‘இப்போதெல்லாம் / உன் வாயிலடைக்க / கைகளில் கொண்டு திரிகிறேன் / தூமைத் துணிகளையும் / தூமையில் தோய்ந்த
இக்கவிதைகளையும்.’ என்று எழுதும் மதிவண்ணன் அருந்ததியர் குலத்தை சேர்ந்தவர். தலித் கவிஞர்களுள் தனக்கான அழகியலுடன், தனித்துவத்துடன் தடைகளற்று எழுதும் மதிவண்ணன் நவீனத்துவ கற்பிதங்களை சிதறடிக்கும் எதிர்-அழகியலை வலிமையாக கவிதைகளில் இயக்கமுறச் செய்பவர். நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற தமிழ் இன மான உணர்வுகளையும் நாகரீகங்களையும் இற்று விழச் செய்யும் முயற்சிகளே இக்கவிதைகள். ‘வார்த்தைகளுக்குள் கொடுக்குகளை ஒளித்து வைக்கும் வித்தையை’ கற்றுக்கொள்ள மதிவண்ணனைக் கற்க வேண்டும்.
இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன: ‘நெரிந்து…’ வெளியீடு - கருப்பு பிரதிகள். ‘நமக்கிடையிலான தொலைவு’ வெளியீடு - கருப்பு பிரதிகள்.
பின்வரும் கவிதைகள் ரோஸாவசந்த்தின் வலைப்பதிவிலிருந்து பெறப்பட்டவை.

***
1.
ஆகப்போவதொன்றுமில்லை
எல்லா எத்தனமும் வீணேயெனினும்
மூளையன்றோடு பிணைத்துன்
கழுத்தை சுற்றி கிடக்கும் வலிய சங்கிலியின்
இரும்புக் கண்ணிகளை
கடித்துக் கொண்டாவது இரு.
2.
ஊர்த்தெரு நடுவில் நொத்தப்பட்ட
உள், வெளி வலிமரக்க ஊற்றிக்கொண்ட
தகப்பனின் போதைப் புலம்பலில்
யுகங்களின் வலி வெளிப்படுகையில்
கையாலாகாமற் குமையும் இம்முகத்தின் உள்ளீடும்,
விழிமலர் விரிப்பில் வீழ்ந்து
கொஞ்சு மொழிப் புதிர்ப் பொருளில் கிறங்கிக்
கிட்டே போகுங்கால்,
பாட்டன் தூக்கிய பீவாளியிலிருந்தொன்று
புறப்பட்டு வந்து பொறிகலங்கச் சென்னியிலறைய
நொண்டி புறமோடும்
உணர்வு நடுங்கலின் அதிர்வெண்ணும்
அறிவாயா?
என்னை எழுதும் உரிமை நாட்ட
முண்டாத் தட்டும் நீ.
சொல்ல பதிலில்லையெனில்,
தூரமோடிப் போ
எல்லாத்தையும் பொத்திகொண்டு.
3.
தனது அத்தியவசியங்களாலான
மூட்டையைக் கவனமாய் இடுக்கிகொண்டு
தகிக்கும் வெயிலை உணராதவனாய்
நீளமான அந்த கடைவீதியைச்
சளைக்காமல் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.
கற்கவசம் கட்டிய மனித முகங்களுக்கிடையில்
காற்றின் திசையிலும் பெருக்கதெரியாமல்
மல்லுக்கட்டி கொண்டேயிருக்கிறான்
கடைவீதி வேறு இன்னும் நீளமாயிருக்கிறது.
4.
ஆடை உறுத்தாத நிர்வாணங்கொண்டு
ஒரு பூ மாதிரி என் மீது கவிந்து
ஒவ்வொரு மயிர்காலிலும்
என்னை மீட்டிகொண்டிருக்கிறாய்.
நான் நாறும் சட்டையுடனவன்
திடுமென நுழைந்து தன் கர்ணகடூரக் குரலெழுப்ப
பதறியடித்தெழ வேண்டியதாயிற்று நாம்.
எழுந்து அவனை எதிர்கொள்ளத் தயாராகையில்
நீயுமுன்னை அவசரமாய் பொதிந்து கொண்டோடிப் போனாய்
இதோ!
வந்தவனுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத்
துளித்துளியாய் மௌனப் பூத் தெளித்து
இந்த படுக்கையை தயார் செய்கிறேன் திரும்பவும்.
5.
