January 17th, 2008

நோபலின் அரசியல், கவனம் பெறும் மற்றொரு உலகம்: டொறிஸ் லெஸ்ஸிங்

Print This Post Print This Post

இவ்வருடத்தின்(2007) இலக்கியத்துக்கான நோபல் பரிசை டொறிஸ் லெஸ்ஸிங் பெற்றுக் கொண்டதையொட்டி இங்கிலாந்து ஊடகங்களில் எழுதிய பலரும் ‘இது ஒரு அற்புதமான தெரிவு (a fantastic choice)’ எனும் கருத்தையே முன்வைத்திருந்தார்கள். எனினும் அய்ரோப்பாவிற்கு வெளியிலிருக்கிற இலக்கிய ஆர்வலர்கள் பலருக்கும் இது ஒரு ஏமாற்றமளிக்கிற தெரிவாகவே இருந்திருக்க முடியும்: டொறிஸ் லெஸ்ஸிங் எனும் பெயர் அய்ரோப்பாவிற்கு வெளியே அவ்வளவு பரிச்சயமான ஒன்றல்ல.
இம்முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களாய் மிகவும் பிரபலமான சல்மான் ருஷ்டியில் ஆரம்பித்து தீவிரமாய் வாசிக்கிறவர்களுக்கு மாத்திரம் பரிச்சயமான மிலோராட் பாவிக் வரைக்கும் நிறையப் பேர் இருந்தார்கள். நோபலின் கடந்த வருடத் தெரிவான துருக்கியின் ஒரான் பாமுக் நிறைய சர்ச்சைகளின் மாட்டித் தவிக்கிற நபர். ஒரான் பாமுக்கின் தெரிவு மிகவும் கடுமையான அரசியல் விமர்சனங்களை நோபலுக்குப் பெற்றுத் தந்தது. மூன்றாவது மனிதன் இதழில் சாமுவல் ஹன்டிங்டனின் Clash of civilizationஐயும் பாமுக்கிற்கு நோபல் பரிசளிக்கப்பட்டதையும் முடிச்சுப் போட்டு ஒரு கட்டுரை ஜிப்ரி ஹாசனினால் எழுதப்பட்டிருந்தது. நோபல் எதிர்பார்ப்புப் பட்டியலில் இருந்த ஸல்மான் ருஷ்டி சில மாதங்கள் முன்னதாக இங்கிலாந்தின் கௌரவ விருதொன்றைப் பெறப்போய் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து ஃபத்வா பற்றிய மீள்நினைப்பூட்டலைப் பரிசாகப் பெற்றுக்கொண்டிருந்தார். இடதுசாரி, ஒரியன்டலிஸ, பின்காலனித்துவ விமர்சகர்கள் ருஷ்டியை இது விடயத்தில் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தார்கள். நோபலை வழங்குகிற ஸ்வீடிஷ் அக்கடமி சிக்கலை உணர்ந்து கொண்டிருந்தது. இம்முறை ‘பிரச்சனைகளற்ற’ இலக்கியக்காரர் ஒருவர் தேர்ந்துகொள்ளப்பட்டிருப்பதன் பின்னிருக்கிற அரசியல்கள் இவை.
தற்பொழுது 88 வயதாகிற டொறிஸ் லெஸ்ஸிங்(Doris Lessing, b.1919) 106 வருட நோபல் வரலாற்றில் நோபல் விருதைப் பெற்றுக்கொள்கிற பதினோராவது பெண். லெஸ்ஸிங்கிற்கு நோபல் என்பதை வாசிக்கையில் அவரது பெயர் நான் கேள்விப்பட்டிராத ஒன்றாகத் தான் இருந்தது. நான் எதிர்பார்த்த எழுத்தாளர்களுக்கு நோபல் இல்லாமல் போய்விட்டதில் சிறிது ஏமாற்றமும் இருந்தது. ‘பெண் அனுபவங்களின் ஆண்மை பெண்மை என்பவற்றை மீறிச்செல்கிற மொழி, அழன்றெழுகிற கவிதையெழுச்சி, நம்பிக்கையின்றி அலைதல் மற்றும் கனவு வலிமையுடன் ஒரு பிளவுண்ட நாகரீகத்தை முக்கிய பொருளாக்கி அதை நுண்மையாக ஆராய்ந்தவர்’ (the epicest of the female experience, who with scepticism, fire and visionary power has subjected a divided civilization to scrutiny) என்றது நோபலின் Press Release. சமீப காலங்களில் தமிழ்ச்சூழலின் முக்கிய விவாதப்பொருளாகியிருக்கிற பெண்மொழி குறித்த விவாதங்களை மேலும் நுண்மையாக உணர்ந்துகொள்ள உதவுமேயென்று நோபலின் சிபாரிசு வாக்கியங்களை நம்பி லெஸ்ஸிங்கின் ஐந்துபாக நாவலான(quintet) ‘Children of violence’இன் முதலாவது நூலான Martha Questஐ வாசிக்க ஆரம்பித்தேன்.
