January 17th, 2008
சோளகக் காற்றில் அம்மா அலைந்து திரிகிறாள் | சைத்ரிகன்
சோளகக் காற்றின் காலம்
மறுபடியும்
தொடங்கி விட்டது.
கொடியில் உலரும் ஆடைகளுக்கு
‘கிளிப்’ போடும் அம்மா
லாந்தரின் சிம்னியை
ஒவ்வொரு மாலையிலும்
துடைத்து வைக்கிறாள்.
சோளகக் காற்று வீடெங்கும் நிறைய
மங்கிய வெளிச்சம் தரும் விளக்கின்
நிச்சயமற்ற சுடர் காற்றிலாடுகையில்
அம்மா;
உப்பிட்டு அவித்த சோள விதைகளையும்
கறுப்புத் தேநீரையும்
என் மேசையில் வைக்கிறாள்
தேநீர்க் கோப்பைக்குள்
அலையடிக்கிறது
சோளகக் காற்றில் கூந்தல் அலைவுற
பைத்தியக்காரிகளைப் போல
தன்னுடலில் இருந்தும் வெளியேறி
இரவெரியும் தெருக்களில் நடக்கிறாள் அம்மா.
[தெருவெங்கும் அன்னையரும் பிணங்களும்…]
அவள் அலைந்து திரிந்து
அதிகாலையில் திரும்பும் வரை
வீழ்ந்து கிடக்கும் அவளுடலைப் போர்த்தி
தூக்கமாத்திரைக் குப்பியை ஒளித்து வைக்கிறேன்
மறுநாள் பகலில்
நான் மீண்டும் அவளைக் கண்ட போது
சோளகக் காற்று
சருகுகளை அலைத்துக் கொண்டிருந்தது.
பைத்தியக்காரியைப் போல கூந்தல் அலைவுற
வெய்யிலில் உலரும் அரை ஈர ஆடைகளுக்கு
‘கிளிப்’ போட்டுக் கொண்டிருந்தாள்.
இன்னும்,
இது முடிந்த பிற்பாடு
சிம்னியை திருநீறிட்டு மினுக்குவாள்,
தூக்க மாத்திரைகள் இரண்டை விழுங்குவாள்,
பிறகு…
தன்னுடலை விட்டிறங்கி
இரவெரியும் வீதிகளிலும் தெருக்களிலும்
குருதி பிரளப் பிரள அலையத் தொடங்குவாள்
பிணங்களுக்கிடையே…
கொல்லப்பட்ட இன்னொரு சடலமென
வீழ்ந்து கிடக்கும் அவளுடல் - மறுநாள் காலைவரை.
***
[முப்பது வருட கால யுத்தத்தால் விதவைகளாக்கப் பட்ட எல்லா அன்னையர்களுக்கும்]
hello saithrigan,
mugathil araiyum nejamena ungal kavithai manathil thaithathu.. 30 neenda nedungalathukku pinnum innum thavippudan vetru udalagathan pala pengal urangi kondu irukkirargal. inimelavathu intha nilai maaratha endra yekkathudane ovvoru pozhuthum kazhigirathu.
vaazhthukkal ungal kavithaiku..
Anu
nanri anu