அழுக்கேறிய அரைக்கால் சட்டையுடன்
மலக்குழி சுத்தபடுத்தியவனின் பேரன்
குழாய் மாட்டிகொண்டு
வீதியில் நடப்பது பொறுக்காது
அவன் ஏவி விட்ட நாயிடமும்
நாய் ஏவி விட்ட அவனிடமும்
சிக்கிவிடாது தப்பியோடிய கிலியை
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
திணைகளை தூக்கிக் கொணரவில்லை யென
ரொம்பத்தான் சடைத்து கொள்கிறாய்.
6.
எல்லாமும் சாத்தியம் தானெனினும்
எதையும் செய்யபோவதில்லை நான்
என்னை கீழாகவும் உன்னை மேலாகவும் காட்ட
எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமில்லாது
நீயணிந்து கொண்ட உயர்முகத்தையும்
கிழித்து கொண்டிருப்பது தவிர.
7.
எவருமறியா உன் ஜட்டிக்கிழிசலை போல்
நீ மட்டுமே அறிந்தவை
உன் மனசின் கசடுகள்.
சொல்ல துணிவுண்டா உனக்கு?
உன் அந்தரங்களில்
நீ ஒளித்து வைத்திருக்கும் எல்லாமும்
வேப்பமரத்தடி மணலில்
சூரியனுக்கு தெரியாமல்
நீ புதைத்து வைத்தமுதலாய் விழுந்த சிங்கப்பல்லை போல
ஒரு பாவமுமறியாதவையே என.
8.
எத்தனையாவது முகம் இது?
சண்டாளனென என்னை வரையறுத்த
மனுவின் அழுகல் குறியை ஊம்பி
வல்லமை பெற்ற ஷத்திரியக் கைவாளின்
நினைப்பில் கருகிய முகங்களே அதிகமும்.
இருசக்கர வாகனமொன்றின் பின்னிருக்கையில்
முயக்கத்தில் தோன்றியகணம் கருகிய
இம் முகம் போலும் சில முகங்கள்.
ஒவ்வொரு முகம் கருகும்போதும்
மூர்சையாகிச் செத்தவள் போல் விழுபவள்
புதிது புதிதாய் முளைக்கும் முகங்களுடன்
எழுந்து என்னில் தழும்பி கொண்டிருக்கிறாள்.
முகமும் உருவமுமற்ற என்னுள் உறவாட
உயிர் ஊறிக் கொண்டிருக்கிறது என்னிலிருந்து.
10.
பொருட்படுத்தாது நீ போன கணத்திலிருந்து
புழுத்து வீச்சமெடுத்துக் கொண்டிருக்கிறது.
நாசியைப் பிடித்துக் கொண்டு
வசைகளுடன் கடந்து போகிறவர்களை
சட்டை செய்யாது ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேறொன்றும் செய்திடலாகாது.
உனக்கு படையலிடவென்றே
கடைந்தெடுத்த அமுதமிது.
11.
அ.
என்னை நீ பார்பதென்பது
எப்போதும் என் பின்புறத்தைப்
பார்பதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறாய்.
நீ மொட்டையாக்கிய இவ்வாலை
குலைக்கும் வேகத்தை,
ஊம் ஊமென குழறும் குழறலை,
உன் காலை மோந்து, நக்கி சுற்றிச் சுற்றி
வருமென் கால்களில் மிதியுண்டு கிடக்கும் நானை,
நீ வீசியெறிவதை நக்கி தின்னுமென் வேகம்
உன் திருப்திக்கு உத்திரவாதமளிப்பதாயிருப்பதை,
எல்லாவற்றையும்.
நக்கி தின்னும் வேளையில் ஓங்கி வயிற்றிலுதைபட்டு
ஊளையிட்டு இறைஞ்சி நிற்குமென் பசிபார்வையில்,
என் மழுங்கல்தனத்தை உறுதி செய்து
கடந்து போவதுன் வழக்கம்.
ஆ.
உன்னை நான் பார்பதென்பது
எப்போதும் எச்சில் ஒழுகும் உன் வாயை
பார்பதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறேன்.
எல்லாவற்றையும் குரோதமுடன் நோக்கும்
உன் நிலையற்ற பார்வையை,
அருவத்தை குதறும் உன் குரைப்பை,
எதிர்படுமெல்லாவற்றிலும் மோந்து பார்த்துத்
தலைக்கேறித் ததும்பும் வெறியைச்
சேர்பிக்கத் தோதான உயிர் தேடி
ஓட்டமும் நடையுமாய்த் தொடரும் உன் அலைச்சலை,
அனைத்தையும்.
பாதுகாப்பான தொலைவு கடந்து வந்தபின்
உன்னை திரும்பி பார்பதென் வழக்கம்
பேச்சு மூச்சற்றுத் திகிலுடன்.
12.
முகங்கள் தேவையற்றவையாய்ப் போய்விட்டன.
