April 25th, 2007
கற்பகம்.யசோதர கவிதைகள்
கற்பகம் யசோதரவின் கவிதைகள் பற்றி எழுதும் போது மாத்திரமே எமது வார்த்தைகளின் போதாமையினையும் அபத்தங்களையும் போலிப்பாவனைகளையும் உணர முடிகிறது. அவரது கவிதைகள் பற்றி எதை எழுதி விட முடியும்? மூன்றாவது மனிதன் இதழில் இரண்டு கவிதைகள் பிரசுரமாயிருக்கின்றன. ‘நீத்தார் பாடல்’ மூன்றாவது மனிதனில் வந்த முக்கியமான கவிதை. மூன்றாவது மனிதன் தவிர்ந்து வலைப்பதிவுகளில் மாத்திரமே கற்பகம்.யசோதர எழுதுவதைக் காணமுடிகிறது. சத்தியக் கடதாசி, ஊடறு, மற்றவர்கள் ஆகிய வலைப்பதிவுகளிலிருந்து எடுத்த கவிதைகள் இவை.
யுத்தத்தை நிறுத்தியிருந்த போது…
1
இன்னுமொரு கொலை நாள்!
படுவான்கரைகளில் எக்ஸ் - எக்ஸ் அம்மான்
தன் அண்ணரைத் தேடி அலைகிறார்
அண்ணன் பெம்மானை…
அங்குமிங்குமென
அண்ணனும் தம்பியும்
தம் எதிரியரைத் தேடித் திரிகிறார்
நான் என்னைத் தேடுகிறேன்
கொலைகள் எனது கனவை அழித்தன
கொலைகள் எனது இரவை அழித்தன
என்னுடைய இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு முன்
அவர்கள் என்னை அழிக்கு முன்
புறநானூறும் கந்தபுராணக் காவியங்களும்
எனது வீட்டில் தீக்கிரையாகின
என் கைகளின் இரத்தக் கறை
தீ மூட்டிய
உன் கண்ணீரால் கரைந்து அழிய
அதை உன்னிடம் தந்திருந்தேன்
ஏனோ அது அழியவில்லை
அதிகாரத்தைப் பழி சொல்லி
வெறித்தவுன் நேரிய பார்வை
வீழ்த்தப்பட்ட என்னிடம் வருத்தம் தருகிறது
நம்பு!
நான் எதுவும் அறியேன்,
வீடு திரும்பிய ஓர் அதிகாலையில்
படலையில்
என்னைச் சுட்டுச் சென்றது கூட
‘அவரா’ ‘இவரா’ தெரியாது
என் இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு முன்
உடலிற் பொட்டுத் துணியோ
எனறோ முத்தமிடப்பட்டதான அதிர்வுகளோ இன்றி
யாரும் ஏன் முத்தமிடவில்லை?
அதன் வலி பகர
முகம் அற்ற
ராணுவம் வெட்டிப் போட்ட
முண்டங்களில்
தெகியோவிற்ற, தெரணியகலை
இரப்பர் தோட்டங்களில்
அல்லைப்பிட்டியில்
பத்திரிகை அலுவலகங்கள் வரை
வீழும் உடல்கள் முன்
நீ தலையிலடித் தடித் தழுவது
பிரயோகிக்கப்படாத குறிகளுக்காக
நீலம் பாரித்து வரண்டிரா
சாவுக்கு முந்தைய காலத்து
அழகிய உதடுகளால்
என்றுமே அறியப்படா ஆசை முத்தத்திற்காக..
ஓர் இனிய முத்தம் - அது இவ்
உதட்டுத் தசைகளில் எப்படி உணரும்?
நம்பு
வாளால் வெட்டப்பட்டபோது
துவக்கால் சுடப்பட்டபோது
கொட்டான்களால் தாக்கப்பட்டபோது
எனது இதயம் அழுததும் அதற்காகவே!
எவருமே கண்டிரா
எனது நிர்வாணப்பட்ட உடல்
ஓர் பிரச்சாரக் கருவியாகி
பிரசுரிக்கப்பட்ட போதிலும்
நான் அழுதது அதற்கே…
போகும் திசையறியாப் போரின் கண்ணிகளுள்
எதையும் சொல்ல வாய்ப்பின்றிப் போய்
கழுகு தின்னத் தீனியாக
இந்த வீதியில் போட்டுக் கிடப்பவன்
எப்படி நானாக முடியும்?
