July 16th, 2007

பெருவெளி & முரண்வெளி: விவாதத்தில் புத்தசூஃபிசித்தன்

Print This Post Print This Post

மிக உயர்ந்த தரத்தில் நம் சமூகங்களுக்கு மிக அவசியமான ஒரு குறுக்கீட்டை விவாதமாக நிகழ்த்துவது குறித்து முரண்வெளி-பெருவெளி இருதரப்பினருக்கும் முதலில் நன்றிகள்.
முரண்வெ ளிக்கு முஸ்லிம் தோழியும், பெருவெளிக்குத் தமிழ் நண்பரும் தொலைபேசிகளில் சில முக்கியமான தகவல்களை வழங்கிவருவதால், நம் அடையாளத்தைச் சொல்லாது இதற்குள் நுழைந்துவிட முடியாதென்று தெரிகிறது. அடையாள நிராகரிப்பென்பது அடுத்தவரை நிராகரிப்பதன் அடையாளம்தான் என்று குரானா வேறு நிறுவுகிறார்.
எனவே இதை எழுதும் நான் ‘தமிழன் ‘ (ஸ்லாஸ் போட்டு ச்சி என்பதையும் குறிக்க வேண்டுமோ!….. ‘நான் முஸ்லிம் ‘ என்று சொல்கையில் இந்தச் சிக்கல் இல்லை என்பது எவ்வளவு வசதி! ) என்ற அடையாளத்துக்குரியவன் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். என் கருத்தை இங்கு சொல்லிவைக்க இந்த அடையாளம் போதும் என்று நினைக்கிறேன். பேரை/சாதியை/மதத்தை/ஊரை/ஊருக்குள்ளும் மற்றோரிலிருந்து வித்தியாசம் பேணும் என் வம்சாவளிப் பெயரை எல்லாம் உங்கள் அனுமதியோடு இங்கு மறைத்துவிடுகிறேன். அடையாள அட்டைகளைப் பரிசீலிக்கும் வேலையை இப்போதைக்கு சிங்களப் பொலிசாரிடமும் தமிழ்ப் பொலிசாரிடமும் விட்டுவிட்டு (முஸ்லிம் பொலிசார் இன்னும் உருவாகிவிடவில்லை என்ற நம்பிக்கையில்) நாம் உரையாடலுக்கு வரலாம்.

பெருவெளிக்கு முரண்வெளி வாசிப்புப் பிரதியை எழுதி அதற்கு றியாஸ் குரானா பதிலெழுதி… அதற்கு, ஏ/எல் பரீட்சையில் மும்முரமாகிவிட்ட முரண்வெளி பதிலெழுதுமுன் என் மிக எளிய சில குறிப்புகளை வைத்துவிட விரும்புகிறேன்.

எந்த ஒன்றின் மீதும் எங்கள் மனச்சாய்வு இன்றி ஒரு எழுத்தைத் தன்னும் எழுதிவிட முடியாதென்பதை முரண்வெளி ஒப்புக்கொள்ளும் என்று நம்புகிறேன். (நடுநிலைப் பயங்கரவாதம் பற்றி அறிந்துகொள்ள நாம் பிபிசி சிஎன்என் வரை போகவேண்டியதில்லை, நமது நாளேடுகளே போதும் இல்லையா?) நாம் எந்த ஒரு வரியை எழுதும்போதும், அதன்மீது (பிரக்ஞைபூர்வமாகவோ பிரக்ஞையின்றியோ) நாம் எழுதாமல் மறைப்புக்குட்படுத்திய ஆயிரம் வரிகள் ஒளிந்துநின்று மூத்திரமடித்துக்கொண்டிருக்கின்றன. (விவாதத்தில் குறுக்கிடுவதற்கு இந்த வார்த்தைப்பிரயோகம் முக்கியமானது என்று யோசித்துக்கொண்டிருந்ததன் விளைவு, இங்கே கட்டாயமில்லாத போதிலும் வந்து விழுந்துவிட்டதோ!)
உங்கள் மனச்சாய்வு எங்கே என்பதையே குரானா அலசி எடுக்க முற்படுகிறார் என்பது வெளிப்படை. அடையாளங்களைக் கைவிடுவதாக அறிவிப்பதன் மூலம் நடுநிலை சாத்தியமாகிவிடுமா என்ன? திரும்ப ஒருமுறை யோசித்தால் உங்களுக்கே சிரிப்பு வருமே! ஆகவேதான் எந்தத் தரப்பில் நின்று உங்கள் ஆலோசனைகள் வருகின்றன என்பதன்மீது அவர் கவனம் குவிக்கிறார்.

உதாரணத்திற்கு, பெண்ணியவாதி ஒருவர், “உன் ஆண்திமிரைக் கொண்டெழும் உன் குறி மீது ஓங்கி ஒரு உதை விட விரும்புகிறேன் ” என்றெழுதினால், அதை வன்முறையாகப் பார்க்குமா நம் மனம்? இழிவான முறையில் அவள் மேல் ஏறி உட்கார்ந்திருக்கும் நம் ஆண்திமிரை நாம் அறிவோம் என்பதனால், ‘உன் கோபத்தைக் குறைத்துக்கொள் ‘ என்ற ரீதியில் நாம் அவளுக்குச் சொல்ல முற்படுவதில்லை.

மஹாகவியைச் ‘சாதிவெறியன் ‘ என்று சுகன் எழுதினால், (மரமேறும் எத்தன் பற்றிய குறும்பாவைக் குறித்து சுகன் எழுதியதை வாசித்த மனப்பதிவிலிருந்து சொல்கிறேன். நேரடியாக அப்படி எழுதியிருக்காவிட்டால், ஒருவேளை அப்படி எழுதினால் என்று வைத்துக்கொள்ளலாம்.) எழுத்தில் தெறிக்கும் வன்முறை, விரோதபாவம் நமக்கு உறுத்துவதில்லை. சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மீது எவ்வளவு வன்கொடுமைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லியே எங்கள் உரையாடலை ஆரம்பிப்போம்.

இலங்கை முஸ்லிம்களின் அமைப்பாக்கம் பற்றிய உரையாடலிலும் கலந்துகொள்கிறவர்கள் தங்கள் சாய்வை மறுத்தபடி பேசுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் கரிசனம் கொள்ளும் தரப்பைச் சார்ந்தவர்களை இனங்காட்டியபடிதான் நம் பேச்சை முன்வைக்க முடியும். நம் கரிசனத்தை, அந்தத் தரப்பினர் மறுத்து அவர்கள் சுட்டும் எதிர்த்தரப்பினர் பாராட்டுவார்களாக இருந்தால் நம் சாய்வு பற்றிய ஐயப்பாடெழுவதை தவிர்க்க முடியாது.

முஸ்லிம் தேசம் என்ற பேச்சு, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையால் உருவானதல்ல என்பதை எல்லோருமறிவோம். எனில், முஸ்லிம் தேசம் என்ற பேச்சில் உள்ள குறைகளைக் கண்டு சொல்வதற்கு முன்நிபந்தனையாக, ஒடுக்கியது குறித்தும், ஒடுக்குதலுக்குள்ளாகியவர்களின் வலிகள் குறித்தும் முதலில் பேசவேண்டியது நியாயம்தானே!
நாம் அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எதிரானவர்கள்தான் என்ற அந்தரங்க சமாதானம் (அ.சுத்தியுடனானதுதானென்றாலும்) மட்டும் போதுமானதல்ல என்பதையே இந்த விவாதத்தின் போக்கும் நமக்கு உணர்த்துகிறது. அதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் உள்ள ஆபத்தும் உணரக் கூடியதே என்றாலும், சிலவற்றைப் பேசாமல் சிலவற்றைப் பேசுவதில் உள்ள வன்முறை பெரிதல்லவா?

அதேசமயம் பேசமுடியாப் பொருளையெல்லாம் பேச உசுப்பேற்றிக் கூத்துப் பார்க்கும் குரூரமும் நமக்கு வேண்டாம். சுதந்திரத்திற்காய்ப் பயணிக்கும் நம் புரட்சிகரச் சூழலில்(!) முரண்வெளி பேசும் அளவே அதிகமோ என்ற பதைபதைப்பு நமக்கு இருக்கிறது.

நம் மனச்சாய்வின் பக்கம் உள்ளவர்களோடு உரையாடலை நடத்துவது போல (நமது மனச்சாய்வை அந்த சாய்வுக்குரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதும் எழுத்தினால் நாம் எதிர்பார்க்கும் விளைவுக்கான சவால்தான்) பெருவெளி மீதான வாசிப்பை முரண்வெளி நிகழ்த்தக் கூடாதா என்பதே நமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
(இதுகூட நமது விருப்பத்துக்கேற்ப ஒருவரைச் செப்பனிட்டுக்கொள்ள முயலும் ஆலோசனை வழங்கலாகவே முடிகிறது. என்ன செய்ய? ஆலோசனைகள் சொல்வதற்கான உந்துதலை எவ்வளவு முயன்றாலும் அடக்கிக்கொள்ள முடியாமல்தான் இருக்கிறது!)

பெருவெளியின் முஸ்லிம் தேச நிலைப்பாட்டில், முப்பது வருடங்களுக்கு முந்திய எமது (தமிழ்) நியாயங்கள் சிலவற்றைக் கண்டுகொள்ள முடிவதால் அந்த அனுபவ மீட்டலை ஒரு மனம் திறந்த உரையாடலாக்கிக் கொள்ள பெருவெளி விரும்புமானால், அதற்குரிய சில குறிப்புகளையும் இங்கே…. (உந்துதல் தொடர்கிறது)
ஒரு பேரினத்தின் ஒடுக்குதலுக்குள்ளாவதில் ஏற்படுகிற வலிகளும், ரணங்களும், நியாயமான ஆவேசமும் அவலங்களுக்கெதிராக மக்களைத் திரட்டிக்கொள்வதற்கான உபாயங்களைத் தேடவைக்கிறது. ஒடுக்குதலுக்கெதிராக மக்களைத் திரட்டுவதற்கான முயற்சிகள் எல்லாம் நியாயமானதாகவே தோன்றுகிறது. பின்நவீனத்துவம் தெரியாமலிருந்த 70களின் பிற்பகுதியிலேயே “அவர்கள் வேறு நாங்கள் வேறு ” என்று வித்தியாசங்களைச் சொல்லி காசி ஆனந்தன் முழங்கியபோது, அது மற்றும் என்னென்ன வித்தியாசங்களை எல்லாம் விலக்கிவிடும் மனத்தயாரிப்பை தமிழர்களுக்கு வழங்கும் என்பதை முன்னனுமானிக்க முடியாமல்தானிருந்தது.

