April 18th, 2007

மழைக்கோட்டணிந்த கோடைகாலத் தார்ச்சாலை

Print This Post Print This Post

-அதீதன்-
IMFA
‘வேண்டாம்.. முன்பாகவே எடுத்துவிடலாம்’ மிகவும் இரகசியமான தொனியில், ஒருவித பதட்டத்துடன் கூறியபோது அவன் கண்கள் வழக்கம் போலவே ஜன்னலுக்கு வெளியில் தானிருந்தன. என் கண்களை சந்திப்பதிலிருந்து அவன் தன்னை தொடக்கத்திலிருந்தே தப்புவித்து வந்திருக்கிறான். சிறிய அவனது பூனைக் கண்கள் அவ்வாறு அலைவது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
‘அவனது நிறம் கறுப்பு’ என நினைத்துக் கொள்வதாய் நினைத்துக்கொண்டேன் - மீளவும் ஒரு தடவை.
ஜன்னலின் திரைச்சீலை அவனைப் போல அசைந்தது.
மழை அவனைப் போல தூறிப் பெய்தது.
அவனது பிரசன்னம் எனது அறையை கதகதப்பூட்டியிருப்பதாய் நினைத்துக்கொள்வதை விட வேறு வழிகளேதுமில்லை. உண்மையில், அவன் அணைப்பில் மிகவும் குளிர்வதாகத் தான் உணர்ந்தேன். அவன் தயக்கத்துடனிருந்தான் - மிகவும் தயக்கத்துடன்.. படுக்கை விரிப்பில் கறைகள் விழுந்து விடக் கூடாதென்பதில் அதிகம் கவனமாயிருந்தான்.
மார்பு ரோமங்களை அளைந்தபடி உறங்க முனைந்த வேளை, காத்துக் கொண்டிருப்பவனின் அவசரமிக்க குரலில் வெளியில் செல்லவேண்டியிருப்பதாய் மெதுவாக முணுமுணுத்தான். மழையின் ஈரம் அவன் குரலில் பிரண்டிருந்தது.
பாவித்த கைக்குட்டையை அவன் தன்னுடன் எடுத்துச் செல்வான் என்பதை நான் நன்கறிவேன். அவன் கொண்டு செல்வான் - எதையும் விட மிகக் கவனமாக.. எனது குப்பைக் கூடைக்குள் அவனது பொருட்களை ஒரு போதும் விட்டுச்சென்றதில்லை.
மழைக்கோட்டணிந்த அவனது கோட்டுருவம் மழைப்புகையூடு நடந்து சென்றது. அவன் குடிக்காமல் விட்டுச்சென்று ஆறிப்போன தேநீரின் அடர் செங்கருமையின் நிறத்தில் தான் மழைக்கோட்டும் இருந்தது.
||
மஞ்சள் வெய்யில் படிந்த நகரம் அதன் முரணான ஒலிகள்உடன் எங்களைச் சூழவும் நகர்ந்து கொண்டிருந்தது. எப்போதும் போலவே வேட்டொலிகள் கேட்டவாறிருந்தன.
‘காற்றில் இடைவெளிகளை உன்னால் அவதானிக்க முடிகிறதா? ‘ தெருவில் சுடப்பட்டு வீழ்ந்து கிடப்பவனைக் கடக்கும் போது இவ்வாறு கேட்டான். நான் அவதானித்த அளவில் காற்று ஒரு சுவரைப் போலவும் இருந்தது. ஒரு உடல் உயிரற்று சரிகையில் அது புழங்கிக் கொண்டிருந்த வெளிகளில் எல்லாம் ஒரு வினோத வெற்றிடம் தோன்றுவதாய் சொல்லியபடி வீழ்ந்து கிடக்கிற குருதி பெருகியோடும் உடல்களைக் கடந்து வந்தோம்.
