June 9th, 2007

ஆன்மாவின் சகோதரிக்கு…..



- கற்பகம் யசோதர

ka_yaso1.jpg

நீயின்றி ஒருநாள்
இத் தெருக்களைக் கடக்கையில்
என் பால்யத்தின் வாசனைகளில் மூழ்கினேன் _________
நிதானமற்றவளாய் விசரியாய்
காலமெங்கும் அதிரும்
நீ என் ஆன்மாவின் சகோதரி
நான் உன் ஆன்மாவின் சகோதரி
எங்களது தோழர்கள் தொடர்ச்சியற்றுப் போனார்கள்
பள்ளிகளின் சுவர்களில்
போரின் நினைவுகளது கண்கள் வெறிக்க
சிறு பராயத்து ‘அவர்கள்’
வரலாற்றில்
பெயர்களற்றுப் போனார்கள்
நான் வன்மத்துடன் உச்சரித்தேன்
அதனது பெயர்களை -
மிக இளமையில் அறிந்தேன்
அது கொண்டாடுவோரது வஞ்சகங்களை.
உனது கரங்களைப் பிடித்து
ஓடிச் செல்வேன்
குழந்தைகள் தம் தாயின் ஆதிக் குகையின்
கிழியல்களைக் கொண்டு ஓடிய
அதிகாரக் குன்றுகள் நோக்கி;
அவற்றினுள் புதைக்கப்பட்ட கதைகள்
அதிருகின்றன எம் மேல்.
நடுங்குகின்ற
என் கைகளை விடுவித்த
வஞ்சிக்கப்பட்ட குரலில்
உன் பாடல்களைக் கேட்கையில்
அதிலிருந்த (என்) இழப்பில்
மனம் சிணுங்கி
ஒரு காலம் உன்னில்
இரகசிய வெறுப்பும் வன்மமும் உள்ளிட
பிறகோ
சமனாய் பேரன்பும் ஆசையும் பீரிட
அருகருகே பயணிக்கும் போழ்துகளில்
வேறு வழியற்று
நான் புணரவும் விழைந்த
__________!
சொற்களெங்கும் தெறிக்கின்ற நீ
ஆதிப் பெண்;
ஏவாள்; சக்தி.
நீ இரையிட்டும் புணர்ந்தும்
உருவாக்கிய பிள்ளைகள்
குன்றுக்கடியில்
ஒடித்துப் போட்டது
உன்(எ)ன்னைத்தான்
என்(உ)ன்னைத்தான்
அதிகாரம் வன்கிழித்ததில்
கையில் வந்த உன் ஜோனிச் சதையோடு
அதில் இரத்த்த மின்னும் உறையாது
உன் கரம் இழுத்து ஓடிய போது, ஒரு தெருவிலே
நீ மறைந்து போக, கையிலிருந்தது
உன் உதடென்று கண்டு
மூர்க்க மிகுந்து முத்தமிட்டேன்;
அதன் இரத்தம் உறிஞ்சி உறிஞ்சி ருசி கண்டு.
தாம் கடந்து வந்த கருவழிப்புகளில்
வேசிகளின் உடல்கள் சென்று வருகிற காயங்கள் பற்றி
- யாருக்குமென்ன?
விசரிகளின் பிள்ளைகளது தகப்பன்களது பெயர்கள்
எக்காளமிட்டுச் சிரிக்க
உள்ளே
உன் *இன்பத்தின் சதையிழந்து
கல்லெறிய தகுதியற்றவன்களால்
எழுதப்பட்டோ படாமலோ,
ஆனால் மழுங்கடிக்கப்பட்டு -
வரலாற்றில் மறைந்தாய்.
வணங்கப்படும் தாயே
கள்ள வேசையே
நடுச்சாமத்தில்
உன் கதவுகளைத் தேடி வருவார்களெனில்
அவரிடம் சொல்லு
அதிருகின்ற உன் சொற்களால்
நிதானமற்ற கூச்சல்களால்
பிறழ்வுற்ற மொழியால்:
எதையும் முழுமையாய் சொல்ல முடியவில்லை
எம்மிடமும் பெயர்கள் இல்லை
சொல்லப்படாதிருக்கின்றன ஏனைய பிற
அப்புறம்
நான் _____________!
உன் ஆன்மாவின் சகோதரி
முடிவுறாதவள்
தாயும் வேசையும்
~
மே, 2007