இன்று, பேச முடியாமலும், மாற்றுச் சிந்தனைக்கு முயன்றால் உடனே கொல்லப்பட்டுவிடுவதைக் கேட்க ஆளில்லாமலுமிருக்கும் ஒரு பகுதியினர், தமக்குக் குரல்தர வல்லோரைத் தேடும் நிலையில் வந்துமுடிந்துள்ளது. தமிழ் தேசியப் பெருங்கனவே ஒரு பயங்கரக் கனாவாக, மிரளும் இத்தமிழர்கள், அதை வெளிச் சொல்லவும் முடியாதவர்கள். முஸ்லிம்கள், தலித்துக்கள், மலையகத்தார் என ஒடுக்குதலுக்குள்ளாகிறவர்களின் வானவில் கூட்டணிக்குள் இத்தமிழர்களுக்கும் இடம் உண்டா?
கோட்பாட்டு ரீதியாக அது சரிப்பட்டுவர வழியுண்டா?
ஏனென்றால் தமிழக நிலவரத்தில், “நானும் ஒடுக்குதலுக்குள்ளாகிற ஏழை பிராமணன் ” என்று சொல்லிக்கொண்டு வருகிற ஒருவர் கோட்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டோர் பிரிவிற்குள் வந்துவிட முடியாது. பாம்புக்கென வைத்திருக்கும் தடியைத்தான் அவருக்கும் பாவிக்க வேண்டுமென்பதில் அங்குள்ள ஒடுக்கப்பட்டோர் கூட்டணிக்குள்ள உறுதி தெரிந்ததே.
ஒருவேளை அவர் தன்னைப் பகிரங்கமாக பறையன் என்றோ தலித் என்றோ அறிவித்துக்கொண்டு, தன் இனக்குழுவை முற்றாக நிராகரித்துக் கொண்டு செயற்பட்டால் வானவில் கூட்டணிக்குள் வரக்கூடும்.
ஆனால் இங்கு தங்கள் இனக்குழுவின் பொங்குதலை மறுப்போர் தங்கள் நிராகரிப்பை பகிரங்கப்படுத்த வேண்டுமென நிபந்தனை வைக்க முடியுமா?
அவர்களை, தீவிர ஒடுக்குதலுக்குள்ளிருப்பவர்களாகக் காட்டுவதே அவர்களின் பேசமுடியா நிலையும், பேசிச் செத்தால் கண்டுகொள்ள ஆளில்லாத அவலமும்தானே?
அவர்கள் தங்கள் இனக்குழுவின் பொங்குதல்களை வரவேற்றுப் பேச்சுரையாதிருப்பதும், மற்றவர்கள் அவலத்தைக் கண்டுகொள்ளாமல் தாம் மட்டுமே உலக மகா அவலத்திலிருப்பதாகக் கதைபேசிக் கொண்டிருப்போருடன் கலந்துகொள்ளாதிருப்பதும் அவர்களைத் தனித்துப் பார்ப்பதற்குப் போதாதா?
பெருவெளி இவர்கள் பக்க மனச்சாய்வினோடும் உரையாடலைத் தொடர ஏதும் தடைகள் உண்டா?…….

எழுத்துக்களைத் தேடித் தேடி ஒற்றைவிரலால் குத்தியதில் களைத்துப் போனேன். மிகுதிப் பேச்சை பிறகு வைத்துக் கொள்ளலாமே!

- புத்தசூஃபிசித்தன்
(அடையாளத்தை விரித்துக்கொள்ளும் ஆசை எல்லையற்று இருந்தபோதும், ஏனைய தரப்புகளை, பெண்ணை, அரவாணிகளை எல்லாம் இணைத்துக்கொள்ள இயலாது போய்விட்டதில் வருத்தம்)


11 மறுமொழிகள்

  1. புத்தசூஃபிசித்தரே,
    பெருவெளி-முரண்வெளிக்கிடையிலான தெருச்சண்டையை உயர்ந்த ஒரு விவாதமாக மதித்துப் பதிலெழுதியதற்கு நன்றி.
    உங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்கு இந்த தமிழன் என்கிற அடையாளம் என்ன பங்களிப்பைச் செய்கிறது என்று நானறியேன். நீங்கள் சொல்கிறது போன்றவற்றை ஒரு தமிழ்த்தேசியவாதியிடம் போய்ச்சொன்னால் உடனே அவரது பதில் பின்வருவது போன்ற ஒன்றாகத்தான் இருக்கும் : ‘சீய்க்/தூ, நீயெல்லாம் ஒரு தமிழனா????’
    உங்களை ‘தமிழர்’ என்று தமிழ்த்தேசியவாதிகள் சொல்ல மாட்டார்கள்!! நிற்க. நீங்கள் ‘தமிழர்’ மட்டுமேயென்று நாமும் சொல்லப் போவது இல்லை. உங்களுடைய தன்மைகள்/இயல்புகள் எல்லாம் ‘தமிழ்’ என்கிற ஒரேயொரு அடையாளப்படுத்தலுடன் நிறுவிடுகிறதா?? இல்லையே. இந்த அடையாளப்படுத்தலின் ஒற்றைத்தன்மை மிகவும் பயங்கரமானது/நெகிழ்வற்றது. நீங்கள் பிறப்பால் தமிழராயிருந்து, இந்தப் பதிலுக்குள் ஒரு துரோகியாக, மறுத்தோடியாக, நிதானமுள்ள புத்தனாக, இலக்கிய வாசிப்பாளராக, சுயவிமர்சனம் செய்து கொள்கிறவராக என்றெல்லாம் உருமாற்றம் அடைகிறீர்கள் - அமீபாவைப் போல… ஈதெல்லாம் ‘தமிழ்’ என்பதற்குள் வருமா? தமிழ் என்கிற அடையாளம் இத்தனை பன்முகத்தன்மையுடனிருக்கிறது என்று யாராவது நிரூபித்துக் காட்டினால் ‘நான் தமிழன்’ என்று மார்தட்டிக் கொள்ள நானும் தயார்தான்.
    சரி! றியாஸ் குரானா அலசி ஆராய்ந்து நான் தமிழன் என்று சொல்லிக் கொண்டு அதன் வழி நின்று என் பிரதியைக் கட்டுடைக்கிறார். இங்கு அவர் விமர்சனத்தை முன்வைப்பது என் மீது அவரே குத்திய அடையாள முத்திரை மீது மட்டுமே - என் பிரதி மீது அல்ல.
    அடையாள மறைப்பு என்பதை மிகவும் கெட்டிக்காரித்தனத்துடன் செய்கிற அந்தாரா/Antara (அத்துவான வெளி பதிவர்) போன்றவர்களின் பிரதிகளை எந்த அடையாளமுத்திரையை வைத்துக் கட்டுடைப்பார் இந்த றியாஸ் குரானா? அந்தாராவின் பிரதிகளில் அவர் ஒரு பெண் என்பது தவிர வேறெதுவும் தெரிவது இல்லை. அவர் முஸ்லிமா, கிறிஸ்துவப் பெண்ணா, இந்துவா, தலித்தா ஈதெல்லாததையும் அங்கு வைத்துக் கொள்ள முடியுமா உங்களால்??? றியாஸ் குரானாவைப் போல முத்திரைகளுடன் அலைபவர்கள் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார்கள் நண்பரே.
    ||அடையாள அட்டைகளைப் பரிசீலிக்கும் வேலையை இப்போதைக்கு சிங்களப் பொலிசாரிடமும் தமிழ்ப் பொலிசாரிடமும் விட்டுவிட்டு (முஸ்லிம் பொலிசார் இன்னும் உருவாகிவிடவில்லை என்ற நம்பிக்கையில்) நாம் உரையாடலுக்கு வரலாம். ||
    றியாஸ் குரானா பொலீஸ் வேலை பார்த்திருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எமக்குத் தகவல் வழங்குகிற தோழி ஒரு முஸ்லிம் என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் றியாஸ் உட்பட பெருவெளிப் போலீஸ்காரர்கள் அது யாரென்பதையும் கண்டு பிடித்து அவர்களை உசுப்பேற்றிச் சீண்டி விடுகிற குரூரம் கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
    ||உதாரணத்திற்கு, பெண்ணியவாதி ஒருவர், “உன் ஆண்திமிரைக் கொண்டெழும் உன் குறி மீது ஓங்கி ஒரு உதை விட விரும்புகிறேன்” என்றெழுதினால், அதை வன்முறையாகப் பார்க்குமா நம் மனம்? இழிவான முறையில் அவள் மேல் ஏறி உட்கார்ந்திருக்கும் நம் ஆண்திமிரை நாம் அறிவோம் என்பதனால், ‘உன் கோபத்தைக் குறைத்துக்கொள் ‘ என்ற ரீதியில் நாம் அவளுக்குச் சொல்ல முற்படுவதில்லை. ||
    ||மஹாகவியைச் ‘சாதிவெறியன் ‘ என்று சுகன் எழுதினால், (மரமேறும் எத்தன் பற்றிய குறும்பாவைக் குறித்து சுகன் எழுதியதை வாசித்த மனப்பதிவிலிருந்து சொல்கிறேன். நேரடியாக அப்படி எழுதியிருக்காவிட்டால், ஒருவேளை அப்படி எழுதினால் என்று வைத்துக்கொள்ளலாம்.) எழுத்தில் தெறிக்கும் வன்முறை, விரோதபாவம் நமக்கு உறுத்துவதில்லை. சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மீது எவ்வளவு வன்கொடுமைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லியே எங்கள் உரையாடலை ஆரம்பிப்போம். ||
    பெண்ணியம்/தலித்தியம் போன்றவற்றையும் இலங்கையின் முஸ்லிம் தேசியவாதத்தையும் ஒப்பிட முடியாது. முன்னரும் எமது வாசிப்புப் பிரதியில் நாம் சொல்லியது போல பெண்ணியம்/தலித்தியம் இரண்டுமே Perennial Realities. ஆனால் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை என்பது மிகவும் குறுகிய காலத்துக்குரியது. இங்கு வினையாற்றுகிற அந்நிய சக்திகள் மிக அதிகம். ஆண்களுக்கெதிராக பெண்களை, ஒடுக்கும் ஆதிக்க சாதிகளுக்கெதிராக தலித்துக்களை யாரும் தூண்டி விடவில்லை. அவர்களாகவே தமது விடுதலைக்காகப் போராடுகிறார்கள். இந்த முஸ்லிம் தேசியம் என்பது நியாயமான ஒன்றாகவே இருந்த போதும் கூட, அதன் வலிதாக்கத்தை யார் யார் என்ன நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அவ்வாறான பயன்படுதுதலை முஸ்லிம் தலைமைகள் ஏன் பார்த்துக்கொண்டும் வீசப்பட்ட எலும்புகளை நக்கிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதையும் விளங்கப் படுத்தத் தேவையில்லை. அம்பாறைக்கான இலச்சினை விவகாரத்தில் இந்தப் பெருவெளிச்செயற்பாட்டாளர்களோ அல்லது முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற மயோன் முஸ்தபா, அமீர் அலி உட்பட்ட அமைச்சர் பெருமக்களோ வாய் திறந்தார்களா??
    ||முஸ்லிம் தேசம் என்ற பேச்சு, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையால் உருவானதல்ல என்பதை எல்லோருமறிவோம். எனில், முஸ்லிம் தேசம் என்ற பேச்சில் உள்ள குறைகளைக் கண்டு சொல்வதற்கு முன்நிபந்தனையாக, ஒடுக்கியது குறித்தும், ஒடுக்குதலுக்குள்ளாகியவர்களின் வலிகள் குறித்தும் முதலில் பேசவேண்டியது நியாயம்தானே!
    நாம் அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எதிரானவர்கள்தான் என்ற அந்தரங்க சமாதானம் (அ.சுத்தியுடனானதுதானென்றாலும்) மட்டும் போதுமானதல்ல என்பதையே இந்த விவாதத்தின் போக்கும் நமக்கு உணர்த்துகிறது. அதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் உள்ள ஆபத்தும் உணரக் கூடியதே என்றாலும், சிலவற்றைப் பேசாமல் சிலவற்றைப் பேசுவதில் உள்ள வன்முறை பெரிதல்லவா?||
    ஒடுக்கியது குறித்தும் ஒடுக்குதலுக்குள்ளாகியவர்களின் நியாயங்கள் குறித்தும் நாம் பேசவில்லையா? கீழ்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்:
    பெருவெளி#03இற்கான வாசிப்புப் பிரதியிலிருந்து:
    ||இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமக்கான தனித்துவமிக்க அடையாளங்களைக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கலாச்சார இருப்பு என்பது தனக்கான அத்தனை நியாயங்களையும் கொண்டிருக்கிறது. முஸ்லிம் அரசியல் பற்றிக் கதையாடுபவர்கள் குறிப்பிடுவது போல, இலங்கை வாழ் முஸ்லிம்கள் இரட்டைப் பேரினவாத ஒடுக்குமுறையை அனுபவிக்கும் சிறுகதையாடல் சமூகத்தினராவர். ‘இந்துத்துவ இந்திய’ அடையாளம் தனது நிலப்பரப்புக்குள் வாழ்கிற சிறுகதையாடல் சமூகங்களைத் தனக்குள் கையகப் படுத்தும் செயன்முறையை விட வன்முறையான வழிமுறைகளால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் அடையாளத்துக்குள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகளின் பொதுமைப்படுத்தியணுகும் முனைப்பு தமிழர் தரப்பின் ஆதிக்க சக்திகளிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. ‘தமிழ்த் தேசியப்’ பெருங்கதையாடலினுள் இலங்கைவாழ் முஸ்லிம்களை உள்ளடக்கி விடுவதற்கான எத்தனிப்புக்களே கடந்த கால வரலாறு. ‘இலங்கைத் தேசியம்’ என்ற சிங்களப் பெருங்கதையாடல் முன் ‘தமிழ்த் தேசியம்’ முன்வைக்கப் பட்டதற்கு இருக்கும் அத்தனை நியாயங்களையும் முஸ்லிம்கள் தமது தரப்பு நியாயங்களாய்க் கொண்டிருக்கிறார்கள். ||
    ||முஸ்லிம்கள் தங்களுக்கான அழகியலை மறுவரையறை செய்துகொள்ளவும், மீள்கண்டுபிடிப்புச் செய்யவும் இருக்கிற சுதந்திரத்தை யாரும் மறுக்கவியலாது. அவர்களுடைய தனித்துவங்கள் தமிழிலக்கியப் பெருங்கதையாடலினுள் ஒதுக்கப்பட்டு வந்தது என்பதையும் பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ள முடிகிறது. தமிழிலக்கியப் பெருங்கதையாடல் தமிழ்த்தேசியப் பெருங்கதையாடலாய் மாறிப்போனதன் விளைவே அது என்றே நான் வாசிக்கிறேன். யாரும் திட்டமிட்டு அதைச் செய்துகொண்டிருக்கவில்லை. ‘தேசியவாதம்’ என்பதே வரலாறு முழுதிலும் மற்றவர்களை வெளியேற்றித் தான் வந்திருக்கிறது. அது தேசியவாதத்தின் தன்மை. தமிழ்த்தேசியவாதம் முனைப்புற்ற போது மற்றவை உள்ளொடுங்கிப் போகும்படி நேர்ந்தது அக்காலத்தின் போக்காக, மிக இயல்பான ஒன்றாக இருந்தது. ||
    நிற்க,
    அந்தரங்க சமாதானம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது எமது பிரதியாக்க வினைகளில் உள்ள முக்கிய குறைபாடு பற்றிய சரியான அவதானம் தான். சுட்டியமைக்கு நன்றி. நாங்கள் இதை உணர்ந்ததில்லை. ஆனால் முஸ்லிம்களின் வலிகள் தொடர்பில் இயலுமானவரை நாங்கள் கதைத்திருக்கிறோம். பௌஸர் போன்றவர்கள் இது தொடர்பில் முன்வைப்பவற்றுக்கு எமது பூரண ஆதரவு உண்டு. நாம் றியாஸ் குரானாவை எதிர்கொள்வதற்குப் ப்யன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் முஸ்லிம் தோழர்களின் மனதைப் பாதித்திருக்குமாயின் அதற்கு மன்னிப்புக் கோரத் தயார். [றியாஸ் குரானாவின் மனதைப் பாதித்திருந்தால் அது எமக்கு சந்தோஷமே]