மதிவண்ணனின் வீடு கண்ணீரிலும் குரோதத்திலும் செய்த கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறதைப் போல எமக்கெனக் காத்திருக்கும் அறையுள் நுழைந்தோம். வியர்வை கசகசக்கும் மேல்சட்டையைக் களைந்து மூன்றுவருடங்களாய் அவன் தீட்டிக் கொண்டிருக்கும் The Color Curtain ஓவியத்தில் ஆழ்ந்து போனான். இரண்டொரு வர்ணக் கோடுகளைத் தவிர வேறேதும் அதில் இல்லை. அழகான பூஞ்செடிகளுக்கு நீரூற்றுகையில் மாத்திரம் வர்ணங்களுக்கான சாத்தியப்பாடுகள் மனதில் தோன்றிப் பின்னர் கருகி விடுவதாய் சொல்லியிருக்கிறான். நான் வர்ணங்களில் தளும்பிக் கொண்டிருப்பதாகவும் (அப்படித்தானா?) அதன் காரணமாய் செல்லமாக பொறாமைப் படுவதாகவும் அந்தரங்கமான தருணங்களில் இரகசியமாய் கிசுகிசுத்திருக்கிறான். ஒருமுறை, டாலியின் Accommodations Of Desire ஐப் பார்த்தபடி சொன்னான், ‘எனது கனவுகளுக்கு வர்ணங்களில்லை, I see everything in black and white..’ சலிப்புடனும் துயரத்துடனும் இருந்த அவன் குரல் வர்ணங்களற்றதாய்த் தான் தெரிந்தது.
அவனுடைய கனவுகளை இரவில் படிக்கும்படியாகத்தான் அதிகமும் நேர்கிறது. இரவு மட்டுமே ஒளியற்றிருப்பதாய் இதற்கு அர்த்தங்களில்லை. ஆனால், ஏனோ தெரியாது, இரவில் மாத்திரம் தான் அவனது கனவுகளைப் படிக்க முடியுமாய் இருக்கிறது. அவற்றின் மிக இரகசியமான வேட்கை மிகு கிசுகிசுப்புகளை யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் இரவுகளைத் தேர்ந்தெடுக்கிறோமென்று நினைக்கிறேன். கனவுகளை நான் அவனுடலில் உணர்வேன், சமிக்ஞைகளாக, புரியாத லிபிகளில் எழுதி வைக்கப் பட்ட வரி வடிவங்களாக..
‘கனவுகளை படிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை’ அவன் என்னை லேசாக முத்தமிட்டான், கண்கள் இறுக மூடியபடி. கனவு இருளத் தொடங்கியது. அவன் உடல் எப்போதும் போல அதிரத் தொடங்கியது. கனவினைப் போல அவனுடல் அசைந்தது. புரிய மறுக்கும் கனவின் லிபிகளை அவன் கண்களுக்குள்ளாக புரிந்து கொள்ள எத்தனித்தேன். அவன் கண்களை மூடியபடி இயங்கவாரம்பித்தான் - நோய்மையுற்ற இயங்குதலையும் அசைவுகளையும் தவிர வேறெதுவுமில்லை. இக்கணங்களில் ஆழமான மூச்சைதவிர அவனிடமிருந்து சொற்கள் ஏதுமில்லை.
அவனிடமிருந்து ஜன்னலுக்கு நகர்ந்தேன். மாந்துளிர்கள் இளம்பச்சை நிறத்திலிருந்தன. அடரிளம் பசுமையில் நான் குழைந்து போனேன் - அவனது அன்பையும் நேசத்தையும் போல. அவனையும் அவனது வார்த்தைகளையும் போல சிலுநீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் மீளவும் அவன் மீது துவண்டு சரிந்தேன். மறுபடியும் மறுபடியும் ‘ஒரு துளி அன்பிற்காய் எல்லா இடங்களிலும் நான் விழுந்து கிடக்கிறேன்’ அரற்றலாய் வார்த்தைகள் உருண்டன.. அழ விரும்புவானோ? அவன் கண்ணீரைத் தின்னத் தொடங்கினேன். துயரடர்ந்த கவிதையைத் தின்பது போலிருந்தது.
||
எம்மிருவரது உடல்கள் பேசிக்கொள்வதை கேட்க அவன் விரும்பியதில்லை. ஆனால், எந்த ஒன்றையும் தவிர்க்க முடியாதிருப்பதைப் போலவே இதையும் தவிர்க்க முடிவது இல்லை. கதவுகளற்ற அறைக்குள் சிக்கிக் கொண்டதைப் போல உணர நேர்கிற அந்தத் தருணங்களை தவிர்ப்பதற்கு என்றே இரண்டு உடல்களையும் வேறு வேறு திசைகளில் வைத்து விடுவதுண்டு. எது எப்படியிருந்தாலும், குறித்தவொரு கணம் - மிகத் தற்செயலானதே எனும் பாவனையில் அமையும் ஒரு கணம் - உடல்களைப் பேச வைத்து விடுகிறது.