April 24th, 2007

வார்த்தையினுடையதும் கதி



~ஹரிஹரஷர்மா

இருள் கசியும் வரலாற்றின் இடுக்குகளுள்
பதுங்கியிருந்த வார்த்தை
ஞாபகங்கள் கரைந்து வழியும்
புனைவின் சுவர்களிலேறிச் செல்கிறது
ஓரு அனுபவமிக்க பல்லியைப் போல

தனிமை புகைந்து பரவும் மாளிகையின்
துயரம் படிந்த உப்பரிகைச் சுவர்களில்
ஏறிச்செல்கையில்
நிறமேதுமற்ற வார்த்தைப் பல்லி நுகர்ந்தது
தேநீரின் ஆவி மணத்துடன் சேர்ந்து வரும்
கண்ணீரின் வாசனையை

வாசனையுட்டப்ட்ட வார்த்தைப் பல்லி
ஊhந்து திரிகின்றது
நிலவு எரிகின்ற
தொன்மத்தின் மறைக்கப்பட்ட குறிஞ்சியில்

இலைகள் உதிரும் ஓரிரவில்
செம்மணல் விரிந்திருக்கும்
வெறுமையின் பாலையைச் சென்றடைகிறது
வாசனையூட்டப்ட்ட வார்த்தைப் பல்லி

அறியப்பட்டவற்றின் குறிப்பெடுத்து
புராதனப் புனைவு செய்யும் கதைசொல்லி
புனைகதையின் வார்த்தைகள் கொதித்துக் குமிழியிடும்
வர்ணப்பானையினுள் இட்டான்
வெறுமையூட்டப்பட்ட வார்த்தைப் பல்லியை

இனம்புரியாத நெடி வீசும் வார்த்தைப்பல்லியை
இனங்காண்பதற்காய்
அதைப் பிரதியினின்றும் உருவியெடுத்து
உடைத்தான் கத்தரிக்கோல் வடிவினன்

உடைந்த வார்த்தையைக் கூட்டியள்ளி
மேடு பள்ளமுள்ள மேசையிலிட்டு
படிக்க ஆரம்பிக்கிறான்
இன்னொருவன்.

அவன் அறியான்
வார்த்தையின் பயணக் குறிப்புகள் உருவப் பட்டிருப்பதை
அது நிறமூட்டப் பட்டிருப்பதை

மேலும்
அது வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை…..

***

வீரகேசரி உயிர் எழுத்து



April 24th, 2007

டயரிக் குறிப்புகளாய் மீந்திருக்கும் உன்னைப் பற்றி…….



~ஹரிஹரஷர்மா

1
எந்தப் படகும் மிதக்க முடியாமல்

எம்மிருவரிடையே நகர்ந்துகொண்டிருந்த இரும்பு நதி
இறுதியாய்க் கெட்டிப்பட்டது
நீ இறந்த கணத்தில்

எண்ணெய்ப் பிசுக்கும், கரியும்
வாழைக்காய்க் கயரும் பிரண்டிருந்த
உனது டயரியை நேற்றுக் கண்டெடுத்தேன்

மரக்கறிக்கணக்குகள், கிரகசஞ்சாரப் படங்கள்
ஆடையில் இடுவதற்கான தையல் டிசைன் கள்
கோலப் புள்ளிக் கணக்குகள்
மேலும் சில சமையல் குறிப்புகள்.
பத்தாண்டுகளுக்கு முந்தய டயரி அது!
அதில் சென்றவாரக் கணக்குகளை நீ எழுதியிருந்தாய்

உன்னை எழுத எண்ணியிருந்தேன்

சொற்களால் ஆனதொரு கூட்டில் வசித்த உன்னை
எப்படி எழுதலாம்?
தினக்குறிப்பேட்டின் பக்கங்களில்
சிதறல்களாய் மீந்திருக்கும் உன்னை
எழுதிச் செல்வது எப்படி?
உன்னை உன் முழு அர்த்ததில்…….