  2. புத்தசூஃபிசித்தன் சொல்கிறார்||எந்த ஒன்றின் மீதும் எங்கள் மனச்சாய்வு இன்றி ஒரு எழுத்தைத் தன்னும் எழுதிவிட முடியாதென்பதை முரண்வெளி ஒப்புக்கொள்ளும் என்று நம்புகிறேன். (நடுநிலைப் பயங்கரவாதம் பற்றி அறிந்துகொள்ள நாம் பிபிசி சிஎன்என் வரை போகவேண்டியதில்லை, நமது நாளேடுகளே போதும் இல்லையா?) நாம் எந்த ஒரு வரியை எழுதும்போதும், அதன்மீது (பிரக்ஞைபூர்வமாகவோ பிரக்ஞையின்றியோ) நாம் எழுதாமல் மறைப்புக்குட்படுத்திய ஆயிரம் வரிகள் ஒளிந்துநின்று மூத்திரமடித்துக்கொண்டிருக்கின்றன. ||
    நடுநிலைப் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நாமும் அறிந்து வைத்திருக்கிறோம் தான். எந்த ஒன்றின் மீதும் மனச்சாய்வு இன்றி எந்த ஒரு எழுத்தையும் எழுத முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தால் அதை நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. நான் எந்த நிலைப்பாட்டில் உள்ளேன் என்பதில் எனக்குக் குழப்பமோ குழப்பம். [புத்தசூஃபி சித்தரே, நாங்கள் after all சின்னப்பெடியன்கள்/பெட்டையள் தானே ;-), அதாவது புத்தர்களோ சூஃபிகளோ சித்தர்களோ அல்ல. just a bunch of guys and gals!!!] நீங்கள் சொல்வது போன்ற மனச்சாய்வுகளை ‘தவிர்க்கமுடியாதவை’ என்று எங்களுடைய அறிவிப்புக்களில் தெரிவித்திருக்கிறோம் தானே… இந்த ‘மனச்சாய்வு’ என்பது இறுகிப்போன ஈரமற்ற இலட்சியப்பற்று/அதுபோலவொன்று உருவாக்கித் தருகிற மனத்திரட்சி அல்ல என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். மனச்சாய்வும் அமீபாத் தனமானதே.. நிமிசத்துக்கு நிமிசம் அந்த சாய்வின் தன்மைகள் மாறிக்கொண்டேயிருக்கும். கீழ்வரும் உதாரணங்களைக் கவனியுங்கள்;
    1. நான் தமிழ்நெற்/நிதர்சனம் யாழ் கருத்துக்களம் போன்ற இணையங்களை அவ்வளவு உவப்புடன் படிப்பதில்லை. ஆனால், தமிழ்நெட் தடைசெய்யப்பட்டபோது இலங்கை அரசின் மீது காலால் உதைய வேண்டும் போலிருந்தது. anonymoused ப்ரொக்ஸி ஊடாக தமிழ்நெற் இலங்கை அரசிற்கு பெப்பே காட்டியபோது ஒரு கணம் பெருமை+பெருமிதம்+பரவசம்+இலங்கை அரசிற்கு ஓங்கி ஒரு குத்து விட்ட திருப்தி எல்லாம் ஏற்பட்டது.
    2. மொட்டைமண்டையன்கள் வந்து அடிக்கடி கடுப்பேற்றுகிற ITN தொலைக்காட்சியின் அலைவரிசையைக் குழப்பிக் கொண்டு July 05 கரும்புலிகள் தினத்தன்று தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் மாலைநேர சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிய போது அதில் ஒரு பெரும் மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டது.
    3. ராஜீவ் காந்தி தற்கொலைத்தக்குதல் பற்றிய கமிஷன் அறிக்கைகள் ஆவணங்களை படித்துக் கொண்டிருந்தேன். ஆதிரை, சுபா, தனு போன்றவர்கள் அகிலாவுக்கு எழுதிய கடிதங்கள் அவர்களுடைய முன்னெடுப்புகள் பற்றிய விபரிப்புகளைப் படிக்கையில் மனசு கனத்துப் போய் அழவேண்டும் போலிருந்தது.
    4. ‘வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்’ ‘இனிவரும் இனிவரும் காலங்கள்’ போன்ற பாடல்களைக் கேட்கையில் என்னையறியாமல் நெகிழ்ந்து போகிறேன்.
    இவற்றிலிருந்து நானோர் புலி ஆதரவாளன் என்கிற முடிவிற்கு நீங்களோ அல்லது றியாஸ் குரானா போன்றவர்களோ வரலாம். ஆனால் நான் அப்படிக் கிடையாது என்று சொல்லிக் கொள்ளவும் என்னளவில் நம்பியும் வருகிறேன். ஆனாலும் தவிர்க்கமுடியாமல் மேற்குறிப்பிட்டது போல ஆகிவிடுவது ஏனென்பதைச் சிந்தித்துப் பாருங்கள், புலிகள் மீது எனக்கு ஆயிரத்தெட்டு விமர்சனங்களும் வெறுப்பும் உண்டு. ஆனால் நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதற்கான பதிலை என் 18 வருட கால வாழ்வனுபவங்களினூடு தேடிச்செல்ல வேண்டும்./ உடனடியாக விடை வேண்டுமென்றால், 95க்குப் பிறகான யாழ்ப்பாண அனுபவங்கள், இராணுவ ஒடுக்குமுறை + இருக்கிற ஒரே நம்பிக்கை என்று ஏதாவது ஒரு சமன்பாட்டைப் போட்டு விடையைக் கண்டு பிடியுங்கள்.
    OR
    இலங்கை அரசாங்க ரூபவாஹினி கிரிக்கெட் ஒளிபரப்பவென வைத்திருக்கிற அலைவரிசையான Eye இல் வாசுகி சிவக்குமார்/விசு கருணாநிதி/ அனந் பாலகிட்னன் போன்றவர்கள் தோன்றி ‘பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட தொப்பிகலவில் துட்டகெமுனு மன்னன் படைப்பயிற்சித் தளமொன்றை வைத்திருந்தான் என்பதை தொல்லியளாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் அவர்கள் இதன் மூலம் LTTEயினரின் போலியான தாயகக் கோட்பாடு பொய்ப்பிக்கப் பட்டு விட்டது என்றும் கூறினர்’ என்று செய்தி வாசிக்கையில் ஒரு தமிழனாக உங்களுக்கு எந்தவகை உணர்வுகள் ஏற்படுகிறது??? [தொப்பிகலையின் பெயர் குடுமிமலை - முரண்வெளி]
    இலங்கையில் ‘தமிழ் என்கிற அடையாளத்துள்ளும்’ வாழ நேர்ந்து அந்த அடையாள இருப்புகளின் மீது செலுத்தப்படுகிற வன்முறைகளை அனுபவிக்க நேர்ந்த என் போன்ற ஒரு உயிரி அப்படியான ஒரு மன அமைப்புடன் தான் இருக்கும்.
    சாய்வு உண்டென்பதை பெருவெளி-முரண்வெளி விவாதங்களுக்கு முன்பே/ முரண்வெளி blogspotஇல் தொடங்கப்பட்ட போதே தெரிவித்திருந்தோம் - றியாஸ் குரானா அலசி எடுக்கவேண்டிய தேவை ஏதுமில்லை.
    இந்த மனச்சாய்வு என்பது மிகத்தற்காலிகமானது - உணர்வு வயப்பட்டது. இதை மீறிய ஒரு மனநிலையில் எழுதப்பட்டவையே முரண்வெளியிலிருக்கும் இடுகைகள். இந்தளவு இடியப்பச் சிக்கலுடன் எனது மனதின் பிரதியாக்க வினையை சொல்லுவதற்கு மன்னிக்கவும். இதுவும் கூட தெளிவான ஒரு அலசல் அல்லதான்… புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  3. புத்தசூஃபிசித்தன் சொல்கிறார்||அதேசமயம் பேசமுடியாப் பொருளையெல்லாம் பேச உசுப்பேற்றிக் கூத்துப் பார்க்கும் குரூரமும் நமக்கு வேண்டாம். ||
    இப்படியொரு சிக்கல் கடந்த தலைமுறை & அதற்கு முந்திய தலைமுறை நபர்களிடம் இருந்தது. வலைப்பதிவுக் காலத்தில் அதெல்லாம் இல்லை. எதுதான் பேச முடியாப் பொருள்? இது வேறொரு காலம்.
    புத்தசூஃபிசித்தன் சொல்கிறார் ||இதுகூட நமது விருப்பத்துக்கேற்ப ஒருவரைச் செப்பனிட்டுக்கொள்ள முயலும் ஆலோசனை வழங்கலாகவே முடிகிறது. என்ன செய்ய? ஆலோசனைகள் சொல்வதற்கான உந்துதலை எவ்வளவு முயன்றாலும் அடக்கிக்கொள்ள முடியாமல்தான் இருக்கிறது!||
    நண்பரே, எப்படி சோஷலிஸ எதார்த்தவாதத்தை நமது முற்போக்குக்காரர்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வரம்பிட்டுக் கொண்டு Zhadanovistகளாக மாறினார்களோ அதைப் போலவே பின்நவீன ஜடனோவிஸ்டுகள் ‘ஆலோசனை வழங்குதல் ஒரு நுண்ணரசியல் மிகு செயல்பாடு - அப்படித்தான் பூக்கோ சொன்னார்’ என்று சொல்லக் கூடும். நீங்கள் எமக்குச் சொல்கிறவற்றை நாம் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. ஒருத்தர் அதல பாதாளத்தில் விழ இருக்கிற நேரத்தில் அவரைக் கைகொடுத்துத் தூக்கி விடுவதைக் கூட நுண்ணரசியல் மிக்க பெரும்பாவமாக இவர்கள் சொல்வார்கள். [எதில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென்றால், கைகொடுத்துத் தூக்கியவர் அந்த ஒரு காரணத்தால், காப்பாற்றப்பட்டவர் மீது எடுத்துக்கொள்கிற உரிமை&அதிகாரம் மீதுதான்.] ‘யாருடைய எதிர்பார்ப்புக்களுக்காகவும் நான் எழுதுவது இல்லை’ என்கிற இலக்கியக்காரப் பதிலை நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன். என்னை/எனது பிரதியாக்க வினையை செப்பனிட்டுக் கொள்ள உங்களைப் போன்றவர்களின் உதவி தேவை - மிகவும் நேசத்துடன் அதை எதிர்பார்க்கிறேன். அதுவே அதிகாரமாக மாறுகையில் நிராகரிப்பது/எனக்கான இடத்தை எடுத்துக் கொள்வது எப்படி என்று எனக்குத் தெரியும்.

