April 25th, 2007
எஸ்போஸ் குடும்பத்தினர்க்கு உதவி…
எஸ்போஸ் கொல்லப்பட்டார். அது ஒரு தகவல் மட்டுமாகவே போயிற்று!
நாமும் சக வலைப்பதிவர்கள் சிலரும் அஞ்சலிகளை எழுதி அப்பால் சென்று விட்டோம்.
இலங்கையின் பத்திரிகைகள், வானொலிகள் குறித்து எழுதத் தேவையில்லை.
இனியென்ன?
செல்வி, கோவிந்தன்.. என்று பெயர்ப்பட்டியலில் எஸ்போஸை சேர்த்து எதிர்ப்பு இலக்கியம் எழுதுவதா?
தொகுப்பு வெளியிடுவதா?
—
சற்று சிந்திப்போம்.
நாம் எழுதுகிற அஞ்சலிக் குறிப்புகள், கவிதைகள், கண்டனங்கள் வெளியிடப் போகும் தொகுப்பு, எதிர்ப்பு இலக்கியம் எல்லாவற்றுக்கும் அப்பால், அப்பால் அந்த இளம் விதவையும் சிறு குழந்தைகளும் இருந்தபடியேதானே?
எல்லாவற்றுக்கும் அப்பால் அந்த குடும்பத்தின் சிதைவு தடுக்கப்பட முடியாதது அல்லவா?
அவர்களது எதிர்காலம்?
அந்தப் பிள்ளைகள் இனி அவர்களது புழங்கு வெளிகளில் எதிர்கொள்ளப் போகிற சொற்கள்/பார்வைகள்?
‘ஏழு வயதுச் சிறுவனை சாட்சியாக இருக்கவிட்டு’ இந்த வரிகளுடன் முடிகிறது டிஜேயின் பதிவு. நாமோ அதைப் பற்றி பேசவேயில்லை. பொடிச்சி ஒரு கவிதையை பதிவிட்டு விட்டு அப்பால் செல்கிறார். அவ்வளவு தானா? எல்லாமே இத்தோடு முடிந்து போயிற்றா?
அந்த சிறுவன் முன் அப்பாவை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். எப்படியிருந்திருக்கக் கூடும் அந்த அனுபவம்? அந்த இரவில் அந்த சிறுவன் அனுபவித்திருக்கக் கூடியவற்றை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?
கொலையாளிகள் அச்சிறுவனை உறங்கும்படி கூறிச் சென்றார்கள். ஆனால், எமது அரச இயந்திரம் அச்சிறுவனை உறங்க விடாது. அவன் வாயிலிருந்து அந்த கொடூரமான இராத்திரியை பல தடவைகள் தவணை முறையில் மீட்டுப் பார்ப்பார்கள். நீதிபதி சலிப்புடன் இக்கொலை பற்றி சொன்ன வாக்கியங்களை தமிழ்நெற்றில் கண்டீர்கள் தானே?
எஸ்போஸின் மனைவி இரண்டாவது தடவையும் விதவையாக்கப்பட்டிருக்கிறார். முன்னரும் அவர் தன் கணவனை வன்முறைக்கு பலிகொடுத்தவர்.
எஸ்போஸ் உயிரோடு இருந்த காலத்தில் பணத்துக்கு அல்லாடிக் கொண்டிருந்தவர் என்கிறார்கள் அவரோடு நட்பாக இருந்த நண்பர்கள்.
எஸ்போஸை அறிந்தவர்களால் கூட அங்கு சென்று ஆறுதல் சொல்ல முடியாத நிலை. தொலைபேசக் கூட பயப்படுகிறார்கள்.
ஏதாவது செய்தாக வேண்டும் என்பது புரிகிறது.
எமக்கோ எஸ்போஸுடன் எவ்வித தொடர்புகளும் இருந்தது இல்லை. நாமென்ன செய்ய?
—
கொழும்பில் அல்லது இலங்கையின் பிற இடங்களில் இருப்பவர்களுக்கு எஸ்போஸ் குடும்பத்துக்காக பணம் திரட்டுவதில் சிக்கல்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தொலைபேசினாலோ, நேரில் சென்று கதைத்தாலோ வீண்சந்தேகங்கள் கிளம்பிவிடக்கூடும். அது நாளைக்கே உங்கள் உயிரைக் குடிக்கும் அளவுக்கு வளரவும் செய்யும்.
—
எனவே தான், ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் வதிகிறவர்களை நாம் வேண்டி நிற்கிறோம்.
உங்களால் இயலுமானதை செய்யப் பாருங்கள்.
—
எவ்வாறு தொடர்பு கொள்வது:
எமக்குத் தெரியாது. எஸ்போஸின் தொடர்பு இலக்கங்களோ அல்லது முகவரியோ எம்மிடம் இல்லை. கொழும்பில் / வன்னியில் இருக்கும் இலக்கிய செயற்பாட்டாளர்களிடம் தொடர்புறுங்கள்…
[இதை எழுதுகையில் ‘கவிஞர் எஸ்போஸ்’ தவிர்ந்து யாராகிலும் வேறொருவருக்கு இதை செய்கிறோமா? செய்ய முடிகிறதா? சாத்தியமா? அப்படியெனில் இது எவ்விதத்தில் நியாயம்? கவிஞர்கள்/புத்தி ஜீவிகளுக்கு முன்னுரிமையா? விளிம்புகள் எப்பவுமே அப்படியே தானா? என்ற கேள்விகள் தொந்தரவு செய்கின்றன. விடை தெரியவில்லை.]
-முரண்வெளி-
நன்றி முரண்வெளி முக்கியமாய் இந்தக் குறிப்பிற்கு. எஸ்போஸ் மரணம் சார்ந்த எனது எண்ணங்களை பதிவிட்டிருக்கிறேன். வவுனியாவில் பலியாகிற ஏனைய மக்கள்களிலில் ஒருவராகவே அவரை பாரக்கிறேன். அவர் போன்ற எழுத்தாளர்கள் ஒருபொதும் புத்திசீவிகளிற்கோ வன்முறைகளால் “ஆதாயம்” பெற்ற யாரும்போலவோ ஆகிவிட முடியாது. அவர்கள் வெறுமனே இறந்து போகிறார்கள். அவ்வளவே.
//இதை எழுதுகையில் ‘கவிஞர் எஸ்போஸ்’ தவிர்ந்து யாராகிலும் வேறொருவருக்கு இதை செய்கிறோமா? செய்ய முடிகிறதா? சாத்தியமா? அப்படியெனில் இது எவ்விதத்தில் நியாயம்? கவிஞர்கள்/புத்தி ஜீவிகளுக்கு முன்னுரிமையா? விளிம்புகள் எப்பவுமே அப்படியே தானா? என்ற கேள்விகள் தொந்தரவு செய்கின்றன. விடை தெரியவில்லை.//
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நண்பர்கள் இணைந்து அவரது குடும்பத்திற்கு உதவ முடிந்தால் அதுவே பயனுள்ளது.
[…] Muranveli from Sri Lanka while writing about S.Bose talks about the social responsibility. They request people to help. At the same time, they also wonder if they would be making the same request for every human being being killed. Was S.Bose any different from the other people being killed on a daily basis. S.Bose was a littérateur. So is preference being given to intellectuals? What about the marginalized people? Muranveli says that these questions are very disturbing and unanswerable. Share This […]