சைக்கிளை மிதித்துக் கொண்டு
பிரதேசத்தின் வயல் வெளிகளில்
இன்னுமொரு கொலைநாளில்
ஓர் இன்னுமொரு கொலைநாளில்
உல்லாசமான பாடல்களின் சீட்டியடிப்புகளின்றி
வதைமுகாம்கள்
இராணுவ முகாம்கள்
சோதனைச் சாவடிகள் ஊடு
முகமூடி ‘யாரோ’
எதிர்ப்படும் நொடி வரையில்
இரண்டு சகாப்தங்களாய்
யாராலோ கொல்லப்படுவதற்காகவே
காலங்கள் சுழலும்
இத் தெருக்களில்
போய்க் கொண்டிருக்கிறேன்
(வைகாசி 2006)
2
ஒவ்வொரு இரவும் பகலும் தனிமையை வாழ்தல்;
பெரும்பான்மை கூக்குரல்கள் ஒலிக்க ஒலிக்க
தொண்டையிருந்து வரும் சிறிய ஒலி
ஆற்றாமையோடு அடங்க
பேசுகிறவர்களாக நீங்களே இருப்பீர்கள்
சகல அதிகாரங்களும் உரியவர் நீங்கள்
உங்களை மீறிப் பேசுதல்
எங்கோ
ஒளித்துக் கொண்டும்
உள்ளே சுருங்கிக் கொண்டுமே சாத்தியம்
வெளி விரும்பும்
எல்லைகள் கொண்டாடாத ஒன்று
சுருங்கிச் சுருங்கி
எழுப்பும் தன் ஒலி
அதை மறுக்கும் உம் ஒலி
இக் குறிப்பில்
தன்னை நுழைக்க விரும்பும் நான் போல
எம்மைக் குறித்த எல்லாவற்றிலும்
ஓட்டை இருக்கென்பதால்
வரவேற்கிறோம் என்ற விச்ராந்தியுடன்
அதிகாரத்தை நுழைத்து
கொலைகளாயும்
ஒரு வயதுக் குழந்தையின்
மூத்திரப் போக்கியுள் நுழைவதாயும்
நெஞ்சுள் வலி பிளக்கும்
ஒரு காட்சி மாற
மறு காட்சி
கைகளில் ஒடுக்கப்பட்டவனி/ ளின் மண்டையுடன்
பற்கள் ஒளிரத் தெய்வங்கள் எழுந்தருளுகிறீர்கள்
சிலவேளை
அது அந்த ஒடுக்கப்பட்டவனின் கரத்தில்
நீங்களாக அல்லது நானாக
உருமாறுகையிலோ
உடைப்பெடுக்கத் தயாராகும்
கேள்விகளுடன்
மூளை சிதறுகிறது
அவனா இவனா
எந்தப் பக்கம்
நிகழ்பெறும் அநீதியை
ஏற்பதா விடுவதா
உடன்படுவதா எதிர்ப்பதா
கேள்விகள்…
அப்பால்
தேசத்தில் தலைவர்களோ
தமது சுந்தரமான சிரிப்புடன்
மொழுமொழுகும்
தம் குறும்புமிகு குழந்தையை
கொஞ்சுகிறார்கள்;
அவர்கள் கட்டளைக்கு ஆயத்தமாய்
வரிசையில் நிற்கின்றனர்
ஆயுதங்கள் தாங்கி சிறிய, மிகவும் சிறிய
தேசத்தின் பிள்ளைகள்.
ஒடுக்கியவனையும் ஒடுக்கப்பட்டவனையும்
அடையாளம் தெரியாத தெருக்களில்
நாங்களும் நீங்களும் திரிகிறோம்;
சனங்களாக
அங்கிருந்துதித்த
அறிவுஜீவிகளாக
சந்தர்ப்பவாதிகளாக
“துரோகி”களாக
மேலும்
வரலாற்றிற் பதியப் பெயர்கள் அற்ற
உயிர்களாக…
எமது கைகளில் “இழந்த” “கொன்ற”
எல்லாவற்றினதும் கதை கூறும்
இறைச்சித் துண்டு
பிரியமானவர்களின் ஒரே ஓர் எச்சமாய்.