  4. புத்தசூஃபிசித்தன் சொல்கிறார்||இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்படவில்லை/ ஒடுக்கப்பட்டோரின் கூட்டணிக்குள் அவர்களுக்கு இடமில்லை| எனக்கு இந்தக் கருத்துடன் துளியளவும் உடன்பாடு இல்லை. ஒடுக்கப்பட்டோர் கூட்டணியின் கமிசார்களாக உட்கார்ந்திருப்பவர்களில் ஒரு சிலர் இப்படிக் கூறிக்கொண்டிருப்பதன் காரணங்களை நாமறிவோம். அது அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களின் வழியாக எழுந்தது - உணர்வு நிலைப்பட்டது. ‘தமிழ்’ என்று இலங்கை அரசால் அடையாளப்படுத்தப்படும் ஒவ்வொருத்தருமே ஒடுக்குதலுக்குள்ளாகியவர்கள்தான். இதில் தலித் என்ற வகைப்பாட்டினுள் வருவோர் (தமிழராக இருந்ததால்) இலங்கை அரசிடமிருந்தும், (பஞ்சமராக இருந்ததால்) வெள்ளாள தமிழ்த்தேசியத்திடமிருந்தும், (வறியவர்களாக இருப்பதால்) முதலாளிகளிடமிருந்தும் நாயடி பேயடி வாங்கியிருக்கிறார்கள். அவர்களது அடையாளங்களில் ‘தலித்’ ‘வறியவர்’ ‘தமிழ்’ என்ற மூன்றின் காரணத்திற்காகவும் அவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இது எப்படியான ஒரு நிலமை என்று கேட்டால், பறையர்Xஅருந்ததியர் நிலவரங்களைப் பார்க்குமாறு கூறுவேன். பறையர் என்கிற சமூகம் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம். ஆனால் அதுவொன்றும் சுத்தமான சூசைப்பிள்ளையல்ல. அது தன் பங்கிற்கு அருந்ததியரையொத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஒடுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இரண்டு தரப்புமே தலித் என்பதற்குள் இணைவுகொண்டு பொதுவான ஒடுக்குமுறையாளரை எதிர்கொள்கின்றன - இல்லையா?
    நீங்கள் குறிப்பிடுகிற ‘ஏழை பிராமணர்’ உதாரணத்தில் உறுத்துவது/ஒடுக்கப்பட்டோர் கூட்டணிக்குள் அவரை நுழையவிடாது தடுப்பது; ‘பிராமணர்’ என்கிற அடையாளத்தை இன்னமும் அவர் கைவிடாதிருப்பது தான். வறியவர் என்ற வகையில் அவர் ஒடுக்கப்பட்ட/சுரண்டப்பட்ட ஒரு உயிரிதான் - இதை தலித்தியக் கமிசார்கள் தமது உணர்வுவயப்பட்ட நிலையிலிருந்து மறுக்கக் கூடும். ஆனால், தினமலரை நடாத்திக் கொண்டிருக்கிற பார்ப்பனருக்கும் ஒருநேரக் கஞ்சிக்கு ஒருகாத தூரம் நடந்து தனது குலப்பெருமை காட்டிச் சம்பாதிக்க நேர்ந்திருக்கிற ஒருத்தனுக்கும் இடையேயுள்ள நுட்பமான இடைவெளி புரிந்து கொள்ளக்கூடியதுதானே? அவ்வறியவன் ஒடுக்கப்பட்டவனாக இருக்கும் அதே நேரம் ஒடுக்குமுறையாளனாகவும் இருக்கிறான். எவனது ஒடுக்குமுறை கொடிது என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! இவனை நீங்கள் தொடர்ச்சியான பிரச்சாரங்கள்/கலந்துரையாடல்கள்/இன்னபிற செயல்பாடுகளால் மாற்றி அமைத்து விடுதல் சாத்தியம். ஆனால், பலகோடி ரூபாய்களில் புரள்கிற இந்தியப் பார்ப்பனனை என்ன செய்து விட முடியும்? தலித்திய செயற்பாட்டாளர்கள் இந்த வேறுபாடுகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டே தமது வேலைத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அவர்களது சமூக மாற்ற செயல்திட்டங்களில் வறிய (முன்னாள்)பிராமணர்களின் கரங்களும் சேர்ந்தால் கிடைக்கக் கூடிய பலம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது அல்லவா? இது தலித் என்ற அடையாளம் எனக்கும் பொருந்தும் என்கிற கூச்சல் அல்ல, ஒருவித கவித்துவமான நேசமிக்க புரிந்துணர்வு என்று கொள்ளுங்களேன். நீயும் ஒடுக்கப்பட்டிருக்கிறாய் - ஆதிக்க சாதிகளால், நான் ஒடுக்கப்பட்டிருக்கிறேன் - முதலாளி வர்க்கத்தால், இருவரும் சேர்ந்து பயணிக்கக் கூடியதன் சாத்தியங்களை யோசிப்போம்: நான் உனது விடுதலைக்காகவும் நீ எனது விடுதலைக்காகவும் குரலெழுப்பத் தொடங்குவோம். இப்படியானதொரு இணைவின் சாத்தியங்களை ஏன் கனவு காணக் கூடாது?

