March 28th, 2007
யாழ்ப்பாண நாட்குறிப்புகள் - 2
-முரண்வெளி கூட்டுக்கட்டுரை-

பெயர்கள் மாத்திரமே
கொலை செய்யப் பட்டுள்ளன.
யாரும் யாருடைய தலையையும் சீவவில்லை
துண்டிக்கப் பட்ட தொப்பிகளினுள்
தலைகள் இருந்தன. அவ்வளவே.
தெருக்களில் நீங்கள் காணும் குருதி
கொல்லப் பட்ட குரல்களுக்குச் சொந்தமானது.
-குல்ஸார்-0
ஓ.எல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியில் காதைப் பிளக்கும் வெடிச்சத்தங்களும் குண்டுச்சத்தங்களும் ஓரளவுக்குக் குறைந்திருந்தன. ‘ரியூசன் முடிந்தது. கொஞ்ச நேரத்துக்குக் கதைத்தோம். கோரமாய் அனல் தெறித்தன மதில்கள். எதிர்நின்று தொடராகக் கதைக்கிறோம். முகங்களை அடுத்து நேராய் மைம்மல் வீதி.’ns படிப்பதற்கான மனநிலை என்பதே இருக்கவில்லை. எல்லா இடமும் கதைகள், சித்திரவதை பற்றி, நெருக்கடிகள் பற்றி, கைது செய்யப்படுதல் பற்றி - செத்தவர்கள் பற்றி சாகப்போகிறவர்கள் கதைக்கிற கதைகள்.
என்னுடைய நண்பர்களில் பலருக்கு சிக்கின் குனியா வந்து விட்டது. ஓ… என்ன ஒரு பயங்கரமான காய்ச்சல் அது; பல்லுக் கிடுகிடுத்து நடுங்கும். மூட்டுக்களில் உயிர் போவது போன்ற வலி. இதே டிசம்பரில் எப்படி இவர்கள் பரீட்சை எழுத முடியும்? 12 வருடங்களின் கனவும் தவமும் மூன்று நாள் காய்ச்சலில் உடைந்து போவதை எப்படி பெற்றவர்கள் தாங்கிக் கொள்வர்? மாணவனின்/யின் எதிர்பார்ப்புகளின் கதி என்ன? குளுக்கோஸ், தெம்பூட்டிகள், சத்துணவு, மருந்துகள் எவையுமே இல்லை. சங்கத்தில் தரப்படும் கோறா அரிசியும் பருப்பும் மாத்திரமே சத்துணவுகள். மார்கழி மழைகாலம்; மரக்கறிகளின் விலை எட்டிப்பிடிக்க முடியாதளவு உச்சத்தில் இருந்தது. நாம் கூட சொதியைப்1 பாத்திரம் நிறைய வைத்து ஊறுகாய் போன்றவற்றுடன் உணவைக் குறுக்கி மழைக்கால மார்கழியைக் கடந்தோம்.
அப்பா அழுது நான் கண்டது இல்லை. தம்பி ஓ.எல் எடுக்கமுடியாமல் சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு கிடந்த போது நிச்சயம் அவர் அழுதிருக்க வேண்டும். அவர் அறையை விட்டு வெளிவரவில்லை அந்த நாட்களில். பெப்ரவரியில் திரும்பவும் பரீட்சை நடாத்தப் படும் என்ற செய்தி கிடைக்கும் வரை அவருடைய முகத்தில் சந்தோசமே இருக்கவில்லை; எல்லோரிடத்திலும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார். தன்னுடைய வளர்ப்பை, மகனுடைய திறனை மற்றவர்களுக்குக் காட்டமுடியாதது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. அம்மாவின் கண்கள் தீர்க்கம் மிகுந்தவையாக மாறிப்போய் நாளாகிறது. எதையும் செய்கிற ஒருத்தி அவள் தான். கடைக்குப் போவது, கிளியரன்ஸ்-இற்காக சிவில் நிர்வாகத்துக்கு அலைவது என எல்லாம் அவள் தான். யாராவது மோட்டார்சைக்கிள் கோர்ண் அடித்தால் கதவு திறந்து பார்ப்பது உட்பட எல்லாம் அவளே. நாங்கள் ஒளிந்திருக்கும் பொம்மைகளானோம். அவளுக்கும் காய்ச்சல் வந்தது.
பனடோல், ப்ரூஃபன் இரண்டையுமே அறாவிலையில் பெறவேண்டி வந்தது. சாதாரண வலிநிவாரணிகளான பரசிட்டமோல், பனடோல் கூட காட் 80 ரூபா அளவில் விற்பனை செய்யப்பட்டன.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான தாக்கங்களை ஏற்படுத்திற்று சிக்கன் குனியா. வைத்தியர்கள் போஷாக்கான உணவுகளையும் சுத்தமான குடிநீரையும் நம்பச் சொன்னார்கள். உணவே பெற முடியாத நிலையில் போஷாக்கான உணவுக்கு எங்கு போவது?
அம்மாவுக்கு சிக்கன் குனியா வந்து காய்ச்சல் மாறி பின் விளைவுகள் (மூட்டுவலி, கால் வீக்கம்) தொடங்கிய நாளில் அப்பாவுக்குக் காய்ச்சல் வந்தது. அடுத்தது தம்பி.. ஹோர்லிக்ஸ், நெஸ்டோமோல்ட் போன்றவை பங்கீட்டு அட்டைக்கு விநியோகிக்கப் படுகின்றன என்று தெரிய வந்தவுடன் எங்களுடைய வீட்டையும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அது எனக்கு ஒரு திருநாளைக் கொண்டாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்திற்று.
தற்போதிருக்கும் சூழலில் சிக்கின் குனியாவுக்கு நாங்களே மருந்து தேடிக்கொள்வது தான் உசிதமானது. வைத்திய சாலைக்குச் செல்வதெனின், முன்பு பயன்படுத்திய வழிகளைப் பயன்படுத்த முடியாது. நிறையத் தூரம் சுற்றி அலைக்கழிக்கும் மாற்றுப் பாதைகளை மாத்திரமே பாவிக்க முடியும். மோட்டார் சைக்கிளில் அப்பா ஏற்றி செல்ல முன்வந்தாலும் அம்மாவுக்கு மிகவும் பயமாய் இருந்தது. வைத்தியசாலையிலும் மிஞ்சிப் போனால் நாம் பெறப்போவது ஒரு கார்ட் பனடோல், கொஞ்சம் வலிநிவாரணிகள் எல்லாவற்றுக்கும் மேலாக திட்டுதல்கள். அதை விட சுய மருத்துவம் குறைகளுடன் கூட பயன் தரத் தக்கது.
எனக்குக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய போது நான் சங்கக் கடையின் நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். நாக்கில் உமிழ்நீரே இல்லையென்பது போல வரட்சியாக உணர்ந்தேன். எச்சிலை உமிழ்ந்து உமிழ்ந்து விழுங்கி வரட்சியைத் தணிக்க முயன்று தோற்றுப் போனேன். காட்சிகளனைத்தும் மஞ்சள் நிறமடைந்து மங்கின.
இந்த வரிசையில் ஏற்கனவே இருவர் விழுந்து விட்டார்கள். அடுத்தது நானாக இருக்கக் கூடும். இப்படி நினைத்துப் பார்ப்பதே அருவருப்பைத் தருவதாக இருக்கிறது. எங்கும் இலையான்கள், துப்பல்கள், வாந்திகள்.
எழுந்து நடந்தால் விழுந்து விடுவோம் என்கிற நிலையில் நான்கு தினங்களைக் கடந்தேன். எந்த உணவையும் வாயில் வைக்க முடியவில்லை. முன்பெல்லாம் காய்ச்சல் வந்தால் பிஸ்கட்டுகள், வகைவகையான பானங்கள், சூப் எல்லாம் அடுக்கி வைத்த மேசை என்னருகில் இருக்கும். ஒன்றுமே இல்லை இப்போது, எனது தலைமாட்டில் போர்வைக்குள் குறுகி, காய்ச்சலால் தானும் நடுங்கியபடி என் தலையை வருடி விடும் அம்மாவைத் தவிர…
நான் மெலிந்து போயிருந்தேன். கால்கள் வீக்கம் கண்டிருந்தன. அம்மா தேவாரங்களையும் கோளறு பதிகத்தையும் பாடியபடி என்னருகே அமர்ந்து, கொதித்துக் கொண்டிருக்கும் என்னுடலை குளிர்ந்த நீரால் துடைத்துகொண்டிருந்தாள். தோலெல்லாம் செதில் செதிலாய் உதிரத் தொடங்கியது. தேநீரைத் தயாரிப்பதற்குக் கூட நாங்கள் தெம்பற்றிருந்தோம். காஸ் முடிந்து போய் நாளாகிறது. அடிவயிற்றில் இருந்து மூச்சுப்பிடித்து அடுப்பூதினால் மாத்திரமே எந்த ஒரு சமையலையும் செய்வது சாத்தியமாகும். மழை பெய்து விறகெல்லாம் ஈரமாகியிருந்தது. ரோஸ்ரரில் தேன் தடவி வாட்டப்பட்ட பாணும்; கறுப்புத் தேநீரும் மாத்திரமே சாப்பிடக் கிடைத்தது. அப்பம்மாவின் உதவியுடன் ஒருவாறு மீள முடிந்தது.
சங்கத்தில் கிடைக்கிற பொருட்களை வைத்து எப்படியோ ரசம், கஷாயம், மல்லித்தண்ணி என்று எங்களுக்குப் பரிகாரம் பண்ணிக்கொண்டிருந்த அப்பம்மா காய்ச்சல் இரட்டித்துப் படுக்கையில் வீழ்ந்து மீள எழும்பவே இல்லை. ஏற்கனவே அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போன பின்பு பங்கீட்டு அட்டையுடன் வரிசைகளில் நெரிபட்டு நைந்த சீவன் அப்பம்மாவுடையது.
சங்கக் கடைகளில் ஹோர்லிக்ஸ், நெஸ்டோமோல்ட் போன்ற போஷாக்குப் பானங்கள் விநியோகிக்கப்படுகின்றன எனப் பேப்பர்களில் நியூஸ் வந்தது. எமக்குக் கடைசிவரை அவை கிடைக்கவேயில்லை. நாங்கள் எல்லோரும் படுத்த படுக்கையாகக் கிடந்தோம். அப்பம்மா சங்கக் கடைக்குச் சென்று ஹோர்லிக்ஸ் கேட்டிருக்கிறாள். ‘டொக்ரரின்ர துண்டில்லாம இஞ்ச வராத’ என்று திட்டி அவமானப் படுத்தியிருக்கிறார்கள். அப்பம்மா இப்படியான அவமானங்களைச் சகித்துக் கொள்ளக் கூடியவளல்ல. உடையார் பரம்பரை, கௌரவம் என்று எந்த நேரமும் சொல்லியபடியிருப்பாள். மிகவும் இடிந்து போனாள். கியூ நிரம்பி வழியும் வைத்தியசாலைக்குச் செல்வதென்றால் தனியார் பேரூந்தில் வெளவால் போலத் தொங்கிப் பிரயாணம் செய்ய வேண்டும். அப்பம்மாவை ரவுணுக்குள் கொண்டுபோய் ஒரு சுற்று சுழட்டிவிட்டால் இடம் வலம் புரியாது திணறுவாள். எங்கனம் அவளால் ஒரு நாசமறுந்த சிபாரிசுத் துண்டைப் பெற்றுத் தர இயலும்? ஹோர்லிக்ஸோ நெஸ்டோமோல்டோ தேவையில்லை - அவற்றை எடுக்காமல் விடுவோம் என கைவிட்டோம். குழந்தைப் பிள்ளை போல அரற்றிக்கொண்டிருந்த அடுத்த நாள் அவளுக்குக் காய்ச்சல் கண்டது.