பதுக்கப்பட்டு
கடந்த வதைகளின் தடங் காட்ட
வன்மங் கொண்டு நிற்கிறது
யுத்த காலம்!
இப்படித்தான் தன் துணையிழந்து
இங்கே ஒரு பெட்டை நாய்
தனது குட்டிகளை வளர்க்க
உங்கள் விசர் தீர்க்க
தனது குறியை
“இருக்கிறதும் கிழிய” விட்டபோது
அத்
தீராக் கிடங்கில் விழுந்து
எழுந்த
ஒருத்தன் சுட்டான்
எக்களிப்புடன்.
வெட்கங் கெட்டவன்கள்
ஆண் குறியைக் பிடித்துத் தொடர்ச்சியாய்
தம் பத்திரிக்கைகளில் அடித்தார்கள்:
“தெரு நாய் கொலை!“
ஆனால் அருகிருந்து கதறிய பிள்ளைகள் அழுதது
திசையறியா ஓர் எதிர்காலத்தின் மீதாக.
அவை அழுதன, அழுதன, தொடர்ந்து அழுதன!
தெரு நாய்கள் கூடி
இரவுகளில் உங்கள் கனவுகளில்
தொலை தூரத்தில்
ஒரு பெண் படு துக்கத்தில் விசும்பி விசும்பிப் பின் அது
வெடித்து அழுகையானது போன்ற சங்கிலிக் குரைப்பு
நிம்மதி குலைத்து
கிராமங்களில் ஒலித்து
இராவில் பெருகும் தெரு நாய்கள் துரத்த
நிம்மதி குலைந்து ஓடும் உங்களைக் கவ்வ
சிதறும் விச விந்துக்கள் போல
குருதிக் சொட்டுக்கள் சிதறச் சிதற
விழுந்தெழும்பி ஓடும்
உங்கள் சதை குதறித் தின்ன
வேட்டைப் பற்கள்
தேச மெங்கும்
கூர் மின்னி
ஆனி 2006
3
கருணையின் திருவுருவாய்ப் பெரும்பான்மை இருப்பதாலேயே
“நான் x நீ” ஐக் கடக்க முடியாது
பிரதிகளில் உன்னைச் சுட்டி
-என்னால் முடிந்தது!-
எக்காளமிடுகிறேன்
எனினும் நீயே கருணை
உன் பெரும்பான்மை நிம்மதியை
என் தரவுகள் குலைக்குமென
சராசரியிலிருந்து விலக்கி
மேய்ப்பனின் ஆடுகளுள் நொண்டிச் செல்லுகிற ஒன்றாய்
என்னைத் தனிமைப்படுத்தி முறியடிக்கிறாய்
நீ அறிய விரும்பிற ‘உண்மை’யின்
அளவை மீறும் தரவுகள்
உன் சகிப்பெல்லையைத் தாண்டுகிறபோது
பதறி
சந்தர்ப்பம் தகுந்து வார்த்தை ஆடும் “நீ” சொல்லுகிறாய்!
உணர்வுகள் கொப்பளிக்காத
குளிர்ந்த இதயம்
கொம்புகள் முளைத்த அறிவுஜீவிதத் தலை
குலத்தை அழிக்கும் கோடரிக் காம்பு!
கருணையின் திரு உருவே!
சிந்திப்பது எப்படித் தவறாகும்?
மண்டைகள்
உனக்கு ஆட்டுவதற்காய் உருவானவையா?
மூளையுள் முளைவிடும்
தனித்துவ எண்ணங்கள்
உணர்வுகள் மரத்து
உறைந்த குறிகளாய்
பழகிப் போய்
கேட்பாரற்று வரண்டு போன
உயிரின் ஆதாரங்களா?
புத்தி நேர்மையும்
உலகத்து ஒடுக்குதல்களை
எதிர்க்க முனை பார்வையும்
முற்றிலும் நஞ்சு என்று
என்/ நீர் குறித்துப் புரளி நீ கிளப்பிவிட்டாலும்
தன்னை மீறி ஆவியாகி
சித்ரவதைக் கூடங்களில்
கொடும் வதைகளில்
தற்கொலை செய்யக் கதறும்
கைதியின் ஆன்மாவுள்
வீதியில்
தாக்கப்பட்ட ஒரு மூன்றாமுலகப் பிள்ளையின்
கண்களில்
பொழியலாகும் அது…
உனது கருணை உனக்கே சொந்தம்
அது
உனது கண்களில் மட்டுமே வழியும்
ஆனி 2006
நான்
நான் கடவுளின் ஒரு பகுதி
அல்லது நான்தான் கடவுள்
அகண்ட தொடைகளுள்ளிருந்து
சிசுவை இழுத் தெடுக்க -
ஆக்குகிறவள் நான்.