    MURANVELI
    பிறப்பால் தமிழராக இருப்பதால் முரண்வெளி மீது தமிழ்ப்பேரினவாத முத்திரை குத்தப்படுகிறது. இது நீண்ட விவாதத்துக்குரிய ஒன்று. எம்மிடம் தமிழ்த்தேசியவாத/தமிழ் இனமான உணர்வுகள் எம்மை மீறி வெளிப்பட்டிருக்கலாம் தான், அதை விமர்சனபூர்வமாய்க் கட்டுடைப்புச் செய்கிற முயற்சிகளை வரவேற்கிறோம். ஆனால், றியாஸ் குரானா வெறுமனே வார்த்தைப் பிரயோகங்களை வைத்துக் கொண்டு ஜல்லியடிப்பதை வேறெதுவும் செய்துவிடவில்லை. தமிழர்தேசத்தின் குரலென பலராலும் போற்றப்பட்டதும் தமிழர்களுக்கான பேராதரவுப் பிரதியெனக் கருதப்பட்டதுமான அமௌனனின் ‘வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர்’ பிரதியை தமிழர் தேசத்தின் தளைகளுக்கும் போலித்தன்மைகளுக்கும் எதிரான பிரதியாக சனன் வாசிப்புச் செய்து காட்டியமையை (காண்க: பெட்டை வலைப்பதிவில் நடந்த விவாதம்) இவ்விடத்தில் நினைவு படுத்துகிறோம்.

  5. 22-07-2007
    நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்றே எனக்குப் படுகிறது. அவையெல்லாம் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தவையும்தான் என்பதில் சந்தேகமில்லை.
    அதற்குமேல் அவற்றை அழுத்தும் அளவிற்கு அவற்றின் மீதான திடமான நம்பிக்கைகள் எவையும் என்னிடமில்லை. (இதற்குவேறு, ‘அடக்கமுள்ள சூஃபியாக, ஒதுங்கிநிற்கும் சித்தனாக ‘ என்று எதையாவது சொல்லப்புகுந்தால் கூச்சம் தாங்கமுடியாது போய்விடும், வேண்டாம்.) உண்மை இதுவே. நான் சரியென்று நினைப்பது தவறாகவும் இருக்கலாம் என்ற அந்தரங்க உறுத்தலோடுதான் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
    காரணங்களைச் சொல்லி வருமாக இருந்தால் ஏற்போ, நிராகரிப்போ இரண்டும் என்வரையில் சம முக்கியத்துவமுடையவையே.

    என் அபிப்பிராயங்கள் அதிகாரமாக மாறுமானால் நிராகரிப்பதன் மூலம் நீங்கள் சுலபமாகத் தப்பிக்கொண்டுவிடலாம். ஆனால், அதிகாரம் செலுத்தும் ஆசை எனக்குள் வந்துவிடாதிருப்பதற்கு, நான் முன்கூட்டியே கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்தாக வேண்டும்.

    நம்மை நோக்கிச் செலுத்தப்படுகின்ற அதிகாரத்தை மறுப்பது இருக்கட்டும். அது மிகத் தெளிவானது. நம்மிடமிருந்து உருவாகும் அதிகாரங்கள் பற்றி விழிப்பும் எச்சரிக்கையுமாக இருந்துகொள்வதற்கே பெரும் சிரமம் தேவைப்படுகிறது. அதுவும் அதுபற்றிய அறிதலெதுவும் பெருமளவில் உருவாகாத சூழலில், முதலில் நம்மை உடைத்துப் புரிந்துகொள்ளுதலும் பகிர்ந்துகொள்ளுதலுமான செயற்பாடே அதிகளவு முக்கியமாகிறது.
    மனுஷ்யபுத்திரன் கவிதையொன்றில், “தோழர் ஹிட்லரிடம் துரதிர்ஷ்டவசமாக பெரிய ஆயுதங்கள் இருந்துவிட்டன. நாமும் நம்மிடமுள்ள குண்டூசியை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டுதானே இருக்கிறோம் ” என்று வருகிறதல்லவா? அந்தக் குண்டூசிகளைத் தெரிந்துகொள்வதும் பகிரங்கப்படுத்துவதும் கூட மற்றவர்களிடமுள்ள ஆயுதங்களை மறுப்பதற்கு முன்னுதாரணமான நடவடிக்கைதான் என்று நம்புகிறேன்.
    என்னிடமுள்ள ஆயுதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி நான் கீழே போடுவதன் மூலம் மற்றவர்களும் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான ஒரு முயற்சிதான்.
    சண்டை மூலம் பணியவைத்துத் தீர்வைக் கண்டுகொண்டுவிடலாம் என்பது ராஜபக்ஸக்களினது வழிமுறையல்லவா?
    சுற்றிவளைத்து மீண்டும் கரம்சிங் காந்தியாரிடம்தான் போகவேண்டியிருக்கிறது. வன்முறையற்ற சூழல் உருவாவதற்கு காந்தியும் முக்கியமானவர் என்பதை பின்நவீனகாரரும் இப்போது சொல்கிறார்கள்தானே!

    நாம் நிலத்திலிருந்து மேலெழும்பி, அடையாளங்களைத் துறந்துவிட்டதாக அறிவித்து ஆகாயத்தில் நின்றுகொள்வது, நம்மிடமிருக்கும் குண்டூசிகளையோ குண்டுகளையோ மறைத்துக்கொள்வதற்காகத்தான் என்று மற்றவர்கள் நினைத்தால், அந்த அடையாள மறுப்பினால் ஆகப்போவது என்ன?

    பெருவெளி குழுவினர் மீதான உங்கள் விமர்சனங்கள்…, மிக நுண்மையாக ஊடுருவி எழுத்திலிருந்து அவர்கள் அகத்தைச் சலித்தெடுக்கும் உங்கள் பார்வை குறித்ததல்ல என் குறுக்கீடு என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். தேசியக் கனவில் விழுந்து நம்போல அவர்களும் தவறாகப் போய்விடக் கூடாது என்பதுதான் எமது அக்கறையும் அவதானமுமாக இருந்தால், அதைச் சொல்வதற்கு எங்களிடம் படபடப்போ எகத்தாளமோ ஏன்? அவர்களைத் தட்டிவைத்துவிட முந்தும் அவசரம் ஏன்? உயரத்தில் நின்று பேசும் தொனி ஏன்?

    அமீபாவாக மாறியபடியோ அல்லது கடலில் மிதக்கும் தாழங்காயாக தேச எல்லைகளின்றியோ வாழ இருக்கும் ஆசையை, கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக முன்நிறுத்துவது நியாயம்தானா?
    மீண்டும் இதுவேதான் சொல்ல வருகிறது. பெண் ஒடுக்குமுறை பற்றிய குற்றச்சாட்டுகளோ சாதியொடுக்குமுறை பற்றிய குற்றச்சாட்டுகளோ நம்மை நோக்கி வரும்போது, நாம் அடையாளமற்றவர்கள், சாதி மதமற்றவர்கள் என்று ஒளிந்துகொள்ள முடியுமா? நம் அடையாளங்களில் நின்றுதானே அவற்றை எதிர்கொள்ள வேண்டும். (பெண்ணிய, தலித்திய, முஸ்லிம் ஒப்பீடு என்பது, இன்றைய திகதியில், என் விருப்பம் விருப்பமின்மைக்கு அப்பால் என் பெயராலும், ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுபவர்கள் என்ற அளவில்தான். சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழர்களையும் இந்த ஒப்பீட்டுக்கு இணைத்துக் கொள்ளலாம் என்றவாறு….)

    நாம் அடையாளங்களைத் துறக்க விரும்புவது, அவற்றின் ஒடுக்குமுறை-அதிகார-ஆதிக்க விருப்புக் குணாம்சங்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளும் வினையின்பாற்பட்டதே தவிர, நம்மை நோக்கி யாரும் விரல் நீட்டிவிடாமல் மறைந்துகொள்வதற்காகவா? திடீரென்று அடையாளத்தை விட்டெறிந்துவிடுவதற்கு, நாம் இன்றைய நம் சிந்தனைகளால் மட்டுமா உருவாக்கப்பட்டிருக்கிறோம்?
    அகத்தைக் கட்டுப்படுத்தும் சக்திகளை அகத்தால் கூட காணமுடிவதில்லை. அவற்றை வெல்வதும் எளிதாக இல்லை.

    சில விஷயங்களில் எனக்கும் உங்களுக்கும் பெருமிதங்கள், பரவசங்கள், கோபங்கள், நெகிழ்ச்சிகள், ஆவேசங்கள் ஒரேவிதமாக இருப்பது ஏன்? உங்கள் பின்னூட்டக் கடிதத்தில் 1-4 வரை இலக்கமிடப்பட்ட உதாரணங்கள்… சிங்கள அல்லது முஸ்லிம் நண்பர் ஒருவருக்கு அந்த உணர்வுவயப்பட்ட நிலைகள் மிகத் தற்காலிகமாகவேனும் ஏற்படுமா?
    ‘ குடும்பிமலை துட்டகெமுனுவுக்குச் சொந்தம்’ எனும்போதும், ‘ நான் எந்த ஒரு இன அடையாளத்திற்கும் உரியவன் அல்ல; இந்த நாட்டிலுள்ள இனங்கள் அனைத்துக்குமானவன்; எல்லோர் நலன்களுக்குமாக மாறி மாறிக் கொண்டிருப்பவன் ‘ என்று மகிந்த ராஜபக்ஸ சொல்லும்போதும் எரிச்சல் உண்டாவதால்தான் நாங்கள் தமிழர்கள் என்று நினைக்கிறேன் நண்பர்களே!
    தமிழ்த் தேசியவாதிகளிடம் “நான் உங்களவனில்லை ” என்பதைச் சொல்லிக்கொள்ளலாம். தமிழ்த் தேசியவாதிகளால் ஒடுக்கப்படுகிறவர்களிடம் நான் தமிழனில்லை என்று ஓடி ஒளிவதில் எந்த நியாயமும் இல்லை. தமிழ்த் தேசியவாதிகளில் சேராதவன் நான் என்பதை அவர்கள் நம்பும் விதமாய் எடுத்துச் சொல்ல முடிந்தால் அது நம் வெற்றிதான்.
    அதைவிடுத்து, “பௌசர் போன்றவர்களுக்கு நம் ஆதரவுண்டு ” என்று நீங்கள் சொல்வது தயான் ஜயதிலக, “டக்ளஸ், சங்கரி போன்றோரின் நிலைப்பாட்டுக்கு எங்கள் ஆதரவுண்டு ” என்று சொல்வதைப் போலத்தான் பெருவெளியினருக்குப் படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியாதா?