அப்பம்மா காய்ச்சலில் அவதிப் பட்டுக் கொண்டிருந்த போது கூட எமது உடல்சார் தகுதியீனங்களைக் கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தாள். அவளை விட எங்களெல்லோருக்கும் காய்ச்சல் விரைவில் தொற்றிவிட்டது. நோஞ்சான்கள் என்றாள். தான் ஒடியல் பிட்டு, ஊரரிசிச் சோறு, இலை குழை தின்று வளர்ந்ததால் தான் தாக்குப் பிடிக்க முடிந்ததாகவும் ஓயாமல் சொன்னாள். நான் அவள் கூறிய தின்பண்டங்களைக் கண்டதில்லை. ஊரரிசிச் சோறு ஓகஸ்டிற்குப் பிறகு யாழ்ப்பாணத்திலேயே இல்லை.
‘குப்பி விளக்கின் வெளிச்சத்தில் நிலா இருண்டு கிடக்கிறது, ஒரு தேசத்துக்கான கனவு வேகிக் கொண்டிருந்த அவளுடைய பானையில்’mj வேகிறது வண்டும் புழுக்கூடும் கலந்த நிவாரண வெள்ளைக்கோறா அரிசி. அவள் கண்ணீருக்குக் காரணம் ஈரவிறகுப்புகையல்ல…
அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீங்கிவிட்டது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் சகல பிரயத்தனங்களும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில, சிங்கள வார ஏடுகளில் செய்யப்பட்டிருந்தன.2 யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீங்கி விட்டது என அரசாங்கம் அறிவித்துக் கொண்டிருந்தது. அத்தியாவசியப் பொருள்களால் நிறைக்கப்பட்ட கப்பல்கள் வடக்கு நோக்கிக் கிளம்புவதை ஊடகங்கள் முக்கியத்துவப் படுத்தி வெளியிட்டன. தூய, இரத்தக்கறை பட்டறியாத வெண்ணிற ஆடையணிந்த மன்மோஹன் சிங் தனது ஆடம்பரமிக்க குளிரூட்டப்பட்ட ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்து அரசியல் ஆலோசகர்களுடன் கலந்து பேசி ‘ஈழத் தமிழர் மீதான வன்முறைக்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது’ என்ற பொன்வாக்குடன் கருணாநிதிக்குக் கடிதமெழுதிய போது யாழ்ப்பாணத்தின் நிலமைகள் எவ்வாறிருந்தன?
-ஷம்பூ பாக்கெட்(7ml) ஒன்று 25 ரூபா. ஒரு கிலோ சீனி 400 ரூபா. சன்லைட் சோப்பின் விலை 180 ரூபா. குளியல் சோப்பின் விலை 150 ரூபா. சலவைத் தூள் பக்கட் 30 கிராம் விலை 80 ரூபா. இப்படியான பட்டியலை வேண்டுமெனில் உறுதி செய்யமுடியும். ஆனால் எம்மால் தெளிவான விவரணங்களைத் தரவே முடியாது. எதுவுமே தெளிவாயில்லை. மேலும் எமது கண்களில் எந்தக் கண்ணாடி எப்போது யாரால் மாட்டப் படும் என்பதைக் கூட எம்மால் அறியமுடிவதில்லை.
ஒரு தெந்தெட்டான வெளிச்சத்தில் தான் இந்த முறை பாலன் பிறந்தார். ஊரடங்கு தளர்த்தப் பட்டதாய் படைத்தலைமையகம் அறிவித்தது. பிரதான வீதி, படைநிலை அருகாமை தவிர்ந்த தேவாலயங்களில் மாத்திரம் நத்தார் ஆராதனைகள் நடைபெற்றன. நள்ளிரவு ஆராதனைகள் இன்றி பெரும்பாலான தேவாலயங்கள் வெறிச்சோடின.
‘ஊரடங்கிய இரவில் பிதாவே, நீர் பிறந்த போது அந்நியராய் இருந்தோம். எங்கள் நகரில் மந்தைகளாக நடத்தப் பட்டோம் எங்கள் முற்றங்களில். பிதாவே, சிதறிப் போனார்கள் குரல்கள் கைப்பற்றப்பட்ட சனங்களெல்லாம், வெறிச்சோடியுள்ளன வீடுகள். தேவாலயத்தின் வழிகளெல்லாம் உதாசீனம் செய்யப்பட்ட அவர்களின் துயரங்கள்.
சேவல் கூவுவதற்கு முன்பாக பேதுரு எல்லாவற்றையும் மறுதலித்தான். சிறைபிடிக்கப் பட்ட நகருள் என்றாலும், நீர் பிறந்துள்ளீர்! குருதியாறாத நிலத்தில், நித்திய மோகனத்தில்….’ak
நத்தாருக்குத் தயாரிக்கும் விசேட தின்பண்டங்களையோ கேக்குகளையோ தயாரிக்கும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு கிலோ கேக்கிற்காக 400 ரூபாவை பேக்கரிகளில் கட்டிவிட்டு லைனில் நிற்க வேண்டியிருந்தது. அந்தக் கேக்கிற்கும் பாணுக்கும் இனிப்பைத் தவிர்த்துப் பெரிதான வேறுபாடுகள் ஏதும் இருக்கவில்லை. கேக்கிற்கான விசேட உள்ளீடுகள் ஏதுமற்று ஒரு பணிசைப் போலவே இருந்தது நத்தார் கேக்.
புது வருடமொன்று பிறந்ததாக பெரும்பாலானோர் உணரவே இல்லை. கொண்டாட்டம் என்பதற்கு நேரமோ, மனவிருப்போ இருக்கவில்லை.
இலங்கையின் மாநகரங்களில் நத்தார் புதுவருடத்தையொட்டிய களியாட்டங்கள், கேளிக்கை விநோதங்கள் நடந்த வேளை சாம்பல் நகரத்தில் பின்வரும் புதினங்கள் நிகழலாயின:
< < ‘வரிசையில் நிற்றல்’ அடிக்கடி வருகிறதே என சலித்துக் கொள்ளக்கூடாது. அது அப்படித்தான். வாழ்வதைப் பற்றிப் எழுதுவதும் வரிசையில் நிற்பதைப் பற்றி எழுதுவதும் இருவேறு விடயங்களல்ல எமக்கு.
புது வருடத்தன்று நான் வரிசையில் நின்றேன். நானாவிதப் பொருட்கள் வழங்கப்படும் என செய்தி வந்திருந்தது - வழக்கம் போலவே அவை எவை என்ற குறிப்புகளின்றி! ஒளிகடைகளில் (கறுப்புச் சந்தை) சன்லைட் லக்ஸ் சோப்புகள் 150-180 ரூபா வரையிலான விலைகளில் விற்கப் பட்டன. நானாவிதப் பொருட்களுள் நூடில்ஸ், கடுகு, வாசனைத் திரவியங்கள் இருந்தன. மத்திய வகுப்பினதும், மேல்தட்டினதும் நுகர்வுக்கேற்ற பொருட்கள் இருந்தன. சோப்புகளோ, ஷம்பூக்களோ இருக்கவில்லை. சோப்பும் ஷம்பூக்களும் அமைச்சர் ஒருத்தரின் ஆசீர்வாதத்துடன் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப் பட்டவை என்று கதைகள் உலவின : சங்கக் கடைகளில் சோப்புகளும் ஷம்பூக்களும் மாத்திரம் இருக்கவில்லை. வழங்கப் பட்ட நானாவிதப் பொருட்களும் நானாவிதமாக வழங்கப்பட்டன. ஒருத்தருக்கு கிடைக்கும் பொருள் இன்னொருத்தருக்குக் கிடைக்காது. விநோதமான நடைமுறைகள். எதிர்த்து ஒருவார்த்தை பேச முடியாது. கிடைப்பதும் கிடைக்காமல் போகலாம். சனங்கள் ‘ம்’ மட்டுமே கொட்டினார்கள். மண்ணெண்ணை வினியோகிக்கப் பட்டபோது 6 ரூபா மிச்ச சில்லறைக்காக வாதாடிய ஒருவரை சனங்கள் ஒரு கேவல உயிரியைப் போல பார்க்குமளவுக்கு நெருக்கடியின் அழுத்தங்களுக்குத் தம்மைப் பழக்கிக் கொண்டிருந்தனர். நியாயம் கேட்பவருக்குச் சங்கக் கடை சார்பாகச் சில்லறைக் காசுகளைத் தந்து பிரச்சனையைத் தவிர்த்துக் கொள்ளும் பண்புடையவர்களாக யுத்தம் அவர்களைப் பழக்கியெடுத்திருக்கிறது. > >
< < ஓகஸ்டிலிருந்து அப்பாவுக்குச் சம்பளம் இல்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பளையில் கடமையாற்றிக் கொண்டிருந்த அவருக்கு முகமாலை பாதை மூடப்பட்ட பின்னர் எதுவித மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் படவில்லை.3 உள்ளூர்ப் பாடசாலையொன்றில் சென்று கையெழுத்திட்டு வந்தார். மாற்றத்துக்கு இதய நோயைக் காரணம் காட்டி விண்ணப்பித்திருந்தார். அம்மாவின் சம்பளத்தில் தான் ஒருமாதிரி சமாளித்துக் கொண்டிருந்தோம். அதற்கும் இடிவிழுந்தது: யுத்தம் ஓய்ந்து போனதாய்த் தோற்றம் காட்டப்பட்ட நான்கு வருட நிலமைகளில் மயங்கி வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கவென லோன்களை எடுத்து வைத்திருந்தோம். ஆண்டிறுதி அறிக்கைக்கு கணக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எம்மையும் எம்மைப் போன்ற பலரையும் தொண்டையில் பிடித்தன வங்கிகள் (அரச, தனியார் எல்லாமே). நெகிழ்வுப் போக்கு என்பதே இருக்கவில்லை. 27ம் திகதி இறுதி நாள் குறிக்கப் பட்டிருந்தது. இல்லாவிடில் சொத்துப்பறிமுதல் போன்ற வெருட்டல்களும் இருந்தன. வங்கிச் சட்டங்கள் பற்றி ஏதுமறியாத 99 வீத வாடிக்கையாளர்கள் முழிபிதுங்கினர். வங்கிகள் - அழகான முழுப்பக்க வர்ண விளம்பரங்களை, இனிய முகங்கள் வரும் தொ.கா விளம்பரங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தும் வங்கிகள் - கந்து வட்டிக்காரர்களை விடக் கேவலமாக தரம் தாழும் என்று யார் நினைத்தார்கள்? நகைகளை அவற்றின் பெறுமதியில் இருந்து மிகவும் குறைந்த தொகைக்கு அடகு வைத்து, விற்று பணம் கட்ட வேண்டியிருந்தது.