மார்தா க்வெஸ்ட் 333பக்க நீளம் கொண்டது. கதை மிக மிக மிக மெதுவாய் நகர்ந்தது. மிகவும் பழையதான கதைசொல்லல் முறை. ஆஸ்டினுடைய மிகவும் சலிப்பூட்டக்கூடிய புத்தகங்களைப் பரீட்சை நோக்கில் படித்துச் சலித்ததில் அப்படியான எழுத்துநடை மீதே ஒருவித வெறுப்பு வந்து விட்டிருந்தது. மார்தா க்வெஸ்ட் எனும் முக்கிய பாத்திரத்தின் பதின்ம வயதுகளை விவரிக்க ஆரம்பித்து, கதாபத்திரங்களை வடிவமைத்து அவற்றுக்கிடையிலான மோதுகைகளை உருவாக்கி, சமூகம் பற்றிய சித்திரங்களை உருவாக்கி சிக்கலடைந்து செல்கிற கதைத் திட்டம் என்பது ஒன்றும் புதிதானதில்லை. 60களில் எழுதிய கேத்தரீன் ஆன் போர்ட்டர் எவ்வளவோ பரவாயில்லைப் போலிருந்தது. ஆங்கில நாவல்களில் மிக வெளிப்படையாக ‘f’சொற்கள்(தூஷணங்கள்) இடம்பெறுவதுண்டு. லெஸ்ஸிங் அரதப்பழசான ‘make love’ போன்ற சொற்களையே பயன்படுத்தியது வேறு அவர் ஒரு பழமைவாதியாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தைத் தந்தது. முதலிரண்டு பக்கங்களில் Housewives Tales எனப்படுகிற வார்த்தையைக் கொண்டு லெஸ்ஸிங்கை ஒதுக்கிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எது எப்பிடியிருப்பினும் லெஸ்ஸிங் குறித்து எழுதப்பட்டவற்றைப் படித்தபின் அவரது பிரதிகளுக்குள் நுழைந்து பார்க்கலாம் எனத் தோன்றியது.
லெஸ்ஸிங் 1919ம் ஆண்டு பேர்ஸியாவில்(தற்போது ஈரான்) பிறந்தவர். குடும்பத்தினர் லெஸ்ஸிங்கிற்கு ஐந்து வயதாகும் போது பிரிட்டிஷ் கொலனியாக இருந்த ரொடேசியாவுக்கு(தற்போது ஸிம்பாப்வே) புலம்பெயர்கிறார்கள். தானியம் பயிரிடுவது அவர்களது வாழ்வாதாரமாயிருக்கிறது. விவசாய முயற்சி லெஸ்ஸிங் குடும்பத்தினர்க்குக் கைகொடுக்கவில்லை. வீட்டில் பணத்துக்கான தட்டுப்பாடு இருந்துகொண்டேயிருந்தது. 13 வயதில் லெஸ்ஸிங் பாடசாலையிலிருந்து விலக வேண்டி வந்தது. 15 வயதில் தாதிப்பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல்ல ஆரம்பிக்கிறார் லெஸ்ஸிங்.
அவர் வேலை செய்கிற வீட்டில்தான் வாசிப்புத் தொடங்குகிறது. வேலை ஓய்வு நேரங்களில் எஜமானி புத்தகங்களை வாசிக்கும்படி தூண்டுகிறாள். இலக்கியம், அரசியல், சமூகவியல் என நிறைய விடயங்களில் பரந்து பட்டு வாசிக்க இயலுமாயிருக்கிறது லெஸ்ஸிங்கிற்கு. 1937 அளவில் லெஸ்ஸிங் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு எழுத ஆரம்பிக்கிறார். பின்னர் தொலைபேசி ஒப்பரேட்டராக வேலை நியமனம் பெற்று அமைதியாக எழுத முடிகிறது. முதல் திருமணம் இரண்டு குழந்தைகள் மற்றுமொரு விவாகரத்திற்குப் பின்பு லெஸ்ஸிங்கின் ஆர்வம் மார்க்சியச் சிந்தனைகளின் பக்கம் திரும்புகிறது.
Left Book Clubஎனும் இடதுசாரி அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு இயங்கவாரம்பிக்கிறார் லெஸ்ஸிங். 1940களில் அணுவாயுத எதிர்ப்பு மற்றும் தென்னாபிரிக்க நிறவெறி அப்பார்தெய்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்கிறார். ரொடேசியாவில் டொறிஸ் லெஸ்ஸிங்கின் எழுத்துக்கள் தடைசெய்யப்படுகின்றன, எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டி வருகிறது. Left Book Clubஇல் சந்தித்து மணம் முடித்த இரண்டாவது கணவர் 1979 உகாண்டாவின் இடாமீன் கலம்பகத்தில் கொல்லப்படுகிறார். இப்படியாக லெஸ்ஸிங்கின் தனிப்பட்ட வாழ்வு என்பது மிகவும் துயரமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.