உனக்கும் எனக்கும் எவருக்கும்.
சுற்றியிருப்பவர் பாலுறுப்புகளை
விழுப்புடன் கண்காணித்திருப்பதோடு
முடிந்து விடுகிறது
சக மனிதர் மீதான அக்கறைகள்.
13.
நமைச்சலெடுக்கும் குறிகள் மூணு
கூட இருக்கும் தெம்பில் குறிநீட்டி
எல்லை மீறுபவனுக்கெதிராய்
எதுவுஞ் செய்ய இயலாமல்
குறியைச் சுருட்டிக் கொண்டவனின்
கையாலாகாத்தனம்
அர்த்தமற்ற குத்தலுடன் குற்றபடுத்தும் உன்னை.
நாங்கள் சுமத்திய எங்கள் அகோரங்களை
அறியவும் அனுமதிக்கபடாமல்
நீட்டியவனுக்கும் சுருட்டியவனுக்குமிடையே
குறுகிக் கிடக்கிறாய் நீ.
முலையும் யோனியுமாய்
வெறும்
முலையும் யோனியுமேயாய்.
14.
அக்கா குருவியின் மெல்லிய குரல் லயமும்
சிறு சிறு மலர்களின் மௌனச் சுகமும்
எனக்கும்தான் பிடித்திருக்கிறது.
பிறகெதற்கு இந்த ஒப்பாரியும் கூப்பாடும்
என்கிறாயா?
தேவைகள் சமைத்த என் குரலைச் சலிக்காது
சற்றே பொறு நண்பனே,
என் காதலி உன்னையும்
உன் காதலி என்னையும்
தழுவி முத்தமிட எந்த தடையுமில்லாமற்பொகும்
உன்னதப் பொழுதுவரை
15.
தலைவாசலுக்கருகில் படுத்துகொண்டு
முகம் திருப்பி முதுகு கடித்து
அரிப்புக்கு பதில் சொல்ல
முயற்சித்துக் கொண்டிருக்கிறது
அது எப்போதும்.
சொறிந்து கொள்ளக் கைகளின்றி
அதுபடும் அவஸ்தை புரிந்தாலும்
என் கைகளை இரவல் கொடுக்க முடியாது
ஒரு போதும்.
வேதனையுடன் கழிக்கவென விதிக்கபட்ட
அதன் எஞ்சிய வாழ்வு குறித்து
அனுதாபம் நிறைய இருந்தாலும்
எதுவும் செய்யக் கூடவில்லை
இந்த இடத்தையும் அதற்கில்லையென
மறுக்கும் ஒற்றைக்கல்லை
இதுவரை வீசாமலிருப்பதை தவிர.
16.
அலையடித்து நுரைகக்கும் கரையை
மிகுந்த பிரயாசையுடன் கடந்து செல்லுமென்
கைகளில் புராதனத்தின் கிழிசல் மிக்கவொரு வலை.
ஆழங்களில் வீசி காத்திருந்து மீட்டெடுக்கையில்
மீன்களை வழிய விட்டுவிட்டுக்
கடற்தாவரங்களோடு கெக்கலிட்டுச் சிரிக்கிறது
அது அநேக நேரங்களில்.
பெருமீன் பிடிக்க லாயக்கற்றுக் கிழியுமிதைப்
புதுப்பிக்கும்வரை
திருப்தி கொள்ள வேண்டியதாயிருக்கிறது
குறுமீன்களோடு.
கிழிசல் வலையைப் பலவீனத்தோளில்
போட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும்
வரச் செய்வதாயிருக்கிறது கடலின் அழைப்பு.
விடாப்பிடியான தாகத்துடன் விரித்துகொண்டேயிருக்கிறேன்
மீன்களுக்கான வலையில்
நானே விழுந்து கிடப்பதை அறிந்தும்
அறியாதவனாய்.
17.
வருடிக் கொடுப்பதான பாவனை செய்யவல்ல
உன் வார்த்தைகளை மூலதனமாக்கிப்
பெற்றது உனதிந்த ஸ்தானம்.
கேள்விகளற்றுத் தலையாட்டலுடன் தொடர்ந்த
இத்தூரத்தின் முடிவில் மிச்சமாகியிருப்பது
உனக்குன் ஸ்தானமும்
எனக்குன் வார்த்தைகளும்.
ஸ்தானம் கொடுப்பது நிறைய
தனம் தானியம் அதிகாரம் கீர்த்தி என.
வார்த்தைகள் கொடுத்தது ஒன்று
நீண்ட மயக்கம்.