எமது அயல் வீட்டார் குறித்த திகதியினுள் குறித்த தொகையைத் திரட்ட முடியாத நிலையில் வங்கியின் அனைத்து ஆட்களிடமும் கெஞ்சி அழத் தொடங்கியிருந்தனர். வேறு வழிகள் ஏதுமில்லாத நிலையில், தமது சிறு வீட்டின் ஓடுகளைக் கழட்டி, ஜன்னல் நிலைகளைக் கழற்றி வேறு பல முக்கிய பொருட்களை விற்று சேர்த்த பணத்தில் வாடகை வீடு பார்க்கத் தொடங்கினார்கள். ஏலத்துக்கு வீடு போகப் போகிறதாம் என்ற செய்தியைக் கேட்ட நேரம் தொட்டு அவ்வீட்டின் மூதாட்டி ஈனக் குரலில் அழுதுகொண்டிருந்தாள். அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்யும் வரை அவர்கள் சண்டை பிடிக்கும் சத்தமும், பெண்கள் அழும் சத்தமும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அப்பாவுக்கு அவர்கள் எமது வீட்டிற்கு அருகிலிருப்பது பிடிக்கவில்லை. ஏப்பம் விடுற புதுப் பணக்காரர் என்பது அவரது அபிப்பிராயம். அவர்கள் உரத்து வாக்குவாதப்படுகையில் அப்பா பெலத்த குரலில் ‘என்ர பிள்ளையள் படிக்க வழியில்லை’ என்பார். இதன் பின் அந்த வீட்டின் விளக்குகள் அணையும். மிகவும் உரத்த குரலில் மௌனம் ஊளையிடும். > >
< < சங்கக் கடைகளில் ஆறாம்கட்ட நிவாரண வழங்குகையின் போது பெரும் மாற்றம் ஒன்றை அவதானிக்க முடிந்தது:- முந்தைய வழங்குகைகளில், வரிசையில் முண்டியடித்துகொண்டு மற்றவர்களின் ஏச்சுக்களையும் காதில் போட்டு அலட்சியப்படுத்தியபடி பொருட்களைப் பெறத் திமிறிய வர்க்கத்தை இந்த முறை காணவில்லை. வரிசையில் இருந்து காணாமல் போன வர்க்கத்தின் பெயர் ‘கொலனிச் சனங்கள்’. எமக்கு கொலனிப் பகுதியில் வதியும் மாணவனொருவனுடன் தொடர்புகள் இருந்தன. அவன் சிக்கன் குனியாவால் பாதிக்கப் பட்டிருப்பதாய்க் கேள்விப் பட்டோம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பேராலை கிராமத்தில் இருந்து இங்கு வந்து குடியேறிய குடும்பம் அது. அந்த மாணவன் புலமைப் பரிசிலில் கோட்ட முதலாமிடத்தைப் பெற்றிருந்தான். பலரும் ரவுண் பள்ளிக் கூடங்களை நோக்கிக் கை காட்டினர். தாயாரும் ஆசையுடன் பெருந்தொகை பணத்தைத் திரட்டி பிரபல ஆண்கள் பாடசாலையில் சேர்த்திருந்தார். தாய் மாத்திரம்தான். தந்தை ஐ.பி.கே.எப் பிரச்னையின் போது காதுக்குள் வெடிவாங்கிய மனிதர்.
முகமாலைப் பாதை (ஏ.9) மூடப் பட முன்னம் தாய் சனி ஞாயிறுகளில் பேராலைக்குச் சென்று காணித் தேங்காய் மாங்காய் பறித்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் கொண்டு வந்து விற்று உழைப்பவர். வாடகை வீடு - மாதம் 1200 ரூபா. வீட்டின் முன்பகுதியை பல்கழைக்கழக மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த மாணவர்களுக்கு மதிய/இரவு உணவுகளைக் கொடுத்துப் பெறும் பணமும் தேங்காய் மாங்காய்ப் பணமும் என நகர்ந்து கொண்டிருந்தது அவர்களது சீவியம். இப்படித்தான் நாளாந்த வயிற்றுப் பாடு அவர்களுக்கு. ‘அன்றாடங்காய்ச்சி’ என்று மிக வெளிப்படையாக தன் நிலமை குறித்துக் கூறும் அத் தாயுடன் நடந்த சம்பாஷணையின் தேர்ந்தெடுத்த பகுதிகள் வருமாறு:
‘இவனைப் படிப்பிக்கவெண்டுதானே இஞ்சாலை வந்தனான். இவனுக்காண்டித்தான இந்த அறுந்த சீவியத்த இன்னும் சீவிக்கிறன். பாருங்கோ தம்பியவை, வாறா அடிச்சிப் போட்ட ஏலாவாளிச் சீவன் கணக்கில கிடக்கிறான்.., காச்சல் வாய்க்கு ருசியா தின்னக் குடுக்க, குடிக்க என்ன கிடக்கு? ஆட்டுக்கால் கூட (மடத்தல்-றஸ்க் போன்றது) கடைவழிய இல்லை. உவடம் வழிய போய், அங்கினேக்க இஞ்சினேக்க கிடக்கிற இலைகுழையள் வலிச்சு பட்டையள் புடிங்கி எப்பன் குடிநீர் வைச்சுக் குடுக்கிறனான். அதான் எப்பனாவது தென்பு’
‘ஒரு மருந்து கூட இல்லையப்பன். பனடோலைத் தன்னும் கண்ணிலை காட்டுறாங்களில்லை. நாசமறுவாங்கள். கோதாரிபிடிச்ச இந்தக் காச்சல் எனக்கு வந்து மாறி மூண்டு கிழமை. இரட்டிச்சிக் கிட்டிச்சிப் போடுமோவும் தெரியேல்லை.. இப்பவும் நாரியெல்லாம் குத்தி முறிக்கிது, வின்ரோசன் களி கிடந்தா எப்பன் பரவால்ல.. எங்க ஒண்டையுங் காணக் கிடைக்கிதில்லை, சுடுதண்ணி ஒத்தணந்தான் கெதி.’
‘ரவுணில எனக்கு ஒரு பதிவும் இல்லை. எங்கட வீடெல்லாம் 2001 அடிபாட்டிலை உடைஞ்சு போட்டு. லோனுகள், ஈட்டுக்காசுகள் தருவாங்கள் எண்டு என்ர பதிவெல்லாம் அங்கத்தே விதானைட்ட.. பேராலை பொடியளிர கொன்ரோல் தான, என்னட்டையும் இவனிட்டையும் அங்கத்தையான் ஐ.சிதான் கிடக்கு. இஞ்ச இவனை வெளியிலை திரியவிடவும் பயமாக் கிடக்கு. வன்னி ஐ.சியப் பாத்தாலே கொண்டுபோடுவாங்கள். அங்கையும் இவன்ர வயசுத் தரவழிய வைச்சிருக்கேலா - வா றெயினிங்குக்கு எண்ணுவாங்கள். படிப்புக்காண்டித் தானே இஞ்சாலை வந்தது. ஒண்டும் பண்ணாமலே இஞ்ச கிடந்து பயந்து சாகிறதுக்குப் பதிலா றெயினிங் எடுக்க விட்டிருக்கலாம்.’
‘உவன் விதானைட்ட ஒரு பத்து நாள் வெய்யிலுக்குள்ளால நடந்து அலைஞ்சிருப்பன். ஒரு நாள் அத்தினை சனத்துக்கு முன்னாலையும் அழுதன் ராசா, அதுக்குப் பிறகுதான் தற்காலிகப் பதிவெண்டு ஒரு துண்டு தந்தாங்கள். கூப்பன் காட் தந்து முடிக்கிறதுக்கு இடையில மூண்டு கட்ட நிவாரணம் குடுத்திட்டாங்கள். காசுக்குத் தான் அடுத்த கட்ட நிவாரணமும் எடுத்தம். கம்பஸ் பெடியளும் போட்டாங்கள். செப்பனான செப்புச் சல்லியும் இல்லை - வருச நாளும் அதுவுமா, காசுப் பேணிக்குள்ளை ஒரு காசும் இல்லை. கிடக்கிறது இந்த ஒருசோடித் தோடுதான்; வெறும் அரைப் பவுண். என்ன செய்யப் போறனெண்டு தெரியேல்லை. அரளிக் கொட்டை திண்டு சாவமோ எண்டும் யோசிக்கிறனான்.’
‘சீவியம் சீயெண்டு போச்சு. சங்கத்துக்கெண்டு போய் காலுளைய நிண்டு, சாமான் முடிஞ்சுது, நாளைக்கு வா, நம்பருக்குத் தான் சாமான், ஆனாக் காட்(அகதி) ஊனாக் காட்(உத்தியோகத்தர்) எண்டு அவை விளம்புறதைக் கேட்டுக் கொண்டு பேசாம வரோணுமாம். இவ்வளவு காலம் சண்டைக்க அல்லல் பட்டிருக்கிறம் - இப்பிடிக் கிழிசு கெட்ட சீவியம் ஒரு நாளும் சீவிக்கெல்லை. எம்.ஈ குடு, அது இது, சத்தியக் கடதாசி எண்டெல்லாம் ஏதோதொ சொல்லுறாங்கள். அவனிட்டப் போய் இவனிட்டப் போய் எல்லாக் கஷ்ரமும் சொல்லிப் புலம்பியும் ஒரு பிரோசனமும் இல்லை. ஒரு கட்ட நிவாரணச் சாமான் வாங்கி முடிக்க அய்நூறாவது வேணும். நான் அவ்வளவு காசுக்கு ஆற்ற தொண்டையைப் பிடிக்கிறது? எனக்கு நிவாரணமெல்லாம் கட்டாது. சமுத்திக்குக் கடதாசி குடுத்து பாத்தன் - வேலையில்லை. கூப்பன் காட்டை அடகு வைச்சிட்டன். 1300 கிடைச்சிது. அதை வைச்சுத் தான் உப்புக் கஞ்சி, மரவெள்ளி, இலைக்கஞ்சி எண்டு நாளைத் தாக்காட்டுறன்… சங்கந் தந்த கோறா முடியத்தான் இருக்கிது கூத்து.’