லெஸ்ஸிங்கினுடைய முதல் நாவலான The Grass is singingஉம் அதற்கடுத்து 62இல் வெளிவந்த The golden notebookஉம் அவருக்கு புகழைச் சம்பாதித்துத் தந்தன. பெண்களின் அனுபவங்களை மையப்படுத்திய இடதுசாரிச் சாய்வுகள் கொண்ட லெஸ்ஸிங்கின் பிரதியாக்கக் காலப்பகுதி திடீரென முடிவுக்கு வந்து அவர் விஞ்ஞானப் புனைகதைகள் எழுதுபவராக மாறுகிறார். லெஸ்ஸிங்கின் மீது அபிமானம் கொண்டவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சி தருகிற ஒன்றாய் இருந்திருக்கிறது. 80களில் லெஸ்ஸிங்கின் நூல்களுக்கு விமர்சனமெழுதிய பலரும் இந்த மாற்றத்தை உவப்பானதொன்றாய்ப் பார்க்கவில்லை. அவர்களுக்கு லெஸ்ஸிங் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார்: ‘: “What they didn’t realize was that in science fiction is some of the best social fiction of our time.” பின்நவீன புனைகதையாளர்கள் சொல்கிற பதிலை லெஸ்ஸிங்கும் சொல்லியிருப்பது ஆச்சரியம்தான்.
லெஸ்ஸிங்கின் The Golden Notebook நாவலை feminist classicஆக Elaine showalter போன்றவர்கள் வாசிக்கிறார்கள், இதை லெஸ்ஸிங் விரும்புவது இல்லை. பெண்ணிய அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாசிப்புகளை லெஸ்ஸிங் ஊக்குவிப்பதை அவரது நேர்காணல்களில் காணமுடிகிறது.
சர்வதேச அளவில் கொண்டாடப்படுபவரான Margret Atwood எனக்குப் பிடித்த பெண்பிரதியாளர்களான Erica Jong, toni Morrison போன்றவர்கள் லெஸ்ஸிங் தம்மைப் பாதித்திருப்பதாய் எழுதியிருந்ததைக் கண்டபோதுதான் லெஸ்ஸிங்கைப் பொறுமையாக வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதிலும் பெண்ணிய விமர்சகரான Elaine Showalter லெஸ்ஸிங்கின் பிரதியாக்க நுட்பத்தை ‘a long process of feminist self construction with self-dissidential totality’ (தனக்குள்ளாகவே வேறுபடும் முழுமையுடன் கூடிய பெண்ணிய சுயத்தைக் கட்டமைக்கும் நீண்ட செயன்முறை) என்பதாக வியாக்கியானப்படுத்தியிருந்தார்(interpreting). மிக மிக மிக மெதுவாக நகர்வதாய் எனக்குத் தோன்றிய கதைசொல்லலின் நியாயங்களைப் புரிந்து கொண்டு Martha Questஐ மீளவும் கையிலெடுத்தேன்.
Martha Quest பெருமளவுக்கு லெஸ்ஸிங்-இன் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒத்துப்போகிற தன்வரலாற்றுத் தன்மைகள் கொண்டது.
மார்தா என்பவளின் பதின்ம வயதுகளை நாவலின் முதல்பாகம் விபரிக்கிறது. பழமைவாதிகளான தாய், தகப்பன் மற்றும் சமூகம். அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் மார்தாவின் கனவுகளும் முரண்படுபவை. தலைமுறை, தொடர்பாடல் இடைவெளிகள். இவற்றால் நெருக்கடியுறுகிற மனித உறவுகள். வலிநிறைந்த மோதுகைகளால் நிரம்புகிறது முதலாம் பாகம். Marthaவின் தய் கனவு காண்கிறாள்:’My daughter will be somebody, whereas yours will only be married’. மார்தா Somebodyயாய் இருக்க விரும்புகிறாளில்லை, அவள் மார்தாவாகவே இருந்துவிட நினைக்கிறாள். தாயின் கனவுகளை, சமூகத்தின் எதிர்பார்ப்புகளை மீற எத்தனிக்கிற மார்தா வாழுமிடம் ஒரு பிரிட்டிஷ் கொலனி. மீறலுக்கான உந்துதல் என்பது விமர்சன உணர்வுறுதலுக்கு அவளை உட்படுத்துகிறது. துலக்கமான பார்வை மார்தாவிற்கு சாத்தியமானதையொட்டி பிரிட்டிஷ் காலனியாதிக்கம், நிறவேறுபாடுகள், போலித்தனங்கள், மதம் எல்லாம் அவளால் நிராகரிக்கப் படுகின்றன. நாவலின் கதையோட்டத்தில் சுதேசிகளின் ஆதங்கங்கள், விடுதலைக்கும் சமத்துவத்துக்குமான விருப்பு என்பவையும் இணைக்கப் படுகின்றன.