எப்படி மொழிபெயர்ப்பது
சிக்கலுற்ற உன் அகச்சங்கேதங்களை…
நான் எங்கணம் அறிதல் கூடும்
புகைக்கூண்டின் வழியே புகையாய் வெளிச்சென்ற
உன்னையும்
உன் கனவுகளையும்

பிரார்த்தனைப் பாடலொன்றாய்
உன்னை உன் பிசிறுகளுடன் எழுதட்டுமா
என் சிறு குழந்தையே…

எழுதப் படாத உன்னைப் பற்றிய கவிதையின் தெருக்களிலே
கவிதையென அலைந்துலைவேன்
பிரார்த்தனைப் பாடலென உன்னைக் கதறியபடி

ஆழித்துரும்பெனவே உன் நினைவுப் பாழில்
அலைந்து திரிவதென்ன சுகம்
என் பராபரமே…………

2
நம்மிருவரதும் தனிமை
நிழலாய்க் கரைந்துருகிப் படிந்திருந்தது
வீடெங்கும்

தனிமையின் துயரம் ததும்பும் இச்சை
ஒளிர்ந்தவாறேயிருந்தது

மணிமுட்களிடையே
நாம் அசைந்துகொண்டிருந்தோம்

பரிமாறிக் கொள்வதற்கு
இருவரிடமும் முட்கள் இருந்தன

நம்மிருவரது பொழுதுகளில் இருந்து
நழுவி வீழ்ந்த சொற்கள்
காலையில் பூக்களாய் மலர்ந்திருப்பதைக்
காண நேர்ந்தும்,
பனையோலைகள் உரசும் ஒலியூடு
எழுந்து கிளரும் வெப்பமிக்க இரவின் கிசுகிசுப்புடன்
நம் சொற்கள் கலந்ததில்லை-ஒருபோதும்….

விடியலில்
இரவுத்தெரு நீண்டிருந்தது
பகலின் திசைவெளியெங்கும்

3
நம் கைகளில் இரவு ஒட்டியிருந்தது
ஓளியின் கடைசித் துளிகளை
கைகளினுள் பொத்தியபடி இரவுள் நுழைந்து
இரவானோம்…இருளுள் தொலைந்தது பகல்

நாம் கைகளை விரித்ததும் தெரிந்தது
கடந்து வந்த பகலின் வன்மம்

4
அன்பே,
உனக்கு ஞாபகமிருக்கிறதா

ஒருமுறை ஆழத்தில் உரையாடல் செய்து
உள்புதைந்தோம்
அன்று கண்டுகொண்டோம்
நினைவு ஒரு கொடும் புனைவென..

பெருமழைக்கால வனங்களில் திரியும் பறைவைகள்
நினைவின் வானத்தில் சிறகடிப்பதில்லை

அன்றிரவு
புனைவு வானத்தின் வெளியெங்கும்
ஓயாத சிறகசைப்புகள் நிகழ்ந்ததில்
அதிர்ந்தாடியது ஆன்மா

நமது விழிப்பு
தோழமையற்ற அடரிருளில் நிகழ்ந்தது

கனவு அதன் எல்லைகளுடனிருப்பதை
உணர்ந்து கொண்டவுடன்
பெய்யத் தொடங்கியது துயரத்தின் அடர்பனி
படரத் தொடங்கியது மிகு இருளும்
பெருந்துக்கமும்

5
எனது நினைவுகளூடு திரும்பிச் சென்று
நான் கண்டேன்
சிறகுகள் அறுந்து போன உன் கனவுகளை,
ஒட்டறை படர்ந்திருந்த உன் பொழுதுகளை
இரவுகள் உன்னில் எழுதியிருந்த கவிதைகளை

மேலும் நீ எழுதாது விட்டுவிட்ட
தினக்குறிப்புகளின் வார்த்தைகளை ……..

***

கலைமுகம் இதழ்


FireStats iconPowered by FireStats