‘காட்டை அடகு வைச்சது பிழையென்றியளோ? தம்பியவை உங்களுக்கு விளங்காது, இவை தந்த மாவையும் அரிசியையும் வைச்சு என்ன பண்றது? வாடைக்காசு முதலாம் திகதி வைக்காட்டி வீட்டுக்காறன் தொண்டைல பிடிப்பான். சாமான் சக்கட்டெல்லாம் தூக்கியெறிஞ்சு போடுவன் எண்டு முந்தியும் வெருட்டின ஆள் அவன். (ஒலிப்பதிவு தெளிவில்லை) என்னண்டு தம்பியவை? முட்டையிர்ற பத்து பதினஞ்சு கோழியளும் மூண்டு சாவலும் தான் இப்ப நாங்கள் சீவனம் நடத்தப் பிடிமானம். அதுகளுக்கு எங்கால இருந்து தீன் போடுறதெண்டு யோசிச்சியளோ? முட்டை வித்துத் தான் அண்டண்டாடு வயித்துப்பாடு. பிழை சொல்லியினமாம் பிழை. விளங்கிக் கொள்ள வேணும் தம்பி. வாழைப்பழந்தான் எரெப்பன் மலிவிலை கிடைக்கிது. அதான் காலைச்சாப்பாடு. இவனை இதுக்குப் பழக்கப்படுத்துறதுக்குள்ள எனக்குச் சீவன் போடும்.’
‘முந்த நாள் ஏப்பைக்காம்பால நல்ல அடி. பாவம் - தளும்பு கண்டிப் போச்சுது. தடவி உருவ நல்லெண்ணையும் இல்லை. ஏன் அடிச்சனானெண்டு கேளுங்கோ - பள்ளில குழைசோறு குடுக்கிறவங்கள் தான, இந்த ஜமீந்தார் அய்யா (மகன்) அது தின்ன மாட்டாராம், தனக்குச் சாப்படு கட்டித் தரட்டுமாம். வகுப்பில ஒரு பொடி கூட குடுக்கிற குழையல்ச்சோறு தின்றேல்லையாம். அந்தச் சோறு அரியண்டமாம், குப்பையாம். சனம் பசியில சாகுது கதையக் கேளுங்கோ. தான் மட்டும் வாங்கிச் சாப்பிடுறதைப் பாத்தா நக்கலடிப்பாங்களாம். பட்டம் தெளிப்பங்களாம்.
நான் ஆசைப்பட்டது பிழைதான் தம்பி. உங்கள்ள ஆராவது வேனாக்கள் இருந்தா கோவிக்கக் கூடாது - அது வெள்ளாமாக்கள் பள்ளிக்கூடம். விரலுக்குத் தக்கது தான் வீக்கமெண்டு நான் அங்கினேக்கையே கிடந்து படிப்பிச்சிருக்கலாம். ரவுணுக்குப் போய் பெரிய படிப்பு படிப்பிக்கிறன் எண்டு வயிறு எரிஞ்ச சீவங்களின்ர நாக்கு வேலை செய்யிது.’
-எரிகின்ற எல்லாப் பிரச்சனைகளும் எயார் கண்டிஷனில் விவாதிக்கப் படுகின்றன.as அகதிகளுக்கான அய்.நா காரியாலத்தின் யாழ் அலுவலகமும் எயார் கண்டிஷன் செய்யப் பட்டிருக்கிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான(IDPs) அய்.நா ஏற்பாடுகள் மீது நான் காறித் துப்பவா அல்லது மூத்திரமடிக்கவா? > >
< < வரிசையில் 99 வீதமானோர் பெண்களாயிருந்தோம். மாதவிடாய்க்காலத்தில் பயன்படும் சனிட்டரி நாப்கின்களைப் பெற்றுக் கொள்வதற்கான கியூ இது. எனக்கு மூன்று நிலைகள் முன்பாக சிறுவனொருவன் நின்று கொண்டிருந்தான். ஒருவிதமான ஆர்வத்தைக் கிளறும் பொருளைப் போல அனைவரும் அவனைப் பற்றி இரகசியமாய்ச் சிரித்தார்கள். மனேஜரின் கவுண்டருக்குள்ளாக பங்கீட்டு அட்டையை அவன் நீட்டியதும், மனேஜர் மிகவும் வக்கிரமாய்க் கேட்டான் :
‘வெளியில எத்தினை ரூபாக்கு விக்க உத்தேசம்?’
‘கொப்பர், நீங்கள் இரண்டு பேர் பெடியள். உங்களுக்கும் சுகமில்லாம வாறதோடாப்பா?’ (வரிசையிலிருந்து சிரிப்பு)
‘—’
‘இல்லையண்ணை அம்மாக்குத் தான்’ மெதுவாக மிக அப்பாவித் தனத்துடன் முணுமுணுத்தான் சிறுவன்.
‘படவா ராஸ்கல், கதைக்கிற கதையை, ஆருக்குப் பூச் சுத்துறாய்? கொம்மாக்கு 60 வயசு. (பங்கீட்டு அட்டை கவுண்டருக்கு இப்புறம் வீசப்படுகிறது) வடிவாப் பார் கூப்பனிலயும் எழுதிருக்கு.’
‘அண்ணை. அம்மா போன வருசந்தான் டி.என்.சி செய்தவா. திரும்பவுமாம் எண்டு சொல்லி வாங்கச் சொன்னவா, அவாக்குக் காச்சலண்ணை’
‘அடி சக்கையெண்டானாம், உப்பிடி எத்தினை பேரடா கிளம்பியிருக்கிறியள்? காது குத்தாத எனக்கு. போ.. போய் டொக்ரரின்ர துண்டு வாங்கிக் கொண்டு வா. நிண்டு நேரத்தை மினக்கடுத்தாத’
அவன் திரும்பிய போதுதான் முகத்தைத் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது; மீசை அரும்பும் வயது தான். அவமானமும் கோபமும் மிகத் தெளிவாகத் தெரிந்தது முகத்தில். தலையைக் குனிந்தவாறு அவ்விடத்தை விட்டகன்றான். தாய்க்குக் காய்ச்சல். இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்குத்தன் முன்நிலையில் கூனிக் குறுகி எனக்கு இப்பவும் சுகமில்லாம வாறது, துண்டு தாங்கோ எனக் கேட்டு, அதை வாங்கி வந்து கியூவில் நின்று கோர்ட்டெக்ஸ் வாங்குவது எவ்வளவு அசாத்தியம்? அவனுடைய முகத்தை வைத்து நான் ஊகித்தேன்: இன்றைக்கு அந்த வீட்டில் பிரளயம் தான். > >
< < 03-01-2007 அன்று அரச அதிபர் ‘சங்கங்களால் தனித்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது’ என அறிவித்ததன் மூலம், தனியார் வர்த்தக முதலைகளுக்கும் இதர அமைப்புக்களுக்கும் விநியோக சுதந்திரத்தை வழங்கினார். (59 சங்கக் கடைகள் உடைக்கப் பட்டு பொருட்கள் களவாடப்பட்ட சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களைக் காட்டித் தராததையிட்டு ஆதங்கப் பட்ட அவருக்கு இதற்கெல்லாம் மூலகாரணமான இருவரைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிடத் தெரியவில்லை. தப்பித்தல் மொழியிலமைந்த பதில்களை அரச அதிபர்கள், ஆயர்கள், பிரபலங்கள் என எல்லோருமே மனப்பாடம் செய்து வைத்திருப்பது ஒன்றும் புதிய விடயமில்லைத் தானே…)
கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமும் தனது பங்கிற்கு பொருள் விநியோகத்தை ஆரம்பித்தது. தென்மராட்சிப் பிரதேச அரச ஊழியர்களுக்கான பொருள் விநியோகம் 05-01-2007 அன்று ஆரம்பமாகியது. ஒழுங்காக பத்திரிக்கைகளில் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை. அரசல் புரசலாக கேள்விப்பட்டு குருநகரில் இருக்கும் சமாச வளாகத்துக்கு மீசாலையில் இருந்து பஸ்பிடித்து வந்திருந்தேன். சமாச முன்றலில் சன நெரிசல். நல்லூர் தேர் போல இருந்தது. பொருட்களைப் பெறுவதற்கான பதகளிப்பில் எல்லா அரச ஊழியர்களும் ஆவலாதிப் பட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென சமாசத் தலமை பொருட்கள் வழங்கப் படாது இலக்க ரோக்கன் கள் மாத்திரம் வழங்கப் படும் என அறிவித்தது. முண்டியடித்து ஆண் - பெண் வித்தியாசங்கள் அறுந்து போய், தங்களுக்குள்ளே வசவுகளைப் பரிமாறிக் கொண்டு பொருட்களுக்கான டோக்கனைப் பெற அந்தரப் பட்ட கூட்டத்தில் எந்த வித நாகரீகமோ, நளினமோ இருக்கவில்லை, நாம் அதை எதிர்பார்க்கவும் கூடாது. இத்தனைக்கும் அவர்கள் எல்லோருமே ஆசிரியர் தொடங்கி விரிவுரையாளர் வரையான உயர்பதவிகளில் இருப்பவர்கள். தேவை, நெருக்கடி, பற்றாக்குறை, எல்லாமாகச் சேர்ந்து காட்டுமிராண்டி நிலைக்கு இட்டுச் செல்ல இடிந்து வீழ்கிறது எமது இத்தனை நாளைய தனித்துவங்களும் நாகரீக உயர்குடிப் பெருமைகளும். சமாச வளாகத்துக்கு அண்மையிலிருக்கிற காவலரண் சிப்பாய்கள் வேறு தலையிடியாய் இருந்தார்கள். அவர்களது நிலைக்கு சமீபமாக நிறுத்தப் பட்ட சைக்கிள்கள் வீதியோர மதகினுள் தூக்கிப் போடப் பட்டன. பல சைக்கிள் வால் ரியூப்புகள் பிடுங்கப்பட்டிருந்தன. குருநகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் தென்மராட்சியானுக்கு ஏன் முதல்ல என்று குழப்பம் விளைவித்தார்கள். ஒரு ஆசிரியைக்கு வழங்கப் பட்ட ரோக்கன் அடித்துப் பிடுங்கப் பட்டது. அவமானத்தில் குறுகிப் போன அந்த ஆசிரியை, அந்த நிமிடமே சமாசத்தை விட்டு வெளியேறினார். இந்தக் குழப்பங்கள் அனைத்துமே அங்கிருந்த சிப்பாய்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திற்றுப் போலும் - விசிலடித்துச் சிரித்துக் கொண்டார்கள். சமாசத்தின் கடைநிலை ஊழியர்கள் கூட குத்தலான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தினர். காட்டுமிராண்டிகளாக நடந்து கொள்ளும் படிக்கு அந்த மக்கள் கூட்டத்தை சமாசம் தூண்டிக்கொண்டிருப்பதாகவே தோன்றிற்று.