மார்தா கேள்விகள் கேட்கிறாள். நிறைய வாசிக்கிறாள்; மார்க்ஸ் எங்கெல்ஸ் உட்பட எல்லாம். பெற்றோரை நோக்கி மார்தா சொல்கிறாள்: “Damned hypocrisy… all this nonsense.” மதத்தை தனக்குரியதாக அவள் பார்ப்பதில்லை, அவளைப்பொறுத்தவரை ‘you and your christianity’. தகப்பனும் தாயும் மீள மீள சொல்கிறார்கள் ‘you yougner generation, freethinkers.. it’s immoral. There are certain values.’ இப்படியாகவே தொடருகிற உரையாடல் ஒருகட்டத்தில் சலித்துப் போகும்வரை நீள்கிறது, என்ன செய்வது நிஜத்தில் இந்த மோதுகை இப்படியாகத் தான் -சலிப்பூட்டும்படியாக/அபத்தமாக- இருக்கமுடியும் என்பதற்கு எமது இலக்கியச் சூழலின் CentripetalXCentrifugal சண்டைகளே நல்ல உதாரணம்தான் இல்லையா?
மார்தா அர்த்தங்களைக் கேள்விக்குட்படுத்துகிறாள். தாய் நல்லவள் (good) என மார்தாவுக்குக் கூறப்படுமிடத்தில் மார்தா “what do you mean by good?” என்கிறாள். தந்தையின் சமாளிப்புகள் சிதறடிக்கப்பட்டு அர்த்தங்கள், அவை யாருடையவை? யாருக்கானவை? என்றெல்லாம் சிந்திக்கும்படியாக மார்தா விவாதிக்கிறாள். தந்தை இறுதியில் சொல்கிறார்: ‘இப்படியெல்லாம் தொடங்கினாயென்றால் எங்குபோய் முடிவாயோ தெரியாது”
தந்தையார் சொல்வதைப் போலவே மார்தா எதிர்பாராத மாற்றங்களுக்கூடாக நாவல் முழுதும் அலைகிறாள். மணம்புரிவதற்கென அவளால் தேர்ந்தெடுக்கப்பட்ட டக்ளஸ் என்பவனுடன் அவளால் ஒருமிக்க முடிவதில்லை. ஒருவித விலக்கம் இருப்பதை உணர்கிறாள். குழம்பித் தெளிந்து குழம்பி, குழம்பிக் கொண்டிருப்பதே மார்த்தாவின் இயல்பாகிவிடுகிறது. பின்நவீனம் கொண்டாடுகிற Supreme State of indecision-இற்குள் மார்தா இழுபட்டுப்போகிறாள். நாவல் முடிகிறது. மார்தா க்வெஸ்டின் வாழ்க்கையை தொடர்தும் விபரித்துச் செல்கிற மற்ற நான்கு நாவல்களும் என் கைக்குக் கிட்டவில்லை.
Martha Questஐ திரும்பத் திரும்பப் படிக்கும்படியான புத்தகம் எனச் சிபாரிசு செய்ய முடியாது. அந்த எழுத்துநடையின் சலிப்பூட்டும் அமைதித்தன்மைக்குப் பழக்கப்படுத்திக்கொண்டால், புத்தகத்தில் ஒளிந்திருக்கிற கவித்துவம் உறைக்கக் கூடும். சில சில இடங்களில் லெஸ்ஸிங்கின் நடை கவித்துவமிக்கதாய் இருக்கிறது: “She looked across the veld to the Dumfries hills and re-fashioned that unused country to the scale of her imagination.”
பிரதியாக்க நுட்பங்கள், கவித்துவம் இன்னபிற இலக்கிய சமாச்சாரங்களுக்காகவன்றி ஷோவால்டர் கூறிய பெண்ணிய அடையாளத்தைக் கட்டமைத்தல் எனும் செயன்முறையை வாசிக்க விரும்புகிறவர்கள் லெஸ்ஸிங்கை வாசிக்கலாம். விமர்சன உணர்வுறுதல், மீறுதலின் வேட்கையும் selfஐக் கட்டமைத்தலும் போன்ற பல விடயங்களில் மார்தா க்வெஸ்ட்(+லெஸ்ஸிங்கின் ஏனைய பிரதிகள்) உபயோகப்படக் கூடியது. பெண்கள், வாழ்நிலமைகள் என்பன பற்றிய உரையாடல் இலக்கிய உலகத்தில் போதிய அளவுக்குக் கவனம் பெறுவது இல்லை என்பது நோபலின் பட்டியலைப் பார்த்தாலே தெரிந்துவிடும். கடந்த வருடம் பாமுக் நோபல் பெற்ற போது இஸ்லாமியக் கலாசாரத்தைத் தகர்க்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக அது கருதப்பட்டு சர்ச்சைகள் நடந்தன. ஹரோல்ட் பின்ரருக்கு வழங்கப்பட்ட போது ஏகாதிபத்திய எதிர்ப்பு/அமெரிக்க எதிர்ப்பு எனும் விவாதங்கள். இது போலவே வி.எஸ்.நய்பால், ஹெசே சரமாகோ எனப் பலரும் அரசியல் சர்ச்சைகளில் சிக்குண்டவர்கள். லெஸ்ஸிங்கைத் தேர்வு செய்திருப்பதென்பது இப்படியான கொதிநிலையிலிருக்கும் சிக்கல்களை அமைதிப்படுத்தும் உள்நோக்கமுடியது என்பதை முன்னரே சொல்லியிருந்தேன். அதை நிரூபிப்பது போலவே லெஸ்ஸிங்கின் தெரிவுக்கு கிடைத்த ‘பிரச்சனையற்ற’ எதிர்வினைகள் அமைந்திருக்கின்றன. ஒரு சில பெண்னியர்கள் கண்டித்தார்கள். லெஸ்ஸிங்கின் பெயர் பரிச்சயமில்லாதவர்கள் குழம்பினார்கள். பலரும் பாராட்டியதை இங்கிலாந்து ஊடகங்கள் பெரிது படுத்தின என்பதற்கு மேலாக லெஸ்ஸிங்கின் பிரதிகளைக் கணக்கிலெடுத்து அவற்றை விசாரணை செய்வதற்கு யாருக்கும் இஷ்டமில்லைப் போலிருக்கிறது.(அதுதான் நோபலின் விருப்பாகவும் இருக்கலாம்) அடுத்தமுறை, அல்லது அதற்கடுத்தமுறை மீளவும் ஒரு அரசியல் புனைகதையாளர் தேர்ந்தெடுக்கப் படுகையில் எழும் விவாதங்களில் லெஸ்ஸிங்கின் பெயர் மீளவும் மறக்கப்படும் என்பதுதான் கசப்பான உண்மை.