எதுவும் தணிக்கை செய்யப் படாத நிமிசமொன்று என்றைக்கு சாத்தியமாகிறதோ அன்றைக்குத் தான் அவனுடைய புதிர்மிகு கனவின் சங்கேதக் குறிப்புகளை இனங்கண்டு புரிதல் சாத்தியம்.
||
கனவுகளை புரிந்து தீர்த்து விடுவதென கதிரைகளில் தேநீர்க் கோப்பைகளுடன் அமர்ந்தோம். அவன் மனதைப் போல ஆவி பறக்கும் தேநீரை உறுஞ்சியபடி கனவுகளைக் கேட்கத் தொடங்கினேன்.
அதிகாலையின் பனித்துளியீரம் சில்லிட வைக்கும் காவிளாய்கள் முளைத்த பாதையில் என்னை நடத்திச் சென்றான். பாதியெங்கும் கனவுகள் மிதி பட்டன, வழவழப்பாக. சொரசொரப்பாக இன்னும் என்னென்ன தன்மைகள் உண்டோ அந்த எல்லா தன்மைகளுடனும் கனவுகள் காலடியில் கிடந்தன. ‘ஆளடங்கிய கிராமத்தின் கனவுகள் இவை’யென்றான். ‘இவற்றில் எது உன்னுடையது?’ என்றேன். ‘உன்னைப் போலவே எனக்கும் அது தான் தெரியாமலிருக்கிறது. சில வேளை இவை எல்லாமும் என் கனவுகளாயிருக்கலாம்’ சொல்லியபடி என்னை விட்டு முன் சென்றான்.
கனவைப் போன்ற குளிர் உள்ளங்காலை சில்லிட வைக்கவும் அவன் கைகளைப் பற்றி இறுக்கி அருகாமையில் இன்னும் நெருங்கினேன். பனியை விடவும் அதிக சில்லிடலுடன் குளிராகவும் ஈரமாகவும் அவன் உடல் இருந்நது. வெறிச்சோடிய கிராமத்தின் தெரு நீண்டு கிடக்க என் காலடியெங்கும் எண்ணற்ற மனிதர்களின் சிதம்பிய கனவுகள். குருதி சலசலத்து ஓடியது. அவன் கனவுகளில் சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறைப் போல அது சப்தமிட்டோடியது. கதறல்களும் கத்தல்களுமாய் அதில் மிதந்து வந்த உடலுறுப்புகளில் இவன் ஓவியங்களின் சாயல் இருந்தது. குவேர்னிகாவின் துண்டங்களை அள்ளியெடுத்து வீசி விட்டு அந்த இடத்தில் உட்கார்ந்து அரற்ற துவங்கினான். அவன் கன்னங்களை ஆறுதலாக முத்தமிட்டேன். நெல்லவியும் மணம் அவன் உதடுகளில் இருந்து கிளம்பிற்று. சீயாக்காய் மணம் கமழும் வார்த்தைகளை கொட்டினான். நான் மௌனமாய் அழத் தொடங்கினேன். எல்லாவற்றுக்கும் அடியில் அவன் தாயின் எலும்புக் கூடிருப்பதாய்க் கூறி அரற்றினான். வீணி வடிய, கண்ணீர் மிக அசிங்கமாக அவவனது ஓவியங்களின் தன்மையுடன் வழியத் தொடங்கியது. அவனுடைய பீதிக்கனவொன்றுக்குள் நான் இருக்கிறேனா…? தொலைந்து போன அக்கிராமத்தின் சந்தோஷமிக்க மாலைப் பொழுதுகளை, புழுதி கிளம்பும் தெருக்களை அவன் குழறல்களில் இருந்து நான் கேட்டுக் கொண்டிருந்தேன். காவிளாய்களுக்குள் சில்லிட வைப்பது பனி மட்டுமில்லையென்பது மனதின் எங்கோவொரு மூலையின் பளீரிட அவனைபற்றிய புதிர்கள் அவிழத் தொடங்குவதாய் உணர்ந்தேன். அவனது எரிந்து போன வீட்டின் எச்சங்களுக்குள் கனவுகள் ஈரலிப்புடன் வழவழத்தன. விளையாட்டுப் பொம்மைகளும் பாடப் புத்தகங்களும் குருதியில் மிதந்து வர அவன் சிரிக்கத் தொடங்கினான். நான் அவன் நெஞ்சில் முகம் புதைத்து விம்மினேன் ‘போய்விடலாம்’
தன் கனவின் வர்ணங்கள் காவிளாய்களுக்கடியிலிருக்கும் சாம்பல் புழுதிக்குள் இருப்பதாய்க் கூறினான். இம்முறை அவன் முகத்தில் விரோதமிருந்தது - அவன் ஓவியங்களில் இருப்பதைப் போல.