    பேசமுடியாப் பொருளையெல்லாம் முடிந்தவரை பேசாது தவிர்த்துக் கொண்டிருப்பதால்தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன். உங்களது இந்த சர்வசுதந்திர வலைப்பதிவுக் காலத்திலும், எதுவேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஜனநாயக மாயப்பிசாசை நம்பி வாய்திறக்குமளவுக்கு நாமின்னும் உயிராசையைத் துறந்துவிடவில்லை. நாம் எதை, எவ்வளவு பேசவேண்டும் என்பதை, அவ்வப்போது படுகொலையாகிக் கொண்டிருப்பவர்கள் நம் ஆழ்மனதில் பதித்துவிட்டுத்தான் போய்க்கொண்டிருக்கிறர்கள். காலை, மாலைச் செய்திகளில் மறுபடி மறுபடி நமது விமர்சனச் சுதந்திர அளவு ஞாபகப்படுத்தப்பட்டபடியும்…..
    நீங்கள் குறிப்பிடும் “இது வேறொரு காலம்… வலைப்பதிவுத் தலைமுறை ” என்பதையெல்லாம் எனக்கு விளங்கிக்கொள்ள முடியவில்லை, மன்னியுங்கள்.

    உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் (பிராமணர், வெள்ளாளர் இன்னோரன்னோர்….) தாங்கள் சாதியடையாளத்தைத் துறந்துவிட்டவர்கள், எந்த சாதியுமற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடிவதுபோல் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குச் சொல்லிக்கொள்ள முடியாதிருப்பது அந்த ஒடுக்குமுறையின் பரிமாணத்தை விளக்கும் என்று நினைக்கிறேன். ஆகவேதான் இந்த ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள், எல்லாம் துறந்தவர்களாய் அந்தரவெளியில் மிதக்காமல், ஒடுக்கப்படும் சாதிகளோடு தங்களையும் அவர்களிலொருவராய் இணைத்துக்கொள்வதே அந்தக் கூட்டணியோடு சேரும் வழி என்பதாய் அவர்கள் சொல்கிறார்கள்.
    82ல் என்று நினைக்கிறேன். இதைச் சொல்லிய சாருநிவேதிதா, “இப்படித்தான் நான் பறையனானேன் ” என்றறிவித்தார். (அதனால்தான் அவர் தன் இளமைப்பருவம் பற்றி என்னதான் மலம் அள்ளிய சுயபுராணம் எழுதினாலும், பிறப்பால் அவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரில்லை என்றே கருதிக்கொண்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்டோருடன் இணைந்துகொள்ள, ஒருவர் தன்னைக் கீழ்நிலைப்படுத்திக்கொள்ளும் முயற்சி என்றே அதைப் பார்க்கிறேன்.)

    மாறாக, குடும்ப அமைப்பால் நீ ஒடுக்கப்படுகிறாய், பொருளாதார அமைப்பால் நான் ஒடுக்கப்படுகிறேன் என்கிற ஒரு சமப்படுத்தலை என் தோழியிடம் சொல்ல முடியுமா யோசிக்கிறேன். நான் பால்வேறுபாடுகளைத் துறந்தவன் என்ற சொல்லளவிலும் அவளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட முடியாது. நான் சுமக்க நேர்ந்துவிட்ட இந்த அடையாளங்களால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பகுதியினருடன் உரையாடலுக்கு இறங்கும்போது அவர்களது நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது முன்தேவையாகிறது. எனது பேச்சின் தொனியில் பெருமளவு அதிகார நீக்கம், வன்முறை நீக்கம், ஆதிக்க உணர்வு நீக்கம் என்பவற்றுக்கு முயன்றுகொண்டிருக்க வேண்டும் என்பதாய் நான் கருதுகிறேன்.

    எழுத்தாளர் அசோகமித்திரன் ஒன்றும் உயர்சாதி முதலாளி அல்ல. வன்முறை எதிர்ப்பு, ஆதிக்கமனோபாவ எதிர்ப்பு, பெண்களை இந்த சமூகம் வைத்திருக்கும் நிலை பற்றிய விமர்சனபூர்வமான பார்வை போன்றவற்றையே தன் எழுத்தின் அடிநாதமாய்க் கொண்டவரும்கூட.
    பிராமண சமூகம் 30களிலிருந்த யூதர்களைப் போல மிகுந்த கஷ்டங்களுக்குட்பட்டுக் கிடக்கிறது என்றுதான் அவரால் கவலைகொள்ள முடிகிறது. சிறுபத்திரிகைகள் பெருமளவுக்கு தலித்திய விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டதால், ‘சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்துவிட்டது ‘ என்று அவருக்குப் படுகிறது.
    இப்போதைய தன் சமூக நலிவுக்கு வருத்தப்படும் அவரால், பல நூறாண்டு காலமாக தான் சார்ந்த மற்றும் உயர்சாதிகளால் மிருகங்களைவிடக் கேவலமாக இழிவுபடுத்தப்பட்டுக் கிடந்த சாதி மக்கள் குறித்து ஞாபகங் கொள்ள முடியாதிருக்கிறது. மக்களில் பெரும்பான்மைப் பகுதியினர் தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது யாரால் என்பதைத் தெரிந்தவர்தானே அவர்? ஆயினும் அவர்களது வலியை நினைக்கவோ உணரவோ முடியாமல்தானே போகிறது அவருக்கு?

    வெங்கட் சாமிநாதனுக்கு, கோயில்களை அண்டி கலைகள் செழித்துக் கிடந்த காலம் போய்விட்ட பிறகு, சமூகம் பாலையாகக் காண்கிறது. கலைகள் செழித்துக் கிடந்த காலத்தில் கோயிலின் அருகே வரமுடியாமற் செய்யப்பட்டிருந்த ஒரு பெருந்தொகை மனிதர்களை, ‘மக்கள் ‘ என்பதினுள்ளேயே அவரால் நினைத்துப் பார்க்க முடியாமலிருக்கிறது.

    சுந்தர ராமசாமி சொன்னதாக ஜெயமோகன் சொன்னது : “காலம்பற கதவைத் திறக்கிறேன் , கொழந்தைகளுக்குப் பாட்டு சொல்லிக் குடுக்கிறாங்க. ஓ…ன்னு கத்தி பாடறதுகள். ‘ எங்களை ஹரிஜன்னு சொல்ல நீ யாருடா கேடுகெட்ட நாயே ‘ன்னு… கண்ணீர் வந்துடுத்து. அதுகளுக்கு என்ன தெரியும் ? என்ன படிச்சிருக்கும்ங்க ? ஆராய்ந்து பாக்கிற பக்குவம் இருக்குமா ? ஏதோ சாப்பாடு, எடம் இருக்குன்னு வந்து படிக்கிற ஏழைகள். மனசில ஆழமா வெறுப்பை உட்கார வைச்சாச்சு. அது மாறவே மாறாது. காந்தி மேல மட்டுமில்ல, காந்தியை ஐடியலா வைச்சிருக்கிற இந்த தேசம் மேலேயே வெறுப்பு… அதனால் யாருக்கு என்ன இலாபம் ? அன்னியப்பட்டுப் போன ஒரு தனி சமூகம் உருவாகும்ங்கிறத விட்டா என்ன நடக்கும் ? யாரு இதையெல்லாம் பிளான் போட்டு செய்றா? புரியலை…”
    இதுவும் ஒரு மனிதாபிமான மனதின் வருத்தம் போலத்தான் முதல் பார்வைக்குத் தெரிகிறது.
    ஆனால், “ஆயிரங்காலம் அடிமை என்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே.. ” என்று கேட்கும் தலித்தின் நூறாண்டுக் கோபம், அந்த இலக்கிய மேன்மை உள்ளத்துக்கு எப்படி விளங்காமலே போய்விடுகிறது?

    ஞாநியை உயர்சாதியைச் சேர்ந்த ஒருவராக அவரது எழுத்துக்கள் செயற்பாடுகளிலிருந்து நம்மால் கண்டுகொள்ளவே முடியாதிருந்தது. ஆனால், இளையராஜா, கருணாநிதி போன்றவர்கள் மீது விமர்சனத்தை வைக்கும்போது அவர் எழுதுகின்ற முறைக்கும் காஞ்சிமட ஜெயேந்திரர், சுஜாதா, சோ போன்றவர்களை விமர்சிக்கும் போது அவர் எழுதுகின்ற முறைக்கும் (எல்லாமே அவரது மனப்பூர்வமான தாக்குதல்கள்தான்) உள்ள வேறுபாட்டை கவிதாசரண் மிக நுண்மையாகத் தொட்டுக்காட்டுகிறபோது, ஆழ்மனதின் விலக்குதல் செயல்பாட்டை அறிந்து திகைக்க வேண்டியிருக்கிறது.

    ஒடுக்குதல் என்பது செயலாலோ பேச்சாலோ எழுத்தாலோ மட்டுமே நிகழ்த்தப்படுகிறதா? சாதி, மத, இன, மொழி, பால், படிப்பு, பணம், புகழ், திறமை என்று ஏதாவது ஒன்றையொட்டி தன் நிறத்தை வித்தியாசப்படுத்திக் கொள்கிற குணமே அடுத்தவரை ஒடுக்குவதற்கான அடிப்படைதானே? மனதளவில் கொள்கிற பெருமிதம், ஏதாவது ஒருவிதத்தில் தன்னைப் பிரித்து உயர்த்திக்கொண்டு சிந்திக்கிற மனம் எல்லாமே ஆதிக்க உணர்வைச் சேர்ந்ததுதானே? பணம் படைத்தவர்கள், பதவியிலிருப்பவர்களிடமிருந்து மட்டும்தான் ஒடுக்குதல் நிகழ்கிறதா?

    ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு சிறைத்தண்டனை கிடைத்த அவனது மந்திரிகளில் ஒருவர் ( ALBERT SPEER) , பதவியிலிருந்தபோதும் ஹிட்லரின் வதைமுகாம் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டதில்லை. ஆனாலும் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்: “வதைமுகாம்கள் இருப்பது தெரியாமல் இருந்ததே நான் செய்த குற்றம்தான் ” என்பதாக.
    ஒருநேரக் கஞ்சிக்கு ஒரு காத தூரம் நடப்பவரும் ஒடுக்கப்பட்டுக் கிடப்பவர்களின் வலியை உணராமல் அல்லது தெரியாமல் அவர்களது வலிதான் எனக்கும் என்று சொல்ல முற்பட்டால் அது குற்றமாகாதா?

    இப்படியே போனால் உங்களுக்கும் எல்லோருக்கும் தெரிந்தவற்றையே நான் திரும்பத் திரும்பப் பினாத்திக் கொண்டிருப்பதாகிவிடும்.
    முரண்வெளியின் கூரிய அவதானங்களும் அக்கறைகளும் எகத்தாளம் குறைந்து, எள்ளலோடு வெளியே நிறுத்துதலைத் தவிர்த்து வெளிப்பட வாய்ப்பிருக்கிறதா என்று தேடியபடியும், பெருவெளியினருடனான உரையாடல் இங்குள்ள சிறுபான்மைச் சமூகங்களிடையேயான புரிதலுக்கும், ஒடுக்குதலுக்குள்ளாகிறவர்களின் கூட்டுக்கும் அவரவர் பாதைகளைச் செப்பனிட்டுக் கொள்வதற்கும் வகையாகுமா என்று காண்பதற்குமாய் மட்டுமே உங்களுக்குள் குறுக்கிட்டபடியாக….

  6. விம்பிப் பழுக்க எத்தனிக்கும் எழுத்தும் கூத்தும் X முரண்கள் நிறைந்த தமிழ்த் தேச ஆணவத் திமிரும்
    ______________________________________________
    புத்தசூபிபித்தனிற்கு நன்றி என்பதினை ஒரளவு சொல்லிக் கொண்ட பெருவெளி X முரண் வெளி தெருச்சண்டை?யின் பின்னான பதிவுகளில் முஸ்லிம் தேசத்தில் இருந்து என் வாசிப்பினையும் அதன் ஊடாட்;டத்தினையும் முன் வைக்க நினைக்கிறேன்.
    (இப்பிரதியில் இருந்து பல்வேறு வரிகள் புத்தசூபிபித்தனின் பிரதி வாசிப்பின் பின் நீக்கப்பட்டதால் இப்பிரதி தொடர் நிலை அறுந்து காணப்படும்.)

    முரண் வெளி net இனையும் அங்கு ஆரோக்கியம்/ விம்பல் என்பனவற்றோடு அதி நவீன கேவலத்தின் வெளிப்பாட்டாய் நடந்து கொண்டிருக்கும் பெருவெளி ஒ முரண் வெளி விவாதத் தொடர்ஃ சாக்கடை எழுத்தாளர்களின் வாய்நாற்றங்களினை ஒரு நண்பனின் துணையுடன் அறியக் கிடைத்தது. பின்னர் தொடராக அதன் பார்வையாளனாக இருந்து வந்தேன். இங்கு ஒன்றினைக் குறிப்பிட வேண்டும். றியாஸ் குரானா துக்கிப் பிடித்து தம்பட்டம் அடித்து தன்னை அடையாளப்படுத்த எத்தனிக்கும் மலைத்தேசம் உட்பட அனைத்து தேசங்களினதும் அகதி என்ற வகையில், உங்களின் இந்த கூத்து இன்னொரு வகையில் சொன்னால் செத்துக் கிடக்கும் இத்தீவின் கருத்தியல் தளச்செயற்பாட்டில் ஏதோ நிகழ்வுகள் நடைபெறுவதினையும் உரையாடும்/ விவாதிக்கும் சுதந்திரம் வலைப்பதிவு அளவிலேனும் இருக்கிறதே என்பது தெம்பைத் தருகிறதது.

    அறிவிப்பு– 1

    பெருவெளியின் வருகையும் தமிழ் தேச ஆணவத்திமிரும் + முஸ்லிம் நாகரீகத்தின் மீதான வெறித்தனமும்.

    இலங்கை முஸ்லிம் சூழலில் பெருவெளியின் வருகை அரசியல் வங்குரோத்திற்குள் முஸ்லிம் தேசம் சிக்கித்தவித்தாலும் அது மௌத்தாகி அழிந்து விடவில்லை. அந்த சமூகத்தின் அரசியல் பிரக்ஞையும், அந்த நாகரீகத்தின் ஊசலாட்டமும் இன்னும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதனை வெளிப்படுத்தியது. மூதூரைப் பற்றியும் அங்கு நடந்த இனக்கொடூரங்களின் கேவலத்தினையும் வெளிப்படுத்தல் நிச்சயமாக கொடூரங்களினைச் செய்தோருக்கும் இன்னும் செய்து கொண்டிருப்போருக்கும் எரிச்சலூட்டும்தான். வடக்கில் இருந்து தூய்மையாக இனச்சுத்திகரிப்புச் செய்த போது யாரும் எதிர்த்துக் கத்தவில்லையே… இப்போது இவனுகள் கத்துரான்களே அதை நசுக்க என்ன வழி??

    மற்றும் பெருவெளி முன்வைத்த பிரதிகளினால் குழம்பிப்போன தமிழ் தேசம் என்னவெல்லாமோ கதைகட்டித் திரிந்தது, திரிகிறது என…

    இத்திமிரில் அதி உச்சத்தினை முரண்வெளி வலையேற்றத்தில் “கெட்டழிந்த சமுதாயத்தில் இருந்து எதனைச் சாதிக்கப்போகிறீர்கள்” என்பதாய்ச்சொன்னீர். இந்த வெறித்தனத்தின் கூச்சலுக்கு உங்களைப்போல அல்லது றியாஸ் குரானாவைப் போல வம்புக்குக் கத்துவதென்றால் “அம்மா ஓத்த மக்காள் ஒழுங்கான பிறப்பும் படிப்பும் இருக்காடா?” என்று சொல்லலாம் போல, அப்படிச் சொல்ல நாங்கள் கெட்டழிந்த சமுதாயத்தில் இருந்து வரவில்லை அண்ணன்மாரே. அல்லது நீங்கள் சொன்னது போல முஸ்லிம் தேசம் என்ற சொல்லை தன் சுயலாபத்திற்கு தூக்கிப்பிடித்து தம்பட்டம் அடிக்கும் றியாஸ் குரானாவுமல்ல நான்.

    நியாயமான எந்த ஆய்வாளனும் இன்னொரு கலாசாரத்தினை எதிரியாய்ப் பார்ப்பதால் அவனின் ஆய்வு மட்டத்தின் எல்லையை, விஸ்தாரத்தினையே குறைத்துக் கொள்கிறான். நீங்கள் அடையாளம் அற்றவர்கள் என்பதனால் பிறரும் அடையாளம் அற்றோராய் ஆக வேண்டும் என்பது எப்படி?

    முஸ்லிம் சமூகம் தான் முஸ்லிம் என்பதனாலே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கிறது. இங்கு மொழியினைக் கொண்டோ வேறு பிரதியினைக் கொண்டோ தன் அடையாளத்தினைக் குறுக்கிக்கொள்ள நாம் என்ன நீங்களா? ஆயிரம் கலாசாரங்களைச் சுமந்த சர்வதேச சமூகம் நாங்கள். முஸ்லிம் என்ற தேச அடையாளம் எங்கள் மட்டில் சர்வதேச தரத்திலானது. மாறாய் குறுகிய நிலத்தினுள் அல்ல. ஆனால் தேசம் என்ற சொல்லாடல் அதனுடன் பிணைந்த முறைமைகள் என்பன பல்வேறு வித்தியாச அடிப்படையில் முஸ்லிம்களிடையே சர்வதேச மட்டத்தில் காணப்படலாம். முஸ்லிம் தேசம் என்ற சொல் உங்களுக்கு ஏன் ஒவ்வாமையை உண்டு பண்ண வேண்டும்….??

    உங்களுடன் நாங்கள் இணைந்தவர்கள் அல்ல என உங்களின் துப்பாக்கி சுமந்த தோள்களின் முன் எங்கள் நெஞ்சினை நிமிர்த்திச் சொல்வதாலா? உங்களுக்குத் தேசம் என்ற கருத்தும் அதன் போராட்டமும் நீங்கள் நினைத்ததனை தரவில்லை என்பதனால் இது அறிவுரையா….??

    நீங்கள் சொல்வதுபோலவே காலம் கடந்த நிலையில் றியாஸ்குரானா மட்டுமல்ல நீங்களும் உங்களின் பிதற்றல் நிறைந்த எழுத்தும் காணப்படுகின்றது. சில வேளை உங்கள் பிரதியினை மீள்வாசிப்புப் படுத்திப் பாருங்கள் ஏதாவது மாற்றல்கள் உங்களுக்கே தெரியலாம்.

    குறுக்கீடும் கதையும்:
    றியாஸ்குரானாவின் எதிர்வினையின் போது அவருடன் தொலைபேசியில் கதைத்த நீங்கள் முஸ்லிம் சமூகம் மீதான உங்களின் எழுத்தினது வீச்சுற்கு மன்னிப்புக் கோரீனீராம் என்ற கதையும் றியாஸின் நண்பர் ஒருவர் சொன்னார். ஊண்மையா…? ஹரி, சனன், விசரன் இன்னும் எத்தனையோ பெயர்களில் ஒருவர் அல்லாஹ் அல்லாஹ்…

    அறிவிப்பு – 2

    முரண்வெளி வலைப்பதிவுகளும் ……. பேச்சும்

    கருத்துக்களை வெளியிட ஏதுவான சூழலே இல்லாத இத்தீவில் துப்பாக்கிகளே அதிகார பீடத்தின் செங்கோலிற்கு சமாந்தரமாய் மாறிவிட்ட கேவலத்தின் முன்னும் நியாயமான காரணங்களிற்காய் மறைந்து கொண்டு தொடரான உரையாடல்களினை முரண்வெளி வலைப்பதிவு மேற்கொள்ளல் உங்களின் துணிச்சலினை அடையாளம் காண்பிக்கிறது. அதுவும் நீங்களே குறிப்பிட்டது போல யாழ்ப்பாணச் சூழலில் அங்குள்ள கொடூர வாழ்வின் பக்கங்களிற்குள்ளும் இதனைச் சாதிப்பதில் நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்தினை மனதார வாழ்த்துகிறேன். இது உங்களைப் புகழ்ந்து கொள்ள சொல்லப்படவில்லை. நியாயமானதை ஏற்பதும் ஊக்குவிப்பதும் சிறந்ததுதானே…

    அறிவிப்பு – 3
    றியாஸ் குரானா : குறுக்கு வெட்டு முகம்

    அறிவிப்பு – 3.01

    றியாஸ் குரானா எழுத்தின் மீதான காறித்துப்பலும் யார் இந்தப் பெருவெளி???
    எந்தக் கேவலங்களினால் நமது எழுத்துச் சூழல் செயற்பாட்டுத் தளம் நாற்றமெடுக்கிறது என கத்திக் கொள்கிறோமோ அதனையே நாமும் செய்கிறோம் என்பதனை றியாஸ் குரானா இன்னும் அறியவில்லையா…??? அல்லது அவர் துப்பியது இன்னமும் அவரின் முகத்திலேயே விழவில்லையா…???