ஒரு நீர்கயிறாய் வலியின்றி பிணைத்திருக்கும்
உன் வார்த்தைகளிலிருந்து மீள
வேறென்ன வழி மீந்திருக்கிறது சொல்!
கனவு ததும்பும் உன் விழிகள் ஒளிர
பரிவு சுமந்துவரும் அவ்வார்த்தைகள் புறப்படும்
உனதந்த குரல்வளையை குதறுவதை தவிர.
18
அ.
கான் தள்ளும் கறுப்பு வளையல்காரிகளின்
கைகளில் வந்தாவது
சரியாய் இருக்குமா?
கிழிசல் உடை பரட்டைத்தலை
சக்கிலிய வீட்டு பிள்ளைகளைக்
குறிவைத்துத் துரத்தியடித்தே பழக்கப்பட்ட
வாத்திச்சிகளின் கைப்பிரம்பும்,
காக்கிக் குறிகள் ஒரு அபலையை
வெறிதீரக் குதறத் தோதாய்
செம்பருத்திப் படம் பார்க்கப் போன
பொறுப்பான பொம்பளப் போலீஸின் லத்தியும்.
ஆ.
பிரம்புகளும் லத்திகளும்
மொத்தமாய் எரியுண்ட
சாம்பல் மேட்டை நோக்கியே
துவக்க வேண்டியிருக்கிறது
இந்த பயணத்தின் முதல் அடியை.
19.
மூச்சிரைத்து நுரைதள்ள
வெகுதூரம் வந்துவிட்டேன் உன்னை தொடர்ந்து.
இன்னுமெவ்வளவு தூரம் போக்கு காட்டி
இழுத்து போக உத்தேசித்திருக்கிறாய்?
அண்டி தெறிக்க குலைக்குமிவை
மேலே விழுந்து குதறும் நிமிடமும்
தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
வலுவும் வழியும் இல்லாவிட்டாலும்
திரும்பலை குறித்து யோசித்தாயிற்று பலமுறை.
கண்ணீரிலும் குரோதத்திலும் செய்த
கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறது வீடு
என் விரைகளை நசுக்க.
20.
மௌனத்தின் அழுகையாய் உறுமியும்
வெறிக்கூத்தின் ஒலிபெயர்பாய் பறையும்
திகில் மந்திர புதிர்புதை மொழியில் உடுக்கையுமொலிக்கும்
மறைவெளி மண்டலங்களிலொன்றில்
பட்டைசாராயமும் பனங்கள்ளும்
மாந்திச் சிவந்த விழிகளுடன்
பன்னிக்கறியின் மெதனை படிந்த கைகளில்
கொடுவாளுடன் எதிர்பட்டானவன்.
கொடுவாளைக் கொண்டு மேனியை அடிக்கடி
அலுப்புடனும் கடுப்புடனும் வழித்துக் கொண்டிருந்தவன்
“ஓய்ந்து கொண்டிருக்கிறேன்
வழி நெடுக மேலே விசிறியடிக்கும்
சைவ அசைவ பீக்களை வழித்து வழித்தே”
யென்ற புகாருடன் அறிமுகப்படுத்திகொண்டான்
என் தொல்குடித் தெய்வமென்று தன்னை.
தெண்டனிட்டு வணங்கியெழுந்த போது
எனதேயான தன்முகம் மலர
வேண்டுவன கேளென்றான்
பூப்பறித்து விளையாடுவதாய் எம் தலையறுத்தாடும்
மெஜாரிட்டி கைகளில் சாதுவானவொன்று
பின் மெல்ல அறிவிக்கும்
எரிச்சலூட்டுவதாக
எங்கள் தலையின் எந்தப் பாகம் இருந்ததென்பதை
குறித்து நடத்தலாமிப்பொ
பொதுவிவாத மொன்றென்று.
தொல்குடித்தலைவா! வெட்டத் தளிர்க்கும் மரம் மாதிரி
எங்கள் மைனாரிட்டித் தலைகளும்
கொப்படித்துத் தளிர்க்க வேணுமென்றேன்.
பரிதாபமாய் பார்த்தவன் வேறென்னவென்றான்
அவ்வண்ணமே கூட்டமாய் வந்தவர்கள்
கிழிக்க முடியாவகையில் எம்குலப் பெண்களின் குறிகளை
உலோகக் குறிகளாய் மாற்றிதரவேணும்
முடிந்தால் கவர்சியான தங்கத்திலென்றேன்
அரண்டுபோனவன்
தன்னால் தரமுடிவதிதுதானென்று
பீ வழித்துக் கொண்டிருந்த கொடுவாளை
கூர்தீட்டிக் கையில் தந்து
ஊளையிட்டுப் போனானொரு காட்டுமிருகம் போல.