March 29th, 2007

யாழ்ப்பாண நாட்குறிப்புகள் - 3

Print This Post Print This Post

மரணத்துள் வாழ்தல் - 3
-முரண்வெளி-

j
‘இம்முறை மிக நீண்ட கோடை
ஓரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று.

இரவு
ஊளையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட் ரக்குகளுக்குமுரியது

பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களிற்கு
இடையில் வரும் பொழுது

தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது.

இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றிவளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு.’
(நிலாந்தன்)


____________________________________

பாடக்குறிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கையில் அவை அருவருப்பூட்டுபவையாக மாறி விடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை பற்றி, பொது நலவாயம் பற்றி, இலங்கை அரசியல் பற்றிப் படிக்கையில் மிகவும் எரிச்சலாயிருக்கிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது; அவற்றை படித்து முடிப்பதைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லை. இங்கிருந்து வெளியேறுவத்ற்கும் வெளிநாடேகி நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வேறு வழிகள் இல்லையே, இலங்கை அரசு பாடப்புத்தகங்களில் பெய்து வைத்திருக்கிற மூத்திரத்தை அருந்தி ஈடேற்றம் பெற வேண்டியதாயிருக்கிறது… நட்சத்திரன் செவ்விந்தியனின் ‘வசந்தம் 91′கவிதைகள் மனதுக்கு மிகவும் நெருங்கி வருகின்றன.
எந்தப் பாடக்குறிப்பேட்டைத் திறந்தாலும்; எங்கு ஓடுவது, அம்மா போய் விட்டால் என்னுடைய பெயர் ‘அநாதை’ என்றாகி விடுமா, என்றெல்லாம் சந்தேகங்கள் முளைக்கத் தொடங்கி விடுகின்றன. எப்ப பாடசாலைப் பகிஷ்கரிப்பு முடிந்து ஏ.எல் ப்ரொஜெக்ட் சமர்ப்பித்து கையெழுத்துப் போட்டு நிம்மதியாவது? சிறிய பிரச்சனைகள் கூட பெரும் பூதாகாரமானவையாக மாறி விடுகின்றன. பனடோல்களை, பிரிட்டோன்களை முண்டி விழுங்கி நித்திரை கொள்வது மட்டுமே நிம்மதி தருவதாயிருக்கிறது,
ஷெல் சத்தங்கள் மறுபடி தொடங்கியிருக்க, படிப்பதை விட ‘எங்கிருந்து அடிக்கிறான், எங்க போய் விழுது’ என்று ஊகிப்புச் செய்து செய்தி அறிக்கைகளுடன் ஒப்பிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வது பிடித்தமான பொழுது போக்காகவும் இருக்கிறது.
இப்பிடியாகத்தான், பாடக்குறிப்பின் வரிகளில் இருக்கும் இரத்தத்தை தடவியபடி பத்து மணிக்கு உட்கார்ந்திருந்தேன். வான் விரைகிறது, கிட்டடியில் எங்கோ நிற்பாட்டும் சத்தம். சிறுகண இடைவெளியின் பின் நாய்கள் குரைக்கும் ஓசை. அக்கம் பக்கத்து சனங்கள் தகரங்களில் தட்டுகிறார்கள். மௌனமும் வான் விரையுமோசையும் மேலும் சொட்டுநேர மௌனமும் …. நான் விளக்கை அணைத்து விட்டு அழ முயற்சித்துக் கொண்டிருந்தேன்.. வெடித்துக் கிளம்பிய பெரும் மனித ஊளைக்குள் இரவு மூழ்கிப் போகிறது.. மேசையில் மேளம் தட்டிப் பார்த்தேன். குழறல் பெரும்பாலும் ஒரு