    கேவலம்,

    எனது நண்பன் ஒருவன் அடிக்கடி கவிதை சொல்வான். அவனிற்கு பேராதனை கொழும்பு வீதியால் நடந்து செல்கையில் அங்கு எதிர்ப்படும் பெண்களின் மீது காமம்ஃ காதல் வருகிறதோ தெரியாது ஆனால் நிறையவே கவிதை வரும். பின்னர் தான் எனக்குத் தெரிந்தது அவை வைரமுத்துவிற்கும் பல பாடல்களிற்கும் செந்தூரத்தின் ஆஸ்தானக் கவிஞர்களுக்கும் சொந்தமானவை என்பது. ஆனால் அவன் இப்போது சொந்தமாகவே கவிதை எழுதுகிறான். ஆனால் பெரிய பெரிய சொற்களைத் துப்பும் றியாஸ் குரானா எந்த மூலைக்குள் அவரின் எழுத்திற்குத் தேவையான புத்தகங்களை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை நமது சிந்திப்பிற்கும் எழுத்திற்கும் நடைமுறை வாழ்விற்கும் தொடர்புகள் இருக்கவே வேண்டும். இது இல்லாமல் எப்படி றியாஸ் குரானா நீங்கள் கொக்கரித்துத் திரிகிறீர்கள்? உங்களை உலகிற்கு புலி எதிர்ப்பாளன் என்றும் காட்ட பின்நவீனம் ஒரு கேடயமா?? ஹறவாய்ப் போன பின் நவீன முலாமும் அதன் கூத்தும் நீங்கள் எதிர்க்கும் மேற்கில் தானே கோட்பாடாகியது. அதற்காய் நீங்களா? அதற்கே சிரம் பணிகிறீர்களே நமது புழுதி மணக்கும் சாதாரண சூழலில் புதைந்து போன எச்சங்களில் ஆயிரம் பின் நவீன வரைபடங்கள் இருக்கிறது றியாஸ் குரானா. ஏன் அல்-குர்ஆனை வாசிப்பிற்கு உட்படுத்த இயலாத நீங்கள் முஸ்லிம் தேசத்தின் நிர்மாணிகளா..?? முரண்வெளி கேட்பது போலவே உங்களின் எழுத்திற்கும் முஸ்லிம் தேசத்திற்கும் என்னய்யா தொடர்பு?

    றியாஸ் குரானாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கில்லை. அப்படி அறிந்தால் எழுத்தின் கேவலம் எப்படித் தெரியுமோ..

    பெருவெளிபற்றிய அனைத்துப் பார்வைகளுக்கும் றியாஸ் குரானாவே பதிலளித்துக் கொண்டிருப்பதன் அரசியல் கேவலம் என்ன? மஜீத், மிஹாத், அப்துல் றசாக் இன்னோரெல்லாம் புனைப்பெயர்களா?? இல்லையே…நான் நினைக்கிறேன் பெருவெளியின் சமூகம் சார் செயற்பாடுகளினை தனது சுய ஆதாயத்திற்காய் பம்மாத்துக்காய் றியாஸ் குரானா பயன்படுத்துகிறார் போல அல்லது மற்றையோர் தங்களின் உரிமங்களை றியாஸ் இற்கு தாரை வார்த்து விட்டனரா..??

    அம்பாரை கரையோர மாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு நண்பரிடம்ஃ நண்பியிடம் இது பற்றிக் கேட்டபோது அதிகாரக் கட்டமைப்பை உடைக்க வேண்டும் எனும் றியாஸ் குரானா, களவாய் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள அலைகிறார் என்றார். இது உண்மையா றியாஸ் குரானா??

    முரண்வெளியுடன் ஆரோக்கியமான விவாதத்தினைத் தொடர ஏன் உங்களால் முடியாமல் போனது நீங்கள் சொல்லித் திரியும் புட்டானம் இன்ன பிறவும் களவில் உம்மாலே உருவாக்கப்பட்ட வாய்மொழிக் கதைகள்தானே. எங்கே உமது ஆதாரங்கள் இருப்பின் முன்வையும் பார்;ப்போம். நீர் முஸ்லிம் தேசம் பற்றிப் பேசவும் அதனைக் கட்டமைக்கவும் என்ன லாயக்கு இருக்கிறது. அறபாத், அனார், ஏன் றமீஸ் அப்துல்லாஹ் நுஃமான் கூட உமக்கு எதிரிகள். புத்தரின் படுகொலையை விமர்சித்துக் கத்தும் நீர் அல்லது உமது உயிர்த்தோழர் நண்பர் மஜீத், போராட்டக் கவிதைகளை தமிழீழ போராட்டத்திற்கு சார்பாய் எழுதவில்லையா? உமக்கும் உம் சார்ந்தோருக்கும் ஒரு நீதி மற்றவர்களிற்கு இன்னோர் நீதியும், கதையும். வாயும் நாக்கும் இருப்பதால் நினைப்பதுஃ சும்மா வருவதெல்லாம் கதையாகாது தம்பி. றியாஸ் குரானாவின் எழுத்துகளிற்கு பெருவெளி ஒரு தற்காலிக கேடயமாகப் பாவிக்கப்பட்டிருக்கிறதே தவிர பெருவெளியில் இவருக்கு எந்தப் பிற பங்கும் இல்லை என்பதே உண்மை என நினைக்கிறேன்.

    பெருவெளி என்ற பெயரைப் பயன்படுத்தி கலகம் செய்யும் ஒரு கலகக்காரனே றியாஸ் குரானா மற்றும் அவரின் பிய்த்து எடுக்கப்பட்ட பிரதிகள். பெருவெளி என்பதில் இன்னும் பல கருத்துக்கள், பல மனிதர்களின் கூட்டு முயற்சி இருப்பதாக அறிய முடிகிறது. இந்தப் பிரதியை எழுதுவதற்காய் பெருவெளி தொடர்பான நபர்களை அறிய முற்படுகையில் ஏற்பட்ட தொலைபேசிச் செலவுகள் யார் தருவார்? ஆனால் றியாஸ் குரானா பற்றி விம்பிப் பழுக்க எத்தனிக்கும் கேவலத்தினைச் சொல்வதால் முரண்வெளி நியாயமான பக்கங்களை நோக்கி பெருவெளியுடன் தனது உரையாடல்களை ஆரம்பிக்கக் கூடும் என நினைக்கிறேன்.

    ஆனால்,

    முரண்வெளியில் காணப்படும் பிற்போக்குத் தனம் மிகவும் கவலைக்குரியது. நவீன நாகரீகத்தின் முன் எதனை முன்வைக்க நீங்கள் முற்படுகிறீர்கள் இன்னமும் வரட்டுப் பிடிவாதமும் கேவலமான எழுத்து மாயைகளுமே உங்களின் பதிவுகளை ஆக்கிரமிக்கின்றது.

    நல்லதொரு நாட்களில்
    நாம் மீளவும் கூடிக்கதைக்கலாமா….
    குளிர்ந்து கிடக்கும்
    மலை இடுக்கே வசிக்கும் என்காற்று
    ஓய்விற்காய் எனையழைக்கிறது

    எலும்பு மச்சையை ஊடறுக்கும் காற்றில்
    இன்னும் சொற்ப நேரத்தில்
    பாளி மொழியில் எனக்கு விளங்காத ஏதோவொன்று ஓதப்படும்
    அதிலிருந்து தப்ப தூக்கமே மருந்து…

    நன்றிகள்.

    குறிப்பு
    (உங்கள் வலைப்பதிவிற்கு இதனை ஏற்றினால் என் மின்னஞ்சல் முகவரியினைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் Yahoo வில் அதிகமான மின்னஞ்சல்களைத் திறப்பது Yahoo விற்குச் செய்யும் துரோகம்)

  7. hanalala & puththasuufisiththan,

    thanks for ur replies.
    we will reply later this august. we have to prepare ourselves for the forthcoming exams.

  8. ஹன்ழளாஹ்(http://muranveli.net/2007/07/16/98/#comment-98#comment-98)-இற்கான பதில்:

    உங்களுடைய பங்குபற்றுதலுக்கு நன்றிகள் நண்பரே.
    ‘புத்தசூபிபித்தனிற்கு’ என்றெழுதுகிறீர்கள். அவரது பெயர் ‘புத்தசூஃபிசித்தன்’.
    ‘அதிநவீன கேவலம்’ ‘சாக்கடை எழுத்தாளர்களின் வாய்நாற்றங்களினை’ போன்ற பதங்களின் மூலம் எம்முடையதும் றியாஸ் குரானாவினதும் பிரதிவினைகளை அடையாளப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு அப்படித் தெரிந்தால் சரிதான். முரண்வெளிக்கு அதை(உங்களுடைய வாசிப்பு) ஏற்றுக்கொள்வதில் எந்த சங்கடமும் இல்லை.
    அனைத்து தேசங்களினதும் அகதியாக உங்களை நிறுத்திக் கொண்டு உரையாடலைத் தொடங்குகிறீர்கள். அப்படியான ஒரு நிலைதான் நண்பரே எங்களுடையதும். அனைத்து தேசியங்களினதும் வெளி ஒதுக்கல்களின் தொகுப்பாலானது எம்முடைய பிரதியாக்க வினையென்பது. பிரேரிக்கப்பட்டுவிட்ட அனைத்திற்கும் வெளியே நாங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறோம். இதுவரையிலுமான எந்த ஒன்றும் எமக்கான பதில்களுடனில்லை. எம்முடைய இந்த நிலையையும் அறிவிப்புச் செய்து கொண்டு உங்களுடைய அறிவிப்புகளை எதிர்கொள்ள முயல்கிறோம்.
    அறிவிப்பு 1-இல் றியாஸ் குரானா எம்மை எதிர்கொள்வதற்காய்த் தனது பிரதிக்குள்ளும் பிரதிகளுக்கு வெளியிலும் பரப்புரை ச