நோபல் பரிசு பெற்ற கேத்தரின் ஆன் போர்ட்டரின் பிரதிகள் பெண் அனுபவங்கள் என்கிற ரீதியில் கவனிக்கப் பட்டவையல்ல. அமெரிக்காவில் அப்பிரதிகள் தெற்கைச்(மெக்சிகோ) சேர்ந்த ஒருத்தரின் பிரதிகளாகவே அதிகம் கவனிக்கப் பட்டன. நீண்ட காலத்திற்குப் பிறகு விருது பெற்ற மற்றொரு பெண் எழுத்தாளர் ஒஸ்திரியாவின் எல்பிரைடே ஜெலினெக். ஜெலினெக்கின் பிரதிகளில் இருந்த eroticism மிக மோசமாக வாசிக்கப் பட்டு அப்பிரதிகளில் இருந்த concerns மற்றும் அரசியல்கள் அமைதிப்படுத்தப் பட்டன. (சாரு நிவேதிதா ஜெலினெக்கை தமிழில் அறிமுகப்படுத்திப் பேசியபோதும் சரி, The piano teacherஐத் தனது ‘ஆண்களின் படித்துறை’ கதையை நியாயப்படுத்த ஜே.பி.சாணக்யா பயன்படுத்திய போதும் சரி ஜெலினெக்கின் பிரதியில் இருந்த பெண் உடல் எனும் பிரதி பற்றிய அரசியல் அக்கறைகள் கவனிக்கப்படவில்லை என்பதை இணைத்து வாசிக்கவும்). இப்படியான விபத்துக்களுக்கு லெஸ்ஸிங்கின் பிரதியில் அவ்வளவாக இடமில்லை, பிரதியில் வைக்கப்பட்டுள்ள பெண்நிலைசார் பதிவுகளை overshadow செய்கிற அம்சங்கள் குறைவு என்பது சாதகமான ஒன்று.
பெண் எழுத்து(Ecriture Feminine) என்பது தளமற்ற avant garde பண்புகள் கொண்டது. உளவியல், தத்துவ, கலை ரீதியான வாசிப்புகளின் பெண் எழுத்து என்பது உயர்வான ஒன்றாகவே இருந்த போதிலும் பெண்களின் வாழ்நிலமைகள் பற்றிய துலக்கமான தரவுகளை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளவியலாது. பெண் எழுத்து என்பது மிக உயர்வானதொரு எழுத்து வகையாக இருக்கிற போதும் அதுவே அனைத்திற்கும் போதுமான ஒன்று அல்ல. பெண்ணிய இனைவரைவியல்(Feminist Ethnography) என்று வரும்போது தளமற்ற, வரலாறற்ற, முற்றிலும் மொழிவிளையாட்டான பிரதிகளை எவ்வளவுதூரம்தான் பயன்படுத்திக்கொள்ள முடியும்? சிலவற்றைக் கட்டமைப்பதற்கு வரலாறுள்ள பிரதிகள் தேவைதானில்லையா? எனவே தான் பெண்ணியர்களுக்கு தன்வரலாறுகளும்(autobiographies), புனைவுசாரா எழுத்துக்களும் முக்கியமாகின்றன. ஜேன் ஒஸ்ரன், மேரி வூல்ஸ்ரோன்க்ராப்ட், ஜோரா நீல் ஹூர்ஸ்ரன் போன்றவர்களது புனைவுகள் மீள மீள விசாரிக்கப்படுவதும் இதன்காரணமாகத்தான்.