முதிய பெண்மணியினுடையதாயிருக்க வேண்டும். நான் அம்மாவை நினைத்துப் பார்த்தேன்.. நான் கொல்லப்பட்டால் அம்மா எப்படிக் கதறுவாள்? மூக்குச்சளி நொய்ந்து போன உடல், அரற்றி அரற்றி வீணி வடியும் வாய்.. கலைந்து சிதம்பிய தலை.. காட்சிகளாக அனைத்தையும் கற்பனை செய்து பார்த்து அழ முயன்றேன், அழுதுதீர்க்க மிகவும் விருப்பமாயிருக்கிறது ஆனால் முடியவேயில்லை. நான் கடத்திச் செல்லப்படின் என்னை என்ன செய்வார்கள்? என்னுடைய திமிர் etc& etc எல்லாம் அவன் தனது பூட்ஸ் காலை நக்கச் சொல்லுகையில், தங்கள் குறிகளை வாயில் திணிக்கையில் எங்கு போகும்?
அம்மா வெய்யில் பிடித்த நகரத்தின் வீதிகளில் உலர்ந்த தொண்டையுடன் ஆமிப்பெரியவனிடம் அல்லது ‘எங்கட ஆக்களிடம்’ நடந்து வீதிகளில் மயங்கிச் சரிவாளா? - பக்கத்து வீட்டு அம்மாவைப் போல- அந்தப் பெண்மணி நடு வீதியில் அரக்கி அரக்கி அழுதழுது ஊர்ந்து எழுந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைப் போலவே அம்மாவையும் யாராகிலும் அழைத்துச் செல்வார்களா? அம்மா என்ன நினைப்பாள் அந்தக் கணங்களில்.. என்னுடைய பிள்ளை. என்னுடைய பிள்ளை. அம்மா….
அழுகை வந்துவிடின் அது ஒரு பேரின்ப நிலைதான், எப்படி முன்பெல்லாம் சுயபுணர்வு இருந்ததோ அதே போல இருக்கிறது அழுகை.
அழுது கொண்டிருக்கிற அந்தப் பெண்மணிகள் மீது மறுபடியும் எரிச்சலடைந்தேன் [பல சமயங்களில் இப்படித்தான், என்னைப் பார்த்தே நான் அதிச்சியடைய வேண்டியிருக்கிறது] ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் வயலின் சோலோவை சற்று அதிகப்படியான சத்தத்தில் வைத்து தூங்கிப் போனேன். கனவுகள் ஏதும் வந்ததா? ஞாபகமில்லை.
நாலரைக்கெல்லாம் எழும்பி விட்டேன், ஊரடங்கிக் கிடந்தது. ஜீப்புகளும் வான்களும் விரையுமொலியில் அடங்கிக் கிடக்கிற ஊர். ஜன்னலைத் திறந்து பார்த்தேன்.. இருண்டு கிடந்த அக்கம் பக்கம், வானம் மின்னிக்கொண்டும் கொஞ்சம் வெளிச்சத்துடனுமிருந்தது - சுலங்க எனு பினிஸ்ஸவின் வோல்பேப்பர் ஞாபகம் வந்நது. இரவு கடத்திச் செல்லப்பட்டவனுக்கு என்ன நடந்திருக்கும்? இன்னும் சற்று நேரத்தில் விடிந்ததும் அந்த வீட்டிலிருந்து ஒப்பாரி கிளம்பக் கூடும். [பக்கத்து வீட்டு அண்ணா கடத்தப் பட்ட போது அவர்கள் விட்டு விட்டு சீரான இடைவெளிகளில் அழுததாய் கணக்கு வைத்திருக்கிறேன்.] நல்ல காலமாய் கோவிலிலிருந்து பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.. ‘பிள்ளையார் சுழி போட்டு நீ, நல்லதைத் தொடங்கி விடு’ கோவில் நிர்வாகத்துக்கு நான் மிகவும் நன்றியுடையவன்; என் பாடக்குறிப்புகளில் இரத்ததையும் கண்ணீரையும் ஊற்றி விடும் அந்த ஒப்பாரியில் இருந்து இந்தப் பாடல்கள் என்னைக் காப்பாற்றுகின்றன. இந்தப் பாடல் சென்று சேர முடியாத அந்த வீட்டின் கதறல் எனக்கு கேட்டிருக்குமாயிருந்தால் குறைந்தது பத்திருபது நாட்களுக்காவது பின்தொடரும் அழுகையொலியில் அவஸ்தைப் பட்டிருப்பேன்.
____________________________________