கூட்டாக நெரிபடுவதில் ஒருவித வதைத்தலித (sadomasochistic) மனநிலையுடன் அனைவரும் பங்கெடுத்தார்கள் என்பதை ஒரு கவனிப்பாக இங்கு சொல்லியாக வேண்டும். நெரிபடும் போதும் சிரித்துக் கொண்டார்கள். நெரிக்கும் போதும் சிரித்தார்கள். ஒரு விளையாட்டு மைதானமாய் மாறிப்போய் விட்டிருந்தது சமாசம். உடல்களின் நெரிசல் தரும் புழுக்கத்தை விடவும் ஒருவித குழுச் சாகச உணர்வு மேலோங்கியிருந்தது. தென்மராட்சியின் ஊர் அடிப்படையில் கன்னை கட்டி இவ்விளையாட்டில் ஈடுபட்டோம். இன்றைக்குப் பொருட்கள் இல்லையாம் என்ற ஏமாற்றத்தில் சமாசத்தை அசிங்கமான வசவுகளால் திட்டியபடி வீடு திரும்புகையில் நெரித்தல்-நெரிபடலை சாகச நிகழ்வொன்றைச் சொல்வதான தொனியில் அனைவரும் நினைவு கூர்ந்தோம். பெண்கள் ஒன்றும் விதி விலக்கல்ல. ‘தன்னை மிதித்த தடியனின் பெருவிரலை ஹீல்ஸால் நசித்ததை’ தனது சினேகிதிகளிடம் சொன்ன போது நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
இலக்க ரோக்கன் பெற்றுக் கொண்டவர்களுக்கான விநியோகம் 14-01-2007 அன்று இடம்பெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. மறுநாள் தைப் பொங்கல். நேற்றுத்தான் வீடெல்லாம் ஒதுக்கிக் கழுவி களைத்துப் போயிருந்தேன். சலிப்புத் தான் மிஞ்சியது அறிவித்தலைக் கண்டவுடன். பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்காகவும் பிசகுகள் நிறைந்த திட்டமிடலுக்காகவும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த சமாசம் மீண்டுமொருமுறை தனக்குத்தானே சூடு போட்டுக் கொள்ளாது என்ற அரைகுறை நம்பிக்கையில் தான் சமாசத்துக்குச் செல்ல முடிவெடுத்தேன். விடியற்காலை பனிக்குளிரில் நடுங்கியபடி குளித்து 5.30இற்கே மோட்டார் சைக்கிளை எடுத்து விட்டேன். மாவடிப் பிள்ளையாருக்கு ஒரு சலாம். இப்பால் மீசாலைச் சந்திக்கு வருகையில் பிரச்சனை மணத்தது. படைநிலை மீது கிளைமோர் வெடிக்கவைக்கும் நோக்கில் வீசப்பட்டிருந்தது. அதைக் கண்டெடுத்த சிப்பாய்கள் அவசியமேயில்லாமல் அவ்வழி போவ்வொர் வருவோரையெல்லாம் துவக்குச் சோங்கால், கைகளால் அடித்துக் கொண்டிருந்தார்கள் மூன்று இளைஞர்கள் முட்டுக்காலில் நிறுத்தப் பட்டிருந்தனர். இரண்டு மனித்தியாலங்கள் புத்தூர் சந்தியில் உள்ள வீடொன்றில் தஞ்சம் கோரி ஒளித்து நின்றேன். நாவற்குழியின் வெய்யிலில் அரைமணி நேரம் காய்ந்து செக்கிங் முடித்து 11 மணிக்கு சமாசத்துக்கு வந்து சேர்ந்தேன். முன்பெல்லாம் வெறும் அரைமணித்தியாலம் செலவழிகிற யாழ்ப்பாண வருகை இப்போது ஆறரை மணித்தியாலங்களாய் மாறிப் போனது. சமாசம் பூட்டப் பட்டிருந்தது.
விநியோகம் பிற்போடப்பட்ட சமாச்சாரம் பத்திரிக்கைகளில் அறிவிக்கப் பட்டிருந்ததாய் பின்னரே அறிய நேர்ந்தது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று, பத்திரிக்கைகள் ஏழு மணிக்குப் பின்னரே நாவற்குழிக்கு இப்பால் இருக்கும் பிரதேசங்களுக்கு கிடைக்கின்றன. சம்பவங்கள் (பத்திரிகை வழக்குத் தமிழில் - ‘அசம்பாவிதங்கள்’) இடம்பெறின் இந்த நேரத்திலும் மிகவும் பிந்தலாம். இரண்டாவது, ஓகஸ்டிற்குப் பின்னர் பத்திரிக்கை என்பது ஒரு ஆடம்பரப் பொருளாகிவிட்டது. இத்தகைய செலவொன்றைச் செய்ய நான் ஒன்றும் என்.ஜி.ஓ காரனல்ல. > >
கிறிஸ்துமஸ்ஸை அண்டிய காலப்பகுதியில் மந்து பத்தின நாட்களில் இருந்து சற்றேனும் வெளிவர முடியுமாய் இருந்தது. ஓரிருவர் சேர்ந்து திரியத் தொடங்கினோம். ஆனால், ‘யாருடைய வீதிகளிலோ நாங்கள் நடந்து கொண்டிருப்பதாய்’ss உணர்ந்தோம். கிளைமோர் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் விபத்தைப் போல நாம் சிக்கிக் கொண்ட போது எங்கள் கன்னங்கள் சிவந்தன. வீதியினோரம் தள்ளிச் சென்றார்கள் என்னை. சித்திரவதைகளைக் குறித்து வாசித்தவையும், கேட்டறிந்தவையும் ஓடி மறைந்தன மூளையினுள். நாசித்துவாரத்துள் மிளகாய்த் தூள் வாசனை. எனது அன்னையை மிகவும் இழிவாய் அவர்கள் பேசிய போதும் என் உதடுகள் இளித்தன. நான் ‘சேர்’ போடத் தொடங்கினேன். எந்தக் கோபத்தையும் வெளித்தெரிய விடவில்லை நான். உதடுகளை மீறித் தோல் வளர ஆரம்பித்தது.ss ‘முகத்தில் ரத்தம் பிசுபிசுத்தது. இறுதி வார்த்தையையும் அழுது முடித்திருந்தேன்.’mj
அவ்வழியே சைக்கிளால் வந்த வயோதிபர் என்னைக் கண்டிருக்க வேண்டும். எனக்கு மிகச் சமீபமாக, மிக உண்மையாக பலன்ஸ் தடுமாறி விழுவது போல விழுந்தார் அவர். தன்னைத் தூக்கி விடும்படி கண்காட்டினார். நான் புரிந்து கொண்டேன். அவரைத் தூக்கி விடும்போது சிப்பாய் ஒன்றும் சொல்லாமல் அவதானித்துக் கொண்டிருந்தான். தூக்கி விடுகையில் ‘நேரங்கடத்து’ என மிக மெதுவாய் முணுமுணுத்தார். சைக்கிள் செயினை நோக்கிக் கண்காட்டி விட்டு முழங்காலில் வலி என்பது போல அரற்றத் தொடங்கினார். சைக்கிள் செயினை மீளப் பொருத்துவதில் மினக்கட்டேன். எம்மைச் சுற்றி ஆட்கள் கூட, அப்பாடா - அன்று தப்பித்தேன். எனக்கு ஓலமிட வேண்டும் போல இருந்தது. சத்தமிட்டு அழப் பயமாகவும் இருந்தது. என் கையில் ஏன் துப்பாக்கி இருக்கவில்லை? மனித உரிமைப் பூனாக்களே, பொத்திக் கொண்டு அடங்குக. நான் கொல்வேன். ஏனெனில் நான் மனிதன். என்னால் இதற்கு மேல் எதுவுங் கூற இயலாது, என்னுடைய உதடுகளை மூடி PTA தோல் வளர்கிறது. ‘நான் கண்டேன், சூடாகயிருக்கும் மௌனக்கல் மீது துயரத்தின் கண்ணீர் தெளித்துக் கருகலோசை செய்தோர் குருதியில் நனைவதை, சப்பாத்துக் கால்களில் பிரண்டிருக்கும் யோனி முலைகளின் சிதம்பல்களை, ஆயுள் ரேகையற்ற உள்ளங்கைகளுடன் பிறக்கும் குழந்தைகளை.’ab
‘நகரத்தின் வார்த்தைகள் குருதியாலும் கண்ணீராலும் பிசுபிசுப்பேறிக் காற்றில் அலைவதை, அவை ஒட்டிக்கொள்ளா வண்ணம் மனிதர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதை…. இன்னும் பலவற்றை நான் கண்டுகொண்டேயிருந்தேன்.’ab
வாழையிலையில் வளர்த்தியிருந்தார்கள் அவனது உடலை. போட்டோ பிரதிகள் விநியோகம்; அரசல் புரசலாய் அவனைப் பற்றித் தெரிந்திருந்தது எனக்கு. அவனது வாழ்க்கை அவனுடையது அல்ல. அவனது வெள்ளைச் சீருடையில் படிந்த சகோதரியின் குருதி இயக்கும் வாழ்வை அவன் வாழ்ந்து வந்தானாம். அவனுடைய நண்பர்கள் குறித்து வைத்திருக்கின்றனர் அவனுடைய கதைகளை. காசி ஆனந்தனை, புதுவை இரத்தினதுரையை யாரையும் விட அதிகமாய் அவன் றேசித்தான். பல பாடல்கள் அவனுக்கு முழு மனப்பாடம். ‘மலரப் போகும் தமிழீழத்துக்காய்’ என்று கையெழுத்திட்டு தமக்கை அனுப்பிய வாழ்த்து அட்டைகளை அவன் பொக்கிஷம் போல வைத்திருந்தான்.
அவன் கொன்றானெனச் சொல்லப் படும் சிப்பாய், தோணிகளைச் சொந்தத்தில் வாங்கவென இராணுவத்தில் சேர்ந்த ஒரு காமினியாகss இருக்கலாம். அந்தச் சிங்களச் சகோதரன் மூலம் என் நகரில் சாவின் நிழல் படிய வைத்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் குருதியின் நிறந் தெரியாமல். அவர்களுக்கு நான் சொல்லவேண்டும் அவர்கள் இருவரது உடல்களிலும் இருந்து கொட்டியது சிவப்புக் குருதிதான் என.