பிஞ்சு அதன் கால்களை இழுத்து
சுவரில் மோது(கி)றபோது
அழிக்கிறவள் நான்
காலமெல்லாம் அகாலிக்க
போர்களும் எவரோ நிறுவியனவும்
தோற்கடிக்கையில் திருடும்
பொருளாக்கின என்னை
யார் யாரினதோ தோற்கடிப்புகளின்
நினைவூட்டுகை ஆனேன்.
பெண் குறி
சாத்தானின் வழி;
துர்க்குறி.
தொடைகள் அகண்டு கிடக்க
சட்டத்துடன் நுழைய
தேவியாய்,
தொடைகள் அகண்டு கிடக்க
விலை விசிறி நுழைய
மூலை முடுக்குகளில்
வேசையாய் வப்பாட்டியாய்,
தெருவோரம் நின்று
சிறிதளவு அன்பிற்காய்
மண்டியிட்டிருந்தவள் நான்.
இன்றோ-
நான் யார் யாரோ
நினைப்பிற்கும் “ஆட”ப் பிறக்காத்
தாடகை சிறாம்பி!
கடவுளின் ஒரு பகுதி;
அல்லது நானே கடவுள்.
இத் தற் பிரேமங்கள் குறித்து
எதுவும் பேசாதே -
என்றைக்கோ
எனக்கான முத்தங்களைக்
காற்று விழுங்கிவிட்டது
என்னை என்னால்(க்) கை
விட முடியாது முடியவில்லை
(பங்குனி 2006)
knives & collapses I & II
knives & collapses i
நான் இருக்கிறேன்
“குஞ்சு குஞ்சு மேகங்கள்
வானில் வட்டமான அம்புலியில்
அம்மா அனேகமாக இரவுகள் சோறு ஊட்டியிருக்கிறாள்”
இந்த வரிகளில் வசந்தி அன்ரி இருப்பதுபோல..
நீ உயிர்த்தெழுந்த படுக்கையில்
நான் இல்லை
நான் இருக்கிறேன்
உனது உதடுகள் எனக்கு சொந்தமில்லையாதலால்
கால்களைத் தேடுகிறேன்
கால்சராயை விலக்கிப் பாதங்களில் முத்தமிடத் துடிக்கிறேன்
இப்படித்தான்–
சிறுமியாய் இருந்தபோது
வசந்தனைத் தேடிப் போனான் தகப்பன்
அவனுக்கு என்ன ஆனதெனக் கேட்டு
பிரசுரங்கள் ஒட்டியபடி நின்றிருந்தவனை
பிடித்துக் கொண்டுபோனவர்களை
அவனது கனவுகள் பிடுங்கும்
கொடும் வதைகளினூடு
அந்த மெல்லிய கறுவல்
இன்னும் உயிருடன் உள்ளானா?
கண்களில் கனவுடன் இருக்கும் அவளது நெஞ்சிற்கு
உம்மிடம் பதில்கள் உள்ளதா?
கேட்ட அவனை, அவனது தோழர்களை
அவர்கள்
ஆயுதங்களாலும் கற்களாலும் எதிர்கொண்டார்கள்
நிராயுதமாய்
கிடைத்த சிறிய ஜீவனை வதைக்கும் மகிழ்வு
சகோதரர்களே உங்களிடத்தில் எப்படி வந்தது?
- அது எங்கிருந்து வந்து சேர்ந்தது?