1*பகிஷ்கரிப்பால் பாடசாலை இயங்காமல் மூன்று வார காலமளவில் வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம். பிறகு திடீரென்று ஒரு நாள் பாடசாலை நடக்கும் என்று அறிவித்தார்கள். இயல்பாகவே பாடசாலை செல்வதற்கான விருப்பும் ஆர்வங்களும் குறைகுறையென்று குறைந்து விட்டன. [தயா சோமசுந்தரத்தின் Collective Trauma பற்றிய கட்டுரைகளை படித்த பிறகு அதில் உள்ள பல விஷயங்களை என்னுடன் + என் சக மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே உணர முடிந்தது] பாடசாலை நடைபெறுமென்று அறிவித்த தினத்துக்கு மறு நாள் சிவராத்திரி. அதற்கடுத்த இரண்டு நாட்கள் சனி ஞாயிறு. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை; இன்று மட்டும் பள்ளிக் கூடமா? என்கிற கடுப்பில் தான் ஒரேயடியாய் திங்கள் போகலாம் என்று தீர்மானம் போட்டு மட்டமடித்தோம்.
2*தாங்கள் இன்னமும் அதிகாரத்திலிருப்பதாயும் கௌரவங்களுடனிருப்பதாகவும் எம்மை [’எமது இளைய சமுதாயத்தை’ ஹா ஹா] நம்பவைக்க வேண்டிய தேவை யாழ்குடாநாட்டின் அனைத்து அரச அலுவலர்கள்/அதிகாரிகள் என அனைவருக்கும் உண்டு. சங்கக் கடை மனேஜர் தொடங்கி பாங் மனேஜர் வரை அனைத்து சடங்களுக்கும் இந்த தாழ்வுச் சிக்கல் மாத்திரம் வலுவாயிருக்கிறது. எமது பாடசாலை அதிபர் என்ற பொம்மையும் இதற்கு விதிவிலக்கான ஒன்றல்ல.
3*திங்கட்கிழமை நாங்கள் பாடசாலைக்குப் போனபோது நமது சமுதாயம் சீரழியிது என்று ஒப்பாரியிட்டான். ‘வியாழக்கிழமை வராதாக்களெல்லாம் நாளைக்கு பேரன்ட்ஸோட வா’வெண்டான். வியாழக்கிழமை வராத மாணவர்கள் மாத்திரமே இவ்வாறு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அதற்கு முன்னம் நாம் சமூகமளிக்காத 15 நாட்கள் குறித்து அதிபனிடம் எந்தவொரு அசுமாத்தமும் இல்லை. தரம் ஆறு தொடங்கி தரம் பத்து வரைக்குமான மாணவர்களுக்கு தான் ஒரு அசைக்கமுடியாத கடவுளென்பதை நிரூபித்து விட்டு (அடிகள்/தண்டனைகள் மூலம்) ஏ.எல் நோக்கி வந்த போது, பெரிதும் கொட்டமடங்கிப் போயிருந்தார்.
4*மறுநாள்; நாங்கள் அவரிடம் பின்வரும் கேள்விகளை[யும்] கேட்டோம்;
[கேள்விகளின் தொனி சற்று நாகரீகப்படுத்தப் பட்டுள்ளது]

