151இல் பெண்ணியா எனும் பெயரைத் தேவைகளேதுமின்றி ‘நஜீபா’வாக மாற்றியிருக்கிறார். ‘நஜீபா’ என்பது கூடத் தவறு. அவரது இயற்பெயர் நஜிபா ரூபி.
  • ‘தொகுப்புப் பணி என்பது சிரத்தையாக மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுத் துறை’ என்று கூறுகிற அ.மங்கை விட்டிருக்கும் அச்சுப் பிழைகளில் சில:

  • பக்190இல் ‘பிரதீபா தில்லைநாதன்’ எனும் பெயர் பிரதிபா தில்லைநாதன் என்றிருக்கிறது.
  • ப.139இல் உள்ள பிரதிக்குரியவரின் பெயர் ‘தானியா’ அல்ல தான்யா.
  • பக்.145இல் பிரசுரமாகியுள்ள கவிதைக்குரியவரின் பெயர் நவஜோதி ஜோக்ரட்ணம் அல்ல நவஜோதி ஜோகரட்ணம்
  • வெளியீட்டு, ஒழுங்கமைப்பு, தொகுப்பு வசதிகள் அதிகமுள்ள தமிழ்நாட்டில் இருந்து, நிறையவே துறைசார்ந்த அறிவுசீவிகள், பிரதியாளர்களின் பங்களிப்புடன் வெளிவருகிற ஒரு பிரதியில் இத்தனை தவறுகள். ‘பணிச்சிரமம்’ பற்றிப் பகிடிவிடுபவர்கள், மூடப்பட்ட நெருக்கடியான யாழ்ப்பாணச் சூழலில் இருந்து வெளியிடப்பட்ட அ.யேசுராசாவின் ‘குறிப்பேட்டிலிருந்து’ நூலைப் பார்க்க வேண்டும். மிகவும் கடினமான சூழலில் அச்சுக் கோர்க்கப்பட்டு பதிப்பிக்கப் பட்ட அந்த நூலில் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் அச்சுப்பிழை வருகிறது. நேர்த்தியான நூலாக்கம் இங்கேயே சாத்தியமென்றால், தமிழ்நாட்டில்? விற்பனை மனமும், அக்கறையீனமும் அல்லவா இதன்பின்னால் ஒளிந்திருக்கிறது? (விற்பனை என்பது பணம் மட்டுமல்ல) இந்த அலட்சிய மனோபாவம் தமிழ்நாட்டுக்காரர்களிடம் ஈழப் பிரதிகள் தொடர்பில் தொடர்ந்தும் இருந்து வருகிற ஒன்றுதான். ஈழத்துடன் உயர்வான தொடர்புகளைப் பேணுபவராய் சொல்லப்படும் அ.மங்கையின் அக்கறை கூட இப்படியாகத் தானே இருக்கிறது?
    இப்படியான தொகுப்பு முயற்சிகளின் பின்னிருப்பதாகச் சொல்லப்படும் நல்லெண்ணங்களை நான் சந்தேகப்படுத்த விரும்புகிறேன். அர்ப்பணிப்புடனும், ஆய்வுமனதுடனும் செய்யப்பட வேண்டிய தொகுப்பு முயற்சிகளெல்லாம் கேவலமான வணிக நோக்கிலான குப்பைகளாய் வந்துகொண்டிருப்பதை சமீப காலங்களில் காண முடிகிறது. இதைத்தான் அ.மங்கை ‘தமிழ்நாட்டில் இது பெரும் தொகுப்புகளின் காலம்’ என்று குதூகலிக்கிறார். திலகவதி தொகுத்து அம்ருதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிற ‘கோடை உமிழும் குரல்’ தொகுப்பு, ஊடறுவின் ‘மை’, அ.மங்கை தொகுத்திருக்கும் ‘பெயல் மணக்கும் பொழுது’: இந்த மூன்றும் கடந்த வாரங்களில் என் வாசிப்பிலிருந்தவை. கோடை உமிழும் குரல் தொகுப்பை அதிலுள்ள தலித் ஆர்வலருக்குச் செய்யப்பட்ட பெரும் துரோகமாகவே காண முடிகிறது. சுந்தரராமசாமிக்கு அத் தொகுப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது; அதிலிருக்கிற பிரதியாளர்கள் பலரும் சுந்தர ராமசாமியின் அரசியலுடன் நேரடியாக முரண்படுகிறவர்கள். இந்த மூன்றையும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் விபரித்த ‘அடையாளங்களை நுகரும் வாசிப்புச் சந்தை’ என்பதுடன் மாத்திரமே தொடர்வுறுத்தி அணுக முடிகிறது.