அமைதி இராணுவம் காவல்நின்றியக்க
மண்டையைப் பிளந்து
கத்தி செருகி
(இப்படித்தான் அவனது ஆன்மாவை ஆயுதங்கள் நெருங்கின
இப்படித்தான் எம்மது கனவுகளுள் சர்ப்பங்கள் நுழைந்தன)
முடிந்தான் என்றார் வைத்தியர்
உறவினர்க்கு அறிவித்து
‘சவத்தை’ ஏத்த
‘வான்’ பிடிக்கப் போனான் சகோதரன்
வழக்கத்துக்கு மாறாய் திருநீறு பூசாமல்
அப்பனின் அப்பன் நெஞ்சிரைய ஓடினான்:
“என்ர பிள்ளை என்ர பிள்ளை”
அவனது தோழர்கள் அவனை விடவேயில்லை
பிடிவாதமாய் ஒலிக்கிறது அவர்களது குரல்:
“யாழ்ப்பாணம் கொண்டு போவம்”
“அம்புலன்ஸ பிடி”
அந்த ‘வான்’ கரடுமுரடான கிராமத்துத் தெருவில்
உயிராபத்துடன் ஓடும்
(அது எந்த கிராமம்? அது உனது கிராமம்)
அவளிடம் யாரும் சொன்னார் இல்லை
வெடுக் வெடுக்கென நடக்கும் கோழிபோல
உள்ளுணர்வுகளில் அனர்த்தம் வெடுக்கென நீட்ட
கைப்பிள்ளையோடு
ஒரு விசரியாய் ஓடினாள் அவள்
(அந்தரா அப்போ உனக்கு வயது நான்கு)
உணர்வுகள் கணமும் காயம் பீரிட்டு வெளிப்பட நிக்கும்
அவளிடம் சொல்ல
யாரும் துணிந்தாரில்லை
வயிற்றலடித்து அழுதாள் அம்மையின் அம்மா
ஐயோ.. என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே
என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே
வன்னிக் காடே உனக்கு நினைவிருந்திருக்கும்
குடா நாட்டுக் கடல்களே உங்களுக்கு நினைவிருந்திருக்கும்
ஒரு கறிக்குதவா மரக்கறியாய்
உணர்ச்சியற்ற மரமாக
‘வழங்காத’ உடலாக ஏனும்..ஏனும்
‘உயிருடன்’ கடவுளே
அவனைத் திருப்பித் தா
திருப்பித் தா
- என அவள் கதறிய கதறலை
~~
ஒரு பெயர்ந்த நிலத்தில்
இராட்சத சாலையில்
வாகனங்கள் வீசி
தொலைவில் நான் போயறியாத நிலத்தில்
நீ துயிலுள் போனாய்;
உன்னுடன் நான் இருந்தேன்
நான் இல்லை
சுவையறியாத உதடுடன் உன் கால்களைத் தேடி வருகிறேன்
நீ என் தகப்பன்
[பங்குனி 01.2007]
knives & Collapses ii
நேற்றைய குறிப்பிலிருந்து
knives & collapses உயிர்பெற
மீளவும்
ஃபீரீடாவின் உடலில் ஆணிகள் போல
கத்தியால் உறுப்பெங்கும் குத்தி
(கண்களிலும் புண்களிலும் கூட)
நா னிந்த
நீத்தவர் குரலிலிருந்து உறங்க விரும்புகிறேன்–
நெடுந் தூக்கம்
‘talk to her’
Pedro Almodóvar படத்தில் ஒரு கிளைக்கதை போல
திடுமென விசித்திரக் குள்ளனாகிய பெண்ணின் காதலன்
அவளது பெண்குறியுள் நுழைந்து
அதன் கதகதப்புள் என்றென்றைக்குமான
உறங்கத்திற்குச் சென்றுவிடுவதுபோல
கும்பகர்ணனாயி மறக்க, மறக்க-
தூங்கி மூச்சிழுக்கையில்
மரங்கள் வேர்க் கிழம்பி
அவன் மூக்கினுட் செல்ல நிற்பது போலே
நீத்தவர்கள்
உடலின் துவாரங்கள்வழி நுழைந்து
வாழ்வைச் சிதைத்தலை நிறுத்துவரோ
அவர்கள் கனவுகளிலிருந்து விடுபட
அவர்கள் வாழ்விலிருந்து விடுபட - மறுத்துத் தடுத்து
அடைக்கும் அருட்டல்களிடம்
விசரி ஆன் செக்ஸ்ரன்
‘என்றோ செத்தவர்களுக்காக செத்துக் கொண்டிருப்பாயா’
சுவர்களுக்குள் பிரதியொன்றிலிருந்து கேட்பாள்
[பங்குனி.02.2007/1:05 p.m.]