ஜேன் ஒஸ்ரனின் பிரதிகள் மறுவாசிப்பிற்குட்பட்ட விதங்களில் லெஸ்ஸிங்கை வாசிக்கும்போது நாம் நிறையப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. ஒஸ்ரனின் நாயகிகள் அக்காலத்திய ஆங்கிலப் பெண்களின் விடுதலை பற்றிய கனவுகளால் ஆனவர்கள். அவர்களுடைய வாக்கியங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பெண்ணிய சுலோகங்களாயும் மாறிப்போய்விட்டிருக்கின்றன.[எ.கா: “Do not consider me now as an elegant female intending to plague you, but as a rational creature speaking the truth from her heart” - p.91 Pride and Prejudice Jane Austen penguin]
மேலே அடைப்பிடப்பட்ட எலிஸபெத்தின் கூற்றைப் போல மார்தா நிறைய விடயங்கள் சொல்கிறாள். அவற்றை உரிய முறையில் கேட்க வேண்டுமெனில் பெண்ணிய இடையீடுகளை லெஸ்ஸிங்கின் பிரதிகளுக்குள் நிகழ்த்தியாகவேண்டும். அது நிகழ்ந்தால் தகுதியானவர்கள் பலர் இருக்கும் போது லெஸ்ஸிங்-இற்குப் பரிசு வழங்கிய நோபலின் அரசியல் உள்நோக்கங்களைத் தோற்கடிக்க முடியும்.


January 17th, 2008

லா.சா.ராமாமிர்தம்: இசையின் இன்மையை உணர்தல்

Print This Post Print This Post

“நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்” - லா.சா.ரா

1
கனவுகள், காதல், கிளர்வுகள் மற்றும் இதம்தரு மென்னுணர்வுகளாலும் தனிமையாலும் நிரம்பியிருக்கிற பதின்மவயதுகளின் நடுப்பகுதியில் லா.சா.ராவின் பிரதிகள் எனக்கு அறிமுகமாகின. தற்செயலாய்க் கைக்குக் கிட்டிய இந்தியாடுடே இலக்கிய ஆண்டுமலரில்(1994) இரண்டு கதைகள் பிடித்திருந்தன: ஒன்று வாசந்தியினுடைய நல்ல கதைகளில் ஒன்றான ‘கொலை’ மற்றது லா.சா.ராவின் வழக்கமான பாணியிலமையாத மிகவும் மனோரதியமான கதையான ‘அலைகள்’. இந்தக் கதைகளுக்குப் பின்னர்தான் நூலகத்தில் லா.சா.ராவையும், வாஸந்தியையும் தேடத் தொடங்கினேன். வாசந்தியின் ‘நான் புத்தனில்லை’ எனும் நாவல் அடுத்து வந்த வாரங்களில் என் ஆதர்ச நூலாக இருந்தது. லா.சா.ராவின் அபிதாவையும் எடுத்து வந்திருந்தேன்; ஆனாலும் அபிதாவின் மொழி ‘அலைகள்’ சிறுகதை போலன்றி விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. லா.சா.ராவுக்கு முன்பு நா.பாவின் ‘மணிபல்லவம்’, கல்கியின் புனைவுகள் எனக்குப் பிடித்தமானவையாக இருந்து கொண்டிருந்தன. சமஸ்கிருதத்தன்மையும் ஒருவித தொன்மம் கலந்த குறியீடுகளும் விளங்காதுபோயினும் சரித்திரப்புனைவுகளை வாசிப்பது போன்ற உணர்வு இருந்தது. ‘அபிதா’வின் பூடகமான மொழிவேறு ஒரு விடுகதையின் மர்மக் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. இருண்மையான அந்த மொழிக்கும் எனக்கும் நடந்த ஒருவித போராட்டத்தில் லா.சா.ரா வெகு சீக்கிரத்தில் நான் தேடிப்படிக்கிற பெயராயிற்று.
இன்றைக்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், லா.சா.ராவின் (பௌதீக)மரணிப்பின் பின்னராக, இழப்பின் வலியென்பது உசுப்புகிற நினைவடுக்கில் ‘அபிதா’வின் மீது, அந்த மொழியின் மீது பித்துப் பிடித்துக் கிடந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நிச்சயமாய் அந்த நிலை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமூட்டுகிற ஒன்றுதான். அந்த நாட்களில் லா.சா.ராவைக் கிறக்கத்துடன் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த கட்டுடைப்புக்கருவிகளுடனான வாசிப்பு, விமர்சனப்புத்தி என்கிற எல்லாவற்றுக்கும் அப்பால் லா.சா.ராவின் மரணம் வலிதருவதாயிருக்கிறது என்பதுவே நான் பகிர விரும்புவது.