    கடந்த காலத்தில் இப்படியான அருவருப்பான செயற்பாடுகளெல்லாம் உடனுக்குடன் கண்டிக்கப்பட்டிருப்பதையும், அவையெல்லாவற்றையும் அலட்சியப்படுத்தி விட்டே தொகுப்பு முயற்சிகள் தொடர்வதையும் நாம் கவனிக்க வேண்டும். ‘புலம்பெயர்ந்தோர் கவிதைகள்’ தொகுப்பை நிழல்கள் திருநாவுக்கரசு வெளியிட்ட போது கற்சுறாவிடமிருந்து கிடைத்த மறுவினை13 நம் கவனிப்புக்குரியது. செல்வா கனகநாயகம் சேரனின் உதவியோடு தொகுத்த Lutesong and Lament தொகுப்பு முயற்சியை சுயமைதுனம், சுயதணிக்கை என்று விமர்சித்த நட்சத்திரன் செவ்விந்தியன்14 இன்னுமொரு உதாரணம். இப்படியான விமர்சனங்களில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத வியாபார புத்தி உடையவர்களாகவே தொகுப்பாளர்கள் இருந்து வருவதையும், நிலமை மேலும் மேலும் மோசமடைந்து செல்வதையுமே உணர முடிகிறது. தொகுதி பற்றிய விமர்சனங்கள் பிரச்சனைக்குட்படுத்துகிற விடயங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டே தொகுப்பாளர்களும், வெளியீட்டு நிறுவனங்களும் செயற்படவேண்டும் என்கிற அறம் சார்ந்த கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவதே அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாய் இருக்கிறது.

    ÒÒ
    அடிக்குறிப்புகள்
    1. தொல் தமிழின் பெண் ஆளுமைகளான ஒளவை, புனிதவதி போன்ற பிரதியாளர்கள் ‘பெண்மை’ என்பதை அப்பால் ஒதுக்கி வைத்து விட்டே பிரதியாக்க வினை புரிய முடிந்திருக்கிறது. ஒளவை கிழவியாகிய பின்தான் பிரதியாளராக முடிந்தது. புனிதவதியோ (காரைக்காலம்மை) பேயென உருவகிக்கப் பட்டாள். வெள்ளிவீதியாரும் ஆண்டாளும் மிக மெல்லிய விதிவிலக்குகள். இதிலும் ஆண்டாள் பக்திமரபோடியைந்தவளாக இருப்பதால்(புனையப்பட்டிருப்பதால்?) மட்டுமே அவளுடைய பெண்மையின் பிரதிவழி இருப்பு சாத்தியமாயுள்ளது. ஒளவையின் பிரதிகளில் ‘பெண் மறுப்பு’ அரசியல் நுழைக்கப் படுவதும் கவனிப்புக்குரியது (எ.கா- ‘தையல் சொற் கேளேல்’, ‘கற்பெனப் படுவது சொற்திறம்பாமை’, ‘மைவிழியார் மனையகல நட’). பெண் ஒதுக்கி வைக்கப்பட்ட மிகச் சமீப உதாரணம் ‘ஈழத்தின் முக்கிய கவிஞர்கள் 11 பேர்’(காலச்சுவடு) தொகுப்பில் யாரும் பெண்களில்லை என்பது. தொகுப்பில் உள்ளடக்கப்படுவதற்கான ‘தகுதி’களுடன் எந்தப் பெண்களும் இயங்கிக் கொண்டிருக்கவில்லைதான் என்றாலும் கூட அப்படியான ‘இயங்குவெளி மறுப்பை’ உருவாக்கியவர்கள் யார்?
    2. woman must write her self: must write about women and bring women to writing, from which they have been driven away as violently as from their bodies… Woman must put herself into the text – as into the world and history – by her own movement. – Helene Cixous, in The Laugh of the Medusa ‘Ecriture Feminine purports to subvert the patriarchal order’.
    3. “patriarchal language created and maintained by the contemporary masculine order cannot express women” Helene Cixous
    4. மேற்கில் Women Studies கற்கைகளின் காரணத்தால் உருவான College Market[இங்கு ‘நாடகமும் அரங்கியலும்’ பாடநெறிக்குக் கிடைத்ததைப் போல] Consumer Feminism என்னும் போக்கை உருவாக்கி விட்டிருக்கிறது (Market oriented strategies in the tertiary education sector). மேலும் லெஸ்பியன் பிரதிகள் பல ஆண் நுகர்வுக்கானவையாக மாறிப்போய்விட்டிருக்கிற சூழல் அது. (male voyeurism) இந்த வணிகமயமாதல் மறுவிதமாகப் பார்த்தால் ‘பரவலடைதல்’ எனும் ஒரு நன்மையைக் கொண்டிருந்தாலும் கூட there has been a price to pay in terms of depoliticization and exclusion.
    5. ….it is not anatomical sex that determines anything here. It is on the contrary, history… the cultural schema and the way the individual negotiates with these schema … Let us try as quickly as possible to abandon these binary distinctions which never make sense. – Helen Cixous
    பாலியல்பு மற்றும் பால் அடையாளத்தில் ஹெலேன் சிசு, மொனிக் வித்தீழ், லூஸ் இரிகரே போன்றவர்கள் பிராய்டிய, லக்கானிய பால்வேறுபாட்டை மறுதலித்ததை இங்கு நினைவு கூர்வோம். சிசு ஒருபடி மேலே சென்று ஜேம்ஸ் ஜொய்ஸ், காஃப்கா, க்ளெய்ஸ்ற், ழெனெ, ஷேக்ஸ்பியர் போன்ற ஆண் எழுத்தாளர்கள் பெண் எழுத்தை சாத்தியமாக்கியவர்கள் என்றுரைப்பதில் இருந்தாவது இவர்கள் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். லிங்கமையவாதமுடைய பால் வேறுபாடுகளையே (biological differences – Phalocentric Sexual difference) தமிழின் விமர்சகர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள் என்பது அவர்களது பிரதிகளை வாசிப்புக்குட்படுத்துகையில் புரி