அவனை இழுத்தபடி இருட்டான கிராமத்தின் பற்றைகள் மண்டிய வெளிகளில் ஓடத் துவங்கினேன். கனவுகள் அவனைத் தின்னத் தொடங்கியிருப்பதாய் உணர்ந்த கணத்தில் என் கால்கள் வேகமெடுத்த்ன. ஒரு குழந்தையைப் போல கனக்கத் தொடங்கினான். பிணங்களின் மீதும் உதவிக்கு அழைத்துக் கதறும் கிழவிகளின் குரல்களின் மீதும் ஏறி ஓடினேன். தசைப்பிண்டங்களை உதறி ஓலங்களை ஒப்பாரிகளை உதறி அவனை இழுத்தபடி - அவன் கனவுகளை உதறியபடி ஓடினேன். எனது வார்த்தைகளில் குருதியும் ஓலமும் படியத் தொடங்கியிருப்பதை தாமதமாய் உணர்ந்து எலும்புகள் துருத்தும் பாழ்வெளியில் அப்படியே நின்றேன்.
ஒரு சிறிய ஒளிக்கீற்றுக்காய் மண்டியிட்டேன். கைவிடப்பட்ட கிராமமென அவன் உடல் இளைத்துக் கிடந்தது. உடலெங்கும் தசைத் துணுக்குகள் ஒட்டிக் கிடக்க அவன் மீது விழுந்து என் நினைவுகளனைத்தையும் அழுது கழுவினேன். கிராமம் இருளில் ஊளையிடத் தொடங்கியது. அவன் மார்பில் அப்படியே உறங்கிப் போனேன். கனவில் அவன் சிறுவனாகி கைவிடப்பட்ட கிராமத்தின் தெருக்களில் புழுதி கிளம்ப ஓடினான். இத்தனை வருடங்களுக்குமாக…
அவனுடனான புணர்ச்சி என்பது அவனுடைய நினைவுகளை வாசிக்கும் செயலாகவும் இருக்கிறது. அவன் மார்பில் புதைந்து அவன் காயங்களைத் தடவியபடி விம்மினேன். அன்றைய கனவில் அவன் தாய் கதறியபடி எரிந்தாள். பிணங்கள் ஓலமிட்டபடி மீளவும் நெருப்புள் புகுந்தன.
||
ழாக் ப்ரெவரின் கவிதைகளில் போல இருந்தது.
அவன் கோப்பியையும் பாலையும் கலந்தான்.
நான் தலையணையில் முகத்தை இறுகப் புதைத்தேன். என்னைப் பார்ப்பதை மிகவும் பிரயாசையுடன் தவிர்த்தான்.
நான் கண்களை மூடினேன். கண்ணீரின் கசிவு இதமானதாயிருந்தது.