2
முதன்முதலில் நான் வாசிக்க நேர்ந்த லா.சா.ராவின் சிறுகதையான ‘அலைகள்’ மனோரதியமான சிறுகதையென்பதை முதலிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் ‘அபிதா’ மிகவும் இருண்மையானது. விடுகதையின் மாயக்கவர்ச்சி நிரம்பிய அப்பிரதியை ஒரு ஒழுங்கில் வாசித்தேனில்லை. அப்படி வாசிப்பது கடினமாகவிருந்தது. மூச்சுத்திணறவைக்கிற மொழிதல்களுக்கிடையில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தேன், அந்த அலைதலின் சுவாரசியம் பிடித்துப் போக மூன்றுதடவைகளுக்கு மேலாக நூலகத்தில் புத்தகத்தைத் திகதி மாற்றம் செய்து என்னுடனேயே வைத்திருந்தேன். உணர்வுகளின் மிதமிஞ்சிய பெருக்கத்தில் மொழி நீர்மையானதாக மாறிப் பாய்ந்துகொண்டிருக்க அதனடியில் இழையும் சம்பவக் கோர்வைகளைக் கண்டெடுத்தல் நீண்ட நாட்களுக்குப் பின்னரே சாத்தியமாயிற்று.
தர்க்கங்களுக்கு அப்பால்பட்ட, புலனுணர்வுகளாய் மாறிவிடுகிற இசைத்தன்மை கொண்ட மொழி லா.சா.ராவினுடையது. நுட்பமான இசைக்கோர்வையொன்றின் கட்டமைப்பை லா.சா.ரா பிரதிகளில் காண்முடியும். 1989 சாகித்ய அக்கடமி விருது ஏற்புரையில் musical effectஐ எழுத்தில் கொண்டுவருதல் குறித்து லா.சா.ரா விரிவாகப் பேசுகிறார்.
இத்தகைய இசையுடன் ‘அபிதா’வில் இருந்த பிடித்தாட்டும் வேட்கை, வெளிப்படுத்தப்பட முடியாத தாபங்களின் பெரும் ஓலம் என்பன நடுங்க வைப்பதாய் இருந்தன. அர்த்தங்களைத் தேடுதல், தேடுதல் மேலும் தேடிக்கொண்டேயிருத்தலின் இன்பம் அக்காலங்களில் என் வாசிப்பிலிருந்த பிரதியாளர்கள் பட்டியலில் லா.சா.ராவிடம் மட்டுமே சாத்தியமாகிற்று.
லா.சா.ராவின் பிரதியுலகம் மர்மமான சங்கேதங்கள், குறியீடுகளாலானது. இவற்றால் பின்னப்படுகிற அவருடைய மொழி போதையும் லயிப்பும் தருகிற கவித்துவமிக்க ஒன்று. இந்த மொழிக்குள் வைக்கப்படும் கதையென்பது துண்டுகளாலானது(fragments). துண்டுகளாக்கப்பட்ட கதைசொல்லல் முறையில்(fragmented narration) கதைகளைக் கண்டெடுக்க முடிவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அந்நாட்களில் எனது குறிப்புப் புத்தகம் லா.சா.ராவின் வார்த்தைகளால் நிரம்பியிருந்தது. உக்கிரமான உணர்வுகளால் நான் காவிச்செல்லப்படுகிற போதெல்லாம் அந்த மூர்க்கத்தை, தகிப்பை சில சமயங்களில் உறைந்து போதலைப் பகிரக் கூடிய பிரதிகளாய் லா.சா.ராவினுடைய பிரதிகள் இருந்தன. எப்போதெல்லாம் ஒருவித metaphysical train of thought (அபௌதீகச் சிந்தனைத் தொடர்ச்சி?) மனதில் ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் லா.சா.ராவின் வார்த்தைகளில் சிந்திக்கப் பழகியிருந்தேன். இப்படியான ஒரு உத்தியை மிகவும் physicalஆன எனது அந்நாளைய பிரச்சனைகளைக் கடந்து செல்கிறதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். (எனதல்லாத இன்னொருத்தரின் வார்த்தைகளில் என்னைப்பற்றிச் சிந்திப்பது குறித்த சிக்கலின் உக்கிரத்தைத் தணிக்க உதவிற்றுப் போலும்.)
லா.சா.ராவைப் புரிந்து/உணர்ந்து கொள்வதும் சரி, புரியாமல் தவிப்பதும் சரி மிகவும் இன்பமான அனுபவங்கள் தான். புரியாது/உணரமுடியாது போய்விடின் அந்த நிலமை தருகிற அந்தரிப்பு, தவிப்பு, அலைக்கழிப்பு என்பன ஒருபுறம்; புரிந்து/உணர்ந்து கொண்டால் அந்தப் புரிதலின் வலி, தன்னை உணர்தலில் ஏற்படுகிற சுயபச்சாத்தாபம் என்பன மறுபுறம்… இப்படியாக லா.சா.ராவின் பிரதி தருகிற இன்பம் விநோதமான ஒன்று.