  • o ஒரு ஆசிரியை/ஆசிரியருக்கு அரை மணித்தியால விடுப்பாவது தராத நீங்கள் எப்படி எமது பெற்றோர்கள் அவர்களின் வேலைத்தளங்களில் இருந்து வந்து மினைக்கடவேண்டுமென எதிர்பார்க்கலாம். எங்களின் பெற்றோர்களில் அரைவாசிப்பேருக்கும் மேல் தினப்படி சம்பளக்காரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாவகச்சேரி, அச்சுவேலி போன்ற தூரப் பிரதேசங்களில் இருந்து வரும் மாணவர்களின் பெற்றோருக்கான 100 ரூபாவுக்கும் மேலான பிரயாணம்சார் செலவை வழங்கத் தயாரா?
  • மாறிப்போய்விட்ட யாழ் நகரின் வீதி ஒழுங்குகளுக்குள் அவர்களை சிக்க வைத்துப் பார்ப்பதில் உங்களுக்கு அப்படியென்ன அலாதி இன்பம்?
  • யாழ்ப்பாணம் நிமிஷமொரு தாக்குதல் என்ற நிலையிலிருக்கிற நேரத்தில் பாடசாலை சென்று வரும் நேரங்கள் மாத்திரமே பாதுகாப்பானவையாக உள்ளன. மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையில் வந்து அவர்களில் தினப்படி வேலைக்கான வருமானத்தை, நாளாந்த வேலைகளை இழப்பதா?
  • தகப்பன்மார்கள் அதிகமும் வெளிக்கிட விரும்பாத சூழல் இது, சாவகச்சேரி, ஊரெழு, அச்செழு போன்ற இடங்களில் வதியும் ஒரு மாணவன்/மாணவியின் தாய் விடியற்காலை எழும்பி தனது சமையல் சார் வேலைகளை எத்தனை மணிக்கு முடித்து, மதியச் சமையல் செய்து அதன் பிறகு இதர வேலைகள் செய்து எத்தனை மணிக்கு பஸ் பிடித்து அவள் அறிந்தேயிராத நகரத்தின் வெய்யில் வீதிகளில் அலைவுற்று எத்தனை மணிக்கு உன் காத்திருப்பு வரிசையில் நின்று பெயர் பதிந்து எத்த்னை மணிக்கு வீடு போய்ச் சேர்வது? [அப்பாக்கள் செய்யலாம் தானே எனக் கதைக்கும் பிரின்ஸி நாயே, அடைத்து வைத்திருக்கும் உன் மகனை யாழ் நகரின் வீதிகளில் ஒரு நிமிடமாவது நடக்க விடுவாயா?]
  • இவ்வளவு ஆக்ரோஷங்களையும் மாணவர்களிடம் இருந்து திரட்டி நாகரீகமான முறையில் நளினப்படுத்தி அதிபனிடம் சொன்ன இருவருக்கு அதிபன் சொன்னான் ‘ஆ, போய் அங்க ஒபீஸ் வாசல்ல நில்லுங்கோ, வந்து கதைக்கிறன்’

    எங்களிடமிருந்து ‘டேய் ******** விடடா அவங்களை’ ‘ரோட்டில வாடா பாத்துக்கொள்றம்’ போன்ற குரல்கள் எழுந்திராவிடில் குறித்த மாணவர்கள் இருவரும் வீட்டிற்கு அனுப்பப் பட்டிருப்பார்கள், அந்த மாணவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கிற குற்றங்கள் ஊதப்பட்டிருக்கும். அந்த நிமிஷத்தில் எனக்குத் தோன்றியது; அதிபனுக்கு நடந்ததெல்லாம் எங்கட இலக்கிய சம்பவான்களுக்கு [புனிதம்/இலக்கியம் கலை தவம் எண்டு எங்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிற/ பிதற்றிப் பிதற்றி தங்கட அரசியல் பின்னணிகளால மாத்திரம் பயப்படுத்திற சம்பவான்கள்] நடக்கிற நாள் கெதியில வரும். ஒப்பாரிகளும் மூர்க்கத்த்னமான ஆவேச வெறிக்குரல்களும் உங்கள் காதுகளைப் பிளக்கிற நாள் கிட்டடியில் வரும். உங்கட கால்கள்ள ஒட்டியிருக்கிற எங்கட இரத்தமும் கண்ணீரும் உங்களை சறுக்கி விழ வைக்கிற நாள் கிட்டடியில வரும்…