அவன் மழைக்கோட்டை அணிந்தான். ஏனெனில் அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. குப்புறப் படுத்தப்டி உள்ளங்கைகளை விரித்து ஆராய்வதாய் பாவனைபண்ணத் தொடங்கினேன். மெல்லிய செருமலுடன் கதவைத் திறந்து வெளியேறினான். ஜன்னலுக்கு நகர்ந்து வெளியில் பார்த்தேன்;
மழைக்கோட்டணிந்த அவனது மெல்லிய உருவம் மழைப்புகையூடு நடந்து செல்கிறது - மழையைப் போல.
கட்டிலுக்குத் திரும்பினேன். கனவுகள் பெருகுவதில் இருந்து தப்பிக்க வழிகளேதுமில்லை. புரண்டு புரண்டு யோசித்துக் கொண்டிருந்தேன், அவனது கனவுகளிலொன்றைப் போல என்னுடல் பிசுபிசுக்கத் தொடங்கியது.
உடலின் எல்லாத்திசைகளிலும் அவன் அசையத் தொடங்கினான். கைவிடப்பட்ட கிராமத்தின் தெருக்களை நான் வரைய ஆரம்பிக்கிறேன். என்னுடல் விறைப்படைந்து கசியவாரம்பிக்கிறது. அவனில்லாத இடத்தில் துயரம் சீண்டும் இனிமையான நாக்குகளுடன் இருந்தது. அவனை, அவனது துயரமிக்க பீதிக்கனவுகளை உணரும் பேராழத்தில் விழுந்து விழுந்து உள்ளே இன்னும் உள்ளே புதைந்து போய்க்கொண்டிருந்தேன். அறை கனவுகளால் நிரம்பித் தளும்புகிறது. குருதியின் இளம் சூட்டுடன் இருக்கும் கனவுகள் என்னை மிதத்துகின்றன. அறையின் மேற்பரப்பில் அச்சத்துடன் மிதக்கவாரம்பித்தேன். காவிளாய்ப்புற்களுக்குள் சிக்கிக் கொள்வது பற்றிய கனவு என் தொண்டையை இறுக்குகிறது.நான் நிர்பயத்துடன் இருப்பதாய் நினைத்துக் கொண்டேன்.
வெளியே மழை பெய்து கொண்டுதானிருக்கிறது என்கிற நினைப்பு திடீரென வர கனவுகளின் புழுக்கத்தில் இருந்து விடுபட்டு கட்டிலில் தொப்பென விழுந்தேன்.
||
அவன் மேலிருந்து அவன் கண்களைப் பார்த்தேன். ஆழமான இரு கடல்களைப் போல அவை திடீரெனத் தோற்றம் தர அவன் நெற்றியில் மிருதுவாய் முத்தமிட்டேன். அவன் கண்ணிமைகளை வருடியபடி ‘உன் ஆன்மாவின் கனத்த இரகசியங்களைப் பேச மறுக்கிறாய்’ என்றேன்.
அவனது அசைவுகளனைத்தும் திடீரென நின்று போயின. ‘எனக்கும் கீழே மிக இரகசியமாக அழத் தொடங்கியிருக்கிறாயா நீ?’ நான் கேட்கவில்லை. நான் நன்கறிவேன். அவன் அழுவதை, குழந்தை போல அழுவதை அவன் இத்தருணங்களில் மிக விரும்புவான்.
‘அந்த நெடிய தொலைவுக்கு அப்பாலான பாழ்வெளியில் கிடக்கும் என் நினைவுகளை, அவற்றின் மங்கிய அடையாளங்களைத் தானும் நான் எங்கு கண்டடைவேன்?’
விடை எனக்கும் தெரியவில்லை. இல்லாத பொருளை கும்மிருட்டில் துழாவிக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். திரும்பவும் திரும்பவும் அவன் மழைக்கோட்டணிந்து செல்கிறான்.
அவனில்லாத அவனது ஆடும் கதிரையில் ழாக் பிரெவர் தன் பூனைக்குட்டியுடனும் ஒரேஞ் பழங்களுடனும் உட்கார்ந்திருக்கிறார் நிர்வாணமாக…

|buddy_sleeps.JPG|

[மார்கழி 2005 - திருத்தியெழுதியது சித்திரை 2007]


மறுமொழியிட:


FireStats iconPowered by FireStats