‘சிதறிப் போன அந்த உடல்கள் வந்து போகின்றன. மாலை முகம் கழுவும் போது - சவங்களும் விதைகளும் யோனி மடல்களும் - நள்ளிரவில் சவங்கள் என்முன் எழுந்து நின்றன. கால்கள் இல்லாது குறியில் தாங்கி நடந்தன. தன் துயரத்தையும் வேதனையையும் வாய் திறந்து காட்டியது ரத்தத்தைப் பற்றி நீ கனவு காண்கிறாய் என்றது.’ns
‘எனது பாதை மூடப் பட்டுள்ளது. எனது மைதானம் குன்றும் குழியுமாக சிதைக்கப் பட்டுள்ளது. எனது நிலா முற்றமோ நாய்க்குரைப்பின் அச்சத்தில் உறைந்திருக்கிறது. எனது நிழல் வெளியும் கூட பட்ட மரமும் வெய்யிலுமாய் உள்ளது.’vd
‘சமாதான தேவதைக்குத் துணையாக நானிருந்தேன். விடியலில் ஒரு சிறுவனுஞ் சிறுமியும் தாங்கள் கண்டெடுத்த வெண்சிறகுகளைச் சமாதான தேவதையிடம் நீட்டினார்கள். சுவர்களின் பின்னால் எசமானர்களின் நாய்கள் புறாக்களின் எலும்புகளைச் சுவைத்தன. அக்காலைப் பொழுதில் சமாதான தேவதை என்னிடம் ஒரு போர்வாளைத் தந்தாள்.’si ‘நீதி என்பது அரசின் வன்முறை. வன்முறை என்பது மக்களின் நீதி’.ss ‘நகர்ந்து கொண்டிருக்கிற ரயில் வண்டியில் சமநிலை என்பது அசாத்தியமானது’hz தானே?
புலி வாலோடு குழந்தைகள் பிறக்கும் ஒரு தீவில், எல்லாவற்றையும் கொண்ட நூலகம் மீண்டும் மீண்டும் எரிகிறது…..pr
‘மரணம் வடிவமைத்த என் நகரின் வடிவவியல் மிகப்புதிரானது - உண்மையிலேயே.’ab சாவின் மீதான பயம் வீட்டின் வடிவமைப்பை, பாதைகளை, கட்டட அமைப்புகளை, மாற்றியிருக்கிறது. இலகுவாகத் தப்பித்து ஒடும் வகையாக அமைக்கப் பட்ட மதில் உடைப்புகள். வேலிச்சண்டை போட்டுக்கொண்ட அயலவர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட வேலி நீக்கல்கள், கொட்டுக் கடப்புகள். ஒளிவுமறைவாக அமைக்கப் பட்டு மேலே புல்லு வளர்க்கப் பட்ட பதுங்கு குழிகள். எமது நகரின் வடிவவியலை மரணபயம் வடிவமைக்கிறது. உள்வீட்டு அலங்காரங்களை, ஏற்பாடுகளைக் கூட சாவுப்பயம் மாற்றியமைத்திருக்கிறது; குசினிக்குள் விறகடுக்கப்படும் இடத்தினுள் மறைவாக ஏற்படுத்தப்படுகிறது ஒளிந்து கொள்ளக் கூடிய வெற்றிடம்.
வடிவவியலை மட்டுமன்றி எங்கள் உணவு எது, எங்களது நேரசூசி, என அனைத்தையுமே பாதுகாப்பு அமைச்சும், புலிகளும் தான் தீர்மானிக்கிறார்கள். நாம் உடுக்க வேண்டிய ஆடை எது5, நாம் செய்து கொள்ள வேண்டிய சிகை அலங்காரம் எது இதெல்லாம் தீர்மானிப்பது படைத் தலமையகமும், புலிகளும் தான். நாம் வாழ்ந்து வருகிறோம் - எம்முடையதல்லாததாகிப் போய்விட்ட எமது வாழ்வை.
தமிழருக்கு என்று இருந்த தனித்துவமான விழாக்கள் எல்லாம் கொடூரமாக சிதைக்கப் பட்டு வருகிறதைக் காண முடிகிறது. இனத் தனித்துவங்களோ தேசியப் பண்புகளோ அற்ற ஒரு சமூகக் குழுமமாக எம்மை வடிவமைக்கும் முயற்சிகள் தொடங்கி பாதி வெற்றியளிக்கத் தொடங்கியும் விட்டது.
‘ஆடிப்பிறப்பு’ என்றால் என்ன, ஏன் அதைக்கொண்டாடுகிறோம், அதை எப்படிக் கொண்டாடுவது எல்லாமே மறந்து போய்விட்டது எமக்கு. 35 வயதுக்குக் குறைந்த யாழ்ப்பாண வாசிகளில் 95 வீதமானோருக்கு ஒடியற்கூழ் என்றால் என்ன என்று தெரிந்திருக்க நியாயமில்லை. தொடர்ச்சியான இடப்பெயர்வு, தட்டுப்பாடுகள், ஊரடங்குகள் எமது வழக்காறுகள் எல்லாவற்றையும் தின்று விட்ட நிலை. ‘ஆடிப்பிறப்பு’ போன்ற தனித்துவமான கொண்டாட்டங்கள் இப்போது கொண்டாடப்படுவதில்லை. எமது ஞாபகத்தில் இருந்து கவனமாக துடைத்தகற்றப்பட்டவற்றின் நீண்ட பட்டியலில் இதுவுமொன்று. மெல்ல மெல்ல எம்முடைய ஞாபகத் தளத்தை வடிவமைக்கும் சக்தியாக மாறுகிறது பேரினவாத அரசு. மறுபக்கம், தமிழ்த் தேசியவாத சக்திகள் உறைநிலையில் (கட்டுப்படுத்தப்படும் விழிப்பு நிலையில்) எம்மை வைத்திருக்க விரும்புகின்றன.
தைப்பொங்கல் வருகிறது. பசிய வயற் பரப்புகளையும் அது சார் வாழ்வையும் மிதிவெடிகளை விதைத்தோரிடம், உயர்பாதுகாப்பு வலயங்களிடம் இழந்து வருடங்களாகிறது. ‘புதிர்ச் சோறு குழைத்தல்’ ‘வட்டில்’ ‘நாத்துக் கட்டல்’ ஒன்றுமே தெரியாது இளைய தலைமுறைக்கு. தைப் பொங்கலை, ப்ரெஷர் குக்கரில் இனிப்பான குழைந்த பதத்திலான சோறு சமைக்கும் நாளாக மாத்திரமே அறிகிறது சிறுவர்கள் பட்டாளம். அவர்களுக்கு தருவதற்கு எம்மிடம் இல்லாத புன்னகைகளைப் போலவே மரபுகளும் எம் கையில் இல்லை. விசேடமாக மெழுகப் பட்ட சாணகத் தரையில், அதிகாலைப் பனியில் நடுங்கியபடி புதுப் பானை வைத்து வெடி கொளுத்தி சூரியன் உதிக்கையில் பொங்குவது இனி எப்போது சாத்தியமோ? சாத்தியமான காலமொன்று வரும் போது தைப் பொங்கலை நாங்கள் நினைவில் வைத்திருக்கத் தான் போகிறோமா? சர்க்கரைப் பொங்கலைத் தயாரிப்பதற்காக ப.நோ.கூ சங்கங்களில் வழங்கப் பட்ட பொருட்கள் முந்தைய தடவைகளைப் போல குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் பிரிக்கப் படவில்லை. ஒரு அட்டைக்கு 250 ரூபா பெறுமதியான செய்பொருட்கள். பத்து நபர்களைக் கொண்ட வீட்டில் ஒரு சிறாங்கை (ஒரு கைப்பிடி) பொங்கல் தான் ஒவ்வொருவருக்கும். யாழ்ப்பாணத்தின் கால்வாசிச் சனத்தொகையாவது பொங்கல் பொருள்களைப் பெற்றிருக்காது. பணமில்லை, கூப்பன் கார்ட் அடகில், இப்படியான பல காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். பொங்கல் விசேட பொருட்கள் நானாவிதமாக (சங்கங்களின் புகழ்பெற்ற பங்கீட்டு விநியோகம்!) ஒவ்வொருத்தருக்கும் கிடைத்தன. பயறு கிடைத்தவருக்கு சக்கரை இல்லை. கஜு கிடைத்தவருக்கு உருளைக்கிழங்கு இல்லை. இப்படியான புதிர்மிகு விநியோக முறையிலும் சனங்கள் ஆத்திரமடையவில்லை. பொருட்களை மிக நிசப்தமாக பெற்றுச் செல்ல அவர்கள் பெரிதும் விரும்பினர். சிறிய அளவிலான கலகத்துக்குக் கூட தயாரில்லாத அளவுக்கு அவர்கள் சோர்ந்து போயிருந்தனர்.
வழக்கமான தைப்பொங்கல்களில் வடை, முறுக்கு, கொழுக்கட்டை போன்ற பண்டங்கள் தயாரிக்கப் படுவது வழக்கம். வடைக்குத் தேவையான உழுந்து, கடலைப் பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப் பட்டிருக்கவில்லை. தைப்பொங்கல் தைப்பொங்கலாகவே இருக்கவில்லை. அன்று சமைக்கப்பட்ட பொங்கலைச் சோற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது அதன் குழையல் தன்மை தானே தவிர பிறிதொன்றுமில்லை. ஏலக்காய், கச்சான், முந்திரி, பயறு, நிறைந்த தேங்காய்ப் பால், சர்க்கரை போன்றவற்றின் நிறைவற்ற பயன்பாட்டில் சமைக்கப் பட்ட (சங்கங்களில் 2 கிலோ அரிசிக்கு 50 கிராம் சர்க்கரை வழங்கப்பட்டது. சிலருக்கு இதுவும் இல்லை), வழக்கமான சோற்றைப் போலவே, குழையல் தன்மையிலும் நிறத்திலும் மாறுபட்டு இருந்த ஒரு பதார்த்தத்தை நாங்கள் பொங்கல் என்றோம். போயும் போயும் ஒரு பாற்சோறைக் கூட தயாரிக்க முடியவில்லை.
தேங்காய்களுக்குப் பேர் போன யாழ்ப்பாணத்தில் தேங்காய்கள் இல்லை. இந்த நிலையில் தேங்காய்ப் பாலுக்கு எங்கு செல்வது. பொங்கல் பானையினுள் தூவுவதற்கு மூன்று பிடித் தேங்காய்ப் பூவை மாத்திரம் 60 ரூபா தேங்காய் மூடியில் துருவியெடுத்து வைத்திருந்தோம். பால் உடனடித் தேங்காய்ப் பால் மாவை வைத்தே தயாரிக்கப் பட்டிருந்தது. நாம் பாவித்தறியாத சேர்மானமாக அது இருந்த படியால் அதை எங்கனம் கலந்து பாலைத் தயாரிப்பது போன்ற எதுவுமே எமக்குத் தெரிந்திருக்கவில்லை. கட்டிகட்டியாக திரண்டிருந்த சேர்வையொன்றே பலருக்குக் கிடைத்தது. பாற்சோற்றினைத் தயாரித்ததாக பலர் வெளிப்படையாகவே கூறினர். இதிலும் வேதனை என்னவெனில் பால்மாக் கட்டிகள் திரண்டு முழித்துக் கொண்டிருந்த அரிசிக் குழையல்க் கலவையைப் பொங்கல் என்று கூறி நாம் விழுங்கியது தான்.