    2 மறுமொழிகள்

    1. //அந்த நிமிஷத்தில் எனக்குத் தோன்றியது; அதிபனுக்கு நடந்ததெல்லாம் எங்கட இலக்கிய சம்பவான்களுக்கு [புனிதம்/இலக்கியம் கலை தவம் எண்டு எங்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிற/ பிதற்றிப் பிதற்றி தங்கட அரசியல் பின்னணிகளால மாத்திரம் பயப்படுத்திற சம்பவான்கள்] நடக்கிற நாள் கெதியில வரும். ஒப்பாரிகளும் மூர்க்கத்த்னமான ஆவேச வெறிக்குரல்களும் உங்கள் காதுகளைப் பிளக்கிற நாள் கிட்டடியில் வரும். உங்கட கால்கள்ள ஒட்டியிருக்கிற எங்கட இரத்தமும் கண்ணீரும் உங்களை சறுக்கி விழ வைக்கிற நாள் கிட்டடியில வரும்…//

      இதைப் படிக்கிறபோது “மீண்டும் எம் நாட்கள் வரும், வரும்” என்பதாய் முடிகிற நிலாந்தனின் ‘யாழ்ப்பாணமே..ஓ..எனது யாழ்ப்பாணமே’ பிரதி நினைவு வந்தது.

      முரண்வெளியின் குறிப்புகள், பிரதிகள் பாதிக்கின்றன. சிலவற்றைப் பற்றி ‘பாதிக்கிறது’ என்பதற்கு அப்பால் என்ன சொல்றதெண்டு தெரியாதில்லியா.. அதுபோல மெளனமாக படித்துக்கொண்டிருக்கிறோம்.
      எனது அப்பர்,
      “இதில் வாழ்க்கையெனப்படுவது
      சுற்றிவளைக்கப்பட்ட
      ஒரு மலட்டுக்கனவு.”
      இந்த வரிகளே எல்லாவற்றையும் சொல்லிவிடுவதாகச் சொன்னார், வாசித்த பிறகு.

      தொடர்ந்து எழுதுங்கள். பரீட்சைகள் முடிந்த பிறகு மீண்டும் நிறைய எதிர்பார்ப்போம்.. எதிர்பார்க்கிறேன்! நன்றி..

    2. இந்த எழுத்து அற்புதமானது என்பதற்கு மப்பால் பேச நிறைய இருக்கிறது. இந்தக்கேள்விகள் நிச்சயம் எனக்கள்ளம் எழுந்தவை பொடிச்சி சொல்வதைப்போல வாசித்துவிட்டு ஏதும் சொல்லமுடியாமல் இருக்கும் கட்டத்தை நானும் அடைந்து விட்டேன் என்றும் சொல்லலாம். ஆனால் அது குறித்தும் வருத்தங்கள் எழுகிறது. இந்தச் சூழலும் கேள்விகளும் கட்டங்கட்டப்பட்டு விடுகின்றன என்றும் தோன்றுகிறது.ஆனால் வெறுமனே கேள்விகள் மாத்திரமில்லை(நான் சொல்லியா தெரியோணும் எண்டு நினைக்கிறியளொ) யாழ்ப்பாண நாட்கறிபு்புகள் மனசைப்பிசைந்து கேள்விகளையும் என்னும் ஒரு விதமான குற்றவுணர்வையும் எழுப்புகிறது.இப்போதைக்கு இவ்வளவுடன் நிறுத்திக்கொள்கிறேன் மறுபடியும் எழுதுவேன் தங்களுக்கு

    மறுமொழியிட:


    FireStats iconPowered by FireStats