பலன் கொளிக்கும் என் கிராமத்தின் விளைநிலங்களை, அதியுயர் பாதுகாப்பு வலயம் விழுங்கியது. எஞ்சியிருந்ததை மிதிவெடி விழுங்கியது. கோதுமை மாவுக்கும், பாணுக்கும், வெள்ளைப் பச்சை அரிசிக்கும்6 பழக்கியெடுத்தது முன்னைநாள் அரசாங்கம். இப்போது, சராசரி யாழ்ப்பாண வாசிக்கு ஒவ்வாத கோறா, வெள்ளை அவல் போன்ற பொருட்கள்7 வழங்கப் பட்டன.
பனை உற்பத்திகளை, யாழ்ப்பாண வளங்களின் தன்னிறைவு மழுங்கடிக்கப் பட்டு நிரம்ப நாளாயிற்று. நாளைக்கே நாங்கள் சிங்களவர்களாகிவிடல் கூடும், ஏதும் ஆச்சரியமில்லை. உணவு, மொழி, கலாசாரம் என்பவற்றின் தனித்துவங்கள் சிதைவுறுகின்றன. நவரட்ணம் நவரட்னவாகவும் ஜெயசிங்கம் ஜெயசிங்கே ஆகவும் கமல் கமால் ஆகவும் மாறிவரும் காலத்தில் இது ஒன்றும் பெரிய விடயமில்லைதான்.
தைப்பொங்கல் நெருங்கிய தினங்களில் தனியார் கடைகளும், கூட்டுறவு சமாசம் என்கிற அமைப்பும் உலர் உணவுப் பொருள் விநியோகத்தை ஆரம்பித்திருந்தன. நாம் இலக்கங்களிலான வாழ்விற்கான தயார்ப்படுத்தலில் இருந்தோமே தவிர பொங்கலுக்கான தயார்ப் படுத்தலில் அல்ல. அடையாள அட்டை இலக்கம், வதிவிடப் பதிவு இலக்கம், உலர் உணவு டோக்கன், கிளியரன்ஸ் நம்பர், மோட்டர்சைக்கிள் விசேட அனுமதி இலக்கம் - நீண்டு செல்லும் இலக்கங்களின் பட்டியல்.
‘அடையாள அட்டை, வதிவிடப் பதிவு, வார்த்தையிலே சேர்க்க நாலு சிங்களச் சொல்லு. அத்தனையும் பைதனில் பத்திரப் படுத்தி பாதி வழிகளில் இறங்கி ஏறயிலும் படுத்திருந்து சோக்காக கனவு காண்கையிலும் தட்டிக் கேட்பவர்க்கெல்லாம் சளைக்காமல் எடுத்துக் காட்டி, உடம்பு தடவும் உரிமையையும் அவர்களிடம் கொடுத்து, அடிமையாகிப் போன வாழ்வு ஒழிந்ததென்று பாடுகின்ற ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய்நாடே.’
‘ஷெல் வருமோ செவிடுபடுத்தி நாளை செத்தவீடோ.. பல்விழுதலாய் பாட்டி கண்ட கனவு பலித்திடுமோ.. வானம் பிளந்து வந்து விமானம் விழுந்திடுமோ, கண்ணி வெடியில் சிக்கி கால் பாதி முக்கால் போயிடுமோ.. என்றெல்லாம் பயந்தேங்கும் இந்தப் பொழுதுகள் போய்,
பச்சை வயற்பரப்பில் பால் நிலவு இறங்கி வந்து இச்சை தீர்த்துக் கொள்ளும் இன்பப் பொழுதொன்றில், தெம்மாங்கு பாடிவரும் தென்றலோடு பேசி முற்றத்து மல்லிகையை மூக்குமுட்ட முகர்ந்த படி, பக்கத்தேயமர்ந்து பாடலொன்று எழுதுதற்கு ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே…’skp
‘எப்போதும் இருக்கிற காயங்கள் ஆறாத சிதைந்த வெளியிலும்’kk இருக்கவே செய்கிறது எரி நெருப்பில் குளிர்காய்கிற ஒரு கூட்டம். அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு வகையறாச் செய்திகள் இவர்களைப் பொறுத்தவரை வெறுஞ் செய்திகளே. அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாகவே அவர்களுக்குக் கிடைக்கிறது. கேபிள் வழிக் தொலைக்காட்சி அலைவரிசைகளில் எந்தத் தடங்கலும் இல்லை. 24 மணி நேர மின்சாரம் இருக்கிறது. பிரச்சனை தொடங்கிய பிறகு வெளிவந்த அனைத்து தமிழ் சினிமாக் குப்பைகளும் முன்பு கிடைத்த அதே வாடகைக் கட்டணத்தில் கிடைக்கின்றன. முதன்முதலாய் தனியார் வர்த்தகரொருவர் இந்தியாவில் இருந்து பொருட்களைத் தருவித்த போது, அதில் உருளைக் கிழங்கு முதலிடம் பெற்றிருந்தது. நெருக்கடி நிலை தோன்ற முன்னர் கூட ஏழை பாழைகள் உருளைக் கிழங்கு வாங்குவதில்லை. அது ஒரு மேல்தட்டு உணவாகவே அறியப் படுவது வழக்கம். தனியார் வர்த்தக முதலைகளிடம் மக்களுக்கு நியாய விலையில் பொருட்களைப் பங்கிடும் பணி தரப்பட்டிருக்கிறது. உருளைக் கிழங்கு உதாரணம் போதும், இனிவரும் காலங்களில் தனியார் வர்த்தகத் துறையின் போக்கு எந்த வர்க்கத்துக்கு சார்பாய் அமையப் போகிறது என்று தெரிந்து கொள்ள.
என்.ஜி.ஓக்கள் வெறும் பணமுதலை வட்டங்கள். இரண்டு மூன்று தடவைகள் முகாம்களுக்கு விசிட் அடித்து எதையாவது சாட்டுக்குக் கிள்ளித் தெளித்து விட்டு இளிக்கும் மூஞ்சிகளாக சிலதைப் பிடித்து போட்டோ எடுத்துக் கொள்வது. அவற்றை ஊடகங்களில் பிரசுரித்து பெயரும் நன் கொடைகளும் சம்பாதிப்பது. இவர்களது கையில் பாஸ்போர்ட் எத்தருணத்திலும் இருக்கும். உள்ள அத்தனை வங்கிகளிலும் கணக்கு இருக்கும். மக்கள் மீதான கண்ணீர் அரை லீட்டர் அளவாவது தயாராய் இருக்கும்.
அல்லைப்பிட்டியிலிருந்து துரத்தியடிக்கப் பட்டு ஓ.எல்.ஆர் தேவாலய அகதிகள் முகாமில் இருக்கும் அகதிகளுக்கு இன்றுவரை -முன்னரும் நாம் கூறியது போலவே- எந்த ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் படவில்லை. 11-01-2007 அன்று நாம் அங்கு சென்ற போது சனங்கள் தமது கல்வாரி உத்தரிப்புகளை (தேவாலயத்தில் மீள்நிகழ்த்துகை செய்யப்படும் கல்வாரி உத்தரிப்பை) இவ்வாறாகச் சொன்னார்கள்;
‘ஓ.எல்.ஆர் தேவாலய நிர்வாகம் அகதிகளைத் தமது பொறுப்பில் வைத்திருப்பதாய்க் காட்டிக் கொண்டு என்.ஜி.ஓ, தன்னார்வக் குழுக்கள் தரும் நிவாரணப் பொருட்களை அகதிகள் சார்பில் பெற்றுக் களஞ்சியப் படுத்துகிறது. களஞ்சியப் படுத்தப் பட்ட பொருட்கள் உரிய முறையில் வழங்கப் படுவதில்லை என்றும், பல உலர் உணவு வகைகள் தமக்குக் கிடைக்கவே இல்லை என்றும் மக்கள் முறையிடுகிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது வீணான ஆடம்பரங்களால் நிறைக்கப் பட்டது தேவாலய வளாகம். கொண்டாட்டங்களில் இருந்து அகதிகள் வேண்டுமென்றே புறமொதுக்கப் பட்டார்கள். தின்பண்டங்களும், புதிய ஆடைகளும், இசையும் கலந்த அந்த இரவில் அகதிகள் குளிரில் நடுங்கியபடி இதையெல்லாம் காணும்படிக்கு வைக்கப் பட்டார்கள்.’
‘மரியாளின் பாடுகளுக்குச் சற்றும் குறைவில்லாத பாடுகளை முகாம் பெண்ணொருத்தி அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஜனவரி ஐந்தாம் திகதி பிரசவநாள் குறிக்கப் பட்டிருந்தது. பிரசவ கால விசேட தேவைகள் ஒன்றுமே பூர்த்தி செய்யப் படாத நிலை. பாலன் பிறப்புக் குடில் அலங்கார மின்விளக்குகளால் ஜொலித்தது. ‘பனிவிழும் இரவில் கனியொன்று கனிந்தது பெத்லஹேம் குடிலில்’ கரோல் இசைக்கப் பட முகாமில் ஒரு மரியாள் துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.
நள்ளிரவு நேரம் செஞ்சிலுவைச் சங்கத்துக்குப் ஃபோன் செய்து வரவழைக்க வேண்டும் போலவிருந்தது. முன்நூறு ரூபாய் அளவில் ஆம்புலன்ஸ் சேவைக்கு முடியும். தொழிலோ வேறு வருமானங்களோ இல்லாத நிலையில் முன்நூறு ரூபாயைத் தொடக் கை கூசும். சமாளித்து விடியப் போகலாம் என்று தங்களுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டார்கள். லாம்பைக் கொளுத்தி வைத்திய சாலை வரை தூக்கிச் செல்லாலாம் என்ற யோசனை கூட முன்வைக்கப் பட்டது.
பாதிரிகள் ஆசீர்வதிக்கப் பட்ட குமாரனின் பிறப்பைக் குறித்து மட்டுமே அறிந்திருப்பார்கள் போல. ‘ஆயுள்ரேகையற்ற உள்ளங்கைகளுடன் பிறக்கும்’ab எங்கள் நிலத்தின் சிசுக்கள் பற்றி அவர்கள் கவலை கொள்ள எந்த நியாயங்களும் இல்லை. அவர்களிடம் தடிமனான கம்பளிப் போர்வை உண்டு. வழிகாட்டுகிற நட்சத்திரங்களை மூடி மார்கழி மேகம் இருந்தது.
அமெரிக்க என்.ஜி.ஓ மூவிராசாக்கள் தமது பெரிய கார்களில் சிறிய பரிசுப் பொதிகளைக் கொண்டு வந்தனர். அவர்களுடன் கமராக்காரர்களும் வந்தனர். புகைப் படங்களில் தெரிவதில்லை, ஆயுள் ரேகைகளற்ற எம் சிசுக்களின் உள்ளங்கை. ‘When my children are born, Their tiny coffins are waiting for them.’saq
கற்றல் செயற்பாட்டில் மாத்திரம் கவனம் செலுத்தும் படியும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் பத்திரிக்கைகளில் கோருகிறார் மேஜர் ஜெனரல் சந்திரசிறி. (நீலப்படங்களில் கவனஞ்செலுத்துமாறு மேதணிக்கை-12 வரிகள் – என் உதடுகளை மூடி வளர்கிறது PTA தோல்.
பாடப் புத்தகங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது சிங்கள மேலாதிக்கம். தரம் 6 ஆங்கிலப் புத்தகம் மல்ற்றிக்கல்ச்சுரலிசம் பற்றிக் கதைக்கிறது. புத்தகத்தின் பக்கங்கள் எங்கணும் இற்றாலிசைஸ் செய்யப் பட்ட சிங்களப் பெயர்கள் - ஆங்கில எழுத்துருக்களில்.
பேரூந்துகளில் பாடசாலை சேவை அணிந்த மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை என கடந்த நவம்பர் அளவில் சட்டம் அமுலில் இருந்ததால், யாரிடமும் இந்த ஜனவரிக்கான பருவகாலச் சீட்டுக்கள் இருக்கவில்லை. 40 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தெல்லாம் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருவது வழக்கம். இவர்கள் ஒரு நாளைக்குப் பாடசாலை போய்வர 80 தொடக்கம் 100 ரூபா வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் நாம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமாம். கட்டணம் கட்டாமல் பஸ்களில் ஏறி தமது எதிர்ப்பைத் தெரிவித்த மாணவ மாணவியர்கள் அடுத்தடுத்த நாட்களில் பலவந்தமாக வெளித்தள்ளப் பட்டனர். பஸ் கொளுத்தப் பட்ட சம்பவத்துக்குப் பிறகு மாணவர்களை பஸ்ஸில் இருந்து இறக்குவது நின்று போயிற்று. ஆனாலும் யாழ் இந்து மாணவிகள் நடுவழிகளில் இறக்கி விடப்பட்டார்கள். நான் நல்லூரடியால் வரும் போது அந்த மாணவிகள் பரிதவித்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. சகமாணவிகளது புத்தகப்பைகளைத் துழாவி சில்லறைகளை எண்ணிச் சேர்த்துக் கொண்டிருந்தார் ஒரு மாணவ முதல்வி. இன்னும் சற்றுத் தூரம் தள்ளி வந்தேன். ஆதீன வாயிலில் நிஸான் சன்னி, ரொயோற்றா கொரொல்லா இரண்டையும் வேலையாட்கள் மாய்ந்து மாய்ந்து துடைத்து சுத்தப் படுத்தினார்கள். அந்த மாணவிகளை அழைத்து வந்து ஆதீன முன்றிலில் ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கலாம் என்ற யோசனை ஒன்று ஓடி மறைந்தது. ஆதீனத்துக்குள் இருந்து கொண்டு பொங்கல் வாழ்த்துச் செய்திகளை எழுதும் நபர்களைக் கொண்டு வந்து பஸ் தரிப்பிடத்தில் விட்டிருக்க வேண்டும். அப்பிடி விட்டாலும் கூட இவர்களுக்கு உண்மை சுடுமா தெரியவில்லை. மதிய வெய்யில் மட்டுமே சுடும் இவர்களது புனித தோலுக்கு.
கொப்பிகள், பேனைகள் ஒன்றுமே இல்லை கடைகளில். ரீபில் ஒன்று பதினைந்து ரூபா.8 மேஜர் சொல்கிறார் :கற்றல் செயற்பாடுகளில் மாத்திரம் கவனம் செலுத்துங்கள்.
எதையும் பேசாதே, எதையும் எழுதாதே.
உங்களின் நன்மைக்காகவே நாங்கள் உங்களைக் கடத்துகிறோம். உங்களைச் சுடுகிறோம். உங்களை வன் கலவி செய்கிறோம். அனைத்தும் உங்கள் நன்மைக்கே. உங்களைச் சித்திரவதை செய்வது கூட உங்கள் நன்மைக்கே.
இன்னும் சொற்ப நாளில் நாம் பொம்மைகளாகிடல் கூடும். மஹிந்தவும் பிரபாகரனும் றோவும் எம்மை இயக்கும் விசைகளை வைத்திருப்பர். ஒரு சதுரங்க ஆட்டத்தின் காய்களாகிப் போவோம் நாம்.
வாகரையில்.. மூதூரில்… நிற்றம்புவவில்…இலுப்பைக்கடவையில்…. மீற்றியகொடவில்…
ஓ. உதிரச் சகதி! எல்லா நம்பிக்கைகளும் கரைந்து விடுகின்றன. ‘எங்களது சாம்பல் நிறமுடைய நம்பிக்கை இழந்த சிறைச்சுவர் மாத்திரமே எஞ்சி நிற்கிறது’.kd
சிறிய செய்திக் குறிப்புகளாய் எஞ்சி விடுகிறது அனைத்தும்.4 ‘கொலைக் கருவிகளின் ஆற்றல் உலோக நிழலாய்க் கவிந்திருக்கும் இந்த நகரத்தில் எம்மையறியாமலே ஒவ்வொரு கணமும் யாரையேனும் கொன்று கொண்டிருக்கிறோம்.’pr
‘யுத்தம் எல்லா நிரந்தரங்களையும் சிதறடித்துவிட்டு நிச்சயமின்மையை ஒவ்வொரு வாசலிலும் விட்டுச் செல்கிறது.’kk ‘சவத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுவதைப் போல நம்மை நாமே காவிச் செல்கிறோம்.’kk ‘எரிகின்ற எல்லாப் பிரச்சனைகளும் எயார் கண்டிஷனில் விவாதிக்கப் படுகின்றன’as : மதுக் குவளைகள், பூச்செண்டுகள் வைக்கப் பட்ட மாநாட்டு மேசை. லெதர் இருக்கை. ஆனால், ‘எப்போதும் இருக்கிறது காயங்கள் ஆறாத சிதைந்த வெளி.’kk
‘வெய்யில் எரித்து மீந்த செடிகளை ஆடு மாடுகள் விழுங்கி விட்டன. எஞ்சியிருந்த ஆடு மாடுகளை நாங்கள் விழுங்கி விட்டோம். நிலவுக்காக வானத்தையும் விருந்தினர்கட்காக வீதியையும் பார்த்துப் பழகிய நம் கண்கள் விமானங்கட்கும் லொறிகட்குமாக விழித்திருக்கின்றன. வீரத்தின் பேராற் போரிட்ட நாங்கள் விழுந்து கிடக்கும் ரொட்டிக்காகப் போராடுகிறோம்’.si ‘மண்டையோட்டின் ஆழத்தைத் துழாவுகின்ற குழந்தையின் அயர்ந்த விழிகளையும் விலா எலும்பின் அசைவுகளையும் வெறு வயிற்றின் வீக்கத்தையும் ஒட்டிய கன்னங்களை விலக்கத் திணறுகிற வாயையும் ஏமாற்றும் வரண்ட முலைகளை படமெடுத்துப் பிச்சைப் பாத்திரங்களில் ஒட்டுங்கள். வீசுகிற தருமவான்களின் மனசாட்சிக்கு ஒத்தடமாகட்டும் உங்கள் மனிதாபிமானத்தின் நிரூபணமாகட்டும். எங்கள் பெருமிதத்தின் புதைகுழி மேல் நடப்பட்ட சிலுவையாகட்டும்.’si
‘இப்பவும் தெருக்களில் முன்புபோல் சவப் போர்க்குரலொலிக்க நிலா உதித்து மெல்லிய கவனத்தில் படாதயிருள் வெளிற நிலம் முழுக்க இரத்த ஆறுமாகிட’mj ‘மீதியாய் எலும்புக் கூடுகள் புதைந்த நரகத்தை’mj உணர்ந்து ‘நிலா வெளிச்சத்தில் இடம்பெயரும் அகதிக் கூட்டத்தில் தன்னைத் தொடரும் நிலாவைத் தன் தம்பி புதைக்கப் பட்ட இடத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல மறைந்து மறைந்து போகும் குட்டிப் பெண்ணின் உறக்கத்தில் நிலா தொலையும்.’pr
•
விளக்கக் குறிப்புகள்
0- குல்ஸார் உருது மொழியில் எழுதும் கவிஞர். ஆங்கிலம் வழி தமிழில் ஹரிஹரஷர்மா. நன்றி : Songs Of Partion, Neena Singh, IOC
1. சொதி - அதிகளவில் நீர் சேர்த்து குறைந்தளவு மரக்கறிகளின் பயன்பாட்டில் (ஒரு பிடி வெந்தயம், இரண்டு சிறிய வெங்காயம், ஒரு ப.மிளகாய், நிறங்காட்ட சிறிது தேங்காய்ப்பால்) செய்யப்படும் ஓர் உப உணவு.
2. ஆங்கில - சிங்கள வார ஏடுகளும் தினசரிகளும் மாத்திரம் படையினரால் விமான மூலம் எடுத்து வரப்பட்டு நூலகங்களுக்கு வழங்கப் படுகிறது. ஒரு தமிழ் வார ஏடு தினசரி கிடையாது. அரசாங்க பத்திரிகையான தினகரன் கூட கொண்டுவரப் படவில்லை. தினக்குரலின் ஒக்ரோபர் வாரவெளியீடுகள் 4 தனிப்பட்ட முயற்சியொன்றினால் தருவிக்கப் பட்டு நூலகத்துக்கு வழங்கப் பட்டது.
3. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று சேவையாற்றி வந்த அரச ஊழியர்கள் பாதை மூடப்பட்டதன் பின்பான ஒரு மாதம் என்ன செய்வதென்று தெரியாத நிலையிலிருந்தார்கள். பிறகு அவர்களெல்லாரையும் வன்னிக்குள் குடிபெயரும் படி அரசாங்கம் நிர்ப்பந்தித்தது. ‘அனைவரும் பயண ஏற்பாடுகளுடன் சிங்கள மகாவித்தியாலயத்துக்கு சமூகமளிக்கவும்’ இது தான் வானொலி மூலம் அறிவிக்கப் பட்ட தகவல். வேதனம் வழங்கப் படவில்லை. என்றாலும் வன்னிக்குள் செல்வதற்கு நிறையப் பேருக்கு மனத் தடைகள் இருந்தன. அப்பா மாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ‘உள்ளுக்கால விளையாடித்’ தான் (இப்படித்தான் ‘அதை’ சனங்கள் கூறுகிறார்கள், அந்த ‘உள்ளுக்கை’ என்றால் என்னவெண்டு சத்தியமா எனக்குத் தெரியாது) கிட்டத்துப் பாடசாலையில் கையெழுத்திடும் ஏற்பாட்டை அப்பா பெற்றுக் கொண்டார். பிற அரச ஊழியர்களுக்த் தமக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
4. உதயன், யாழ்.தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் கொலையும் கொலை சார்ந்தனவும் பிரசுரிக்கப் படும் விதம் யாழ்ப்பாணத்தின் இப்போதைய நிலவரத்தை நன்கு புலப்படுத்துகிறது. ‘சுட்டுக்கொலை’ செய்திகளுக்காக உதயன் ஒரு பக்கத்