அக்காலப்பகுதியில் பிடித்தமாயிருந்த பெண்னுடல், தாபம், காமம் பற்றிய விபரிப்புகளை லா.சா.ராவிடம்(ஓரளவுக்கு ஜானகிராமனிடத்திலும்) நான் லயிப்புடன் அனுபவித்திருக்கிறேன். ஜானகிராமனின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் யதார்த்தமானவை, உலர்ந்து மரக்கட்டையாகிவிட்ட ‘மோகமுள்’ ஜமுனாவின் உதடுகள் யதார்த்தமானவைதான் என்றாலும் பதின்மவயதின் கனவுகளை அது குலைப்பதாய்த் தான் இருந்தது. லா.சா.ராவின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் இப்படியான இடையூறுகளைத் தந்தது இல்லை. அது ஒரு fantasy. அன்றைய மனோநிலைக்கு யதார்த்தநீக்கம் செய்யப்பட்ட பெண்ணுடல் அவசியமானதுதானில்லையா? மிகவும் physicalஆன Sensualityயாக தி.ஜா இருக்க லா.சா.ரா ஆணின் fantasyகளுக்கான பெண்ணுடல்களை தனது பிரதிக்குள் வைத்திருந்தார். இதனால்தான் தமிழ் எழுத்துப்பரப்பில் ஆண்மொழியைச் (masculine language) என்பதைச் சாத்தியமாக்கிக் காட்டியவரென லா.சா.ரா குறிப்பிடப்படுவது உண்டு. (இங்கு தி.ஜாவின் விபரிப்புகளின் வலிமையை நான் குறைக்கிறேன் என்றில்லை, அவை வலிமையானவைதான் ஆனால் ஒரு பதின்ம வயது இளைஞனுக்கல்ல.)
லா.சா.ரா தனது நேர்காணலொன்றில் பின் வருமாறு கூறுகிறார்: “I live in terms of music, I speak in terms of music.” இந்த இசையின் மாபெரும் ரசிகனாய், அடிமையாய் அல்லது லா.சா.ராவின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘அந்த சௌந்தர்யத்தின் மாபெரும் உபாசகனாய்’ மாறிப்போய்விட்டிருந்தேன். “பொதுவாக ஒரு தத்துவ விசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும்” தன் எழுத்தின் உள்சரடாக ஓடிக்கொண்டிருப்பதாய் கூறுகிறார் லா.சா.ரா. அவரது பிரதிகள் குறித்த மிகச்சரியான மதிப்பீடு இதுவாய்த்தான் இருக்க முடியும்.
பதின்மங்களில் லா.சா.ரா பிரதிகளில் வேட்கையை, அவர் குறிப்பிடுகிற ஆத்மதாபத்தை வாசிக்க முடிந்ததே தவிர லா.சா.ராவின் ‘தத்துவ சாரத்தையோ’ அதற்கிருக்கக் கூடிய அரசியலையோ இனம்கண்டு வாசிக்க முடிந்தது இல்லை. ‘தொனி’ என்கிற தமிழ்ப்பதிலி இருக்கும்போது லா.சா.ரா ஏன் ‘த்வனி’ என்கிற சமஸ்கிருதச் சொல்லைக் கையாளவேண்டும் என்கிற மிகச்சிறு விடயம், திராவிட இயக்கங்கள் இத்யாதி இத்யாதி எல்லாம் அப்போது உறைக்காமல் போய்விட்டதற்கு என்ன காரணம்?

3
யாழ்.பொது நூலகம் திறக்கப்பட்டதையொட்டி லா.சா.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தனுக்கப்பால் நகர முடிந்தது. காலச்சுவடு, உயிர்மை எல்லாம் அங்குதான் முதன்முதலில் கண்டது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என வாசிக்கத் தொடங்கி கோணங்கி, பிரேம்-ரமேஷ் எனப் பலரது பிரதி உலகங்களுக்குள் மூழ்கிப்போனதில் லா.சா.ரா போன்ற பழைய ஆதர்சங்களின் மீதான ஈர்ப்புக் குறைந்து போய்விட்டிருந்தது. ஆனால் கோணங்கியின் மொழியை அவ்வளவு சீக்கிரம் உணர்ந்துகொள்ள முடிந்ததில் லா.சா.ராவின் மொழியுடனான பரிச்சயம் உதவி புரிந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
பின்னர் நிறப்பிரிகையின் பழைய இதழ்களையும், அப்பிரதிகள் சுட்டுகிற பிரதிகளையும் படித்ததில் கிடைத்த மிகவும் சுவாரஸ்யமான வாசிப்புக் கருவிகளுடன் எனது முன்னாள் ஆதர்சங்களின் பிரதிகளுக்குள் மீள நுழைந்த போது முதலில் இற்று வீழ்ந்தவர் க.நா.சு. லா.சாராவைப் பொறுத்தவரை, பின்-நவீன புரிதல்களினடியாய் அவரது ‘தத்துவ சாரத்தை’ அபாயகரமான ஒன்றாக இனம்கண்ட போதும், அவருடைய பிரதிகளின் கவர்ச்சியை, ஈர்ப்பை என்னால் மறுக்கவோ/மறைக்கவோ முடிந்தது இல்லை. லா.சா.ரா எனக்குப் பிடித்த பிரதியாளராகத் தொடர்ந்தும் இருப்பதில் சிலகாலம் பயங்கரமான குற்ற உணர்வு இருந்தது. ‘புதிய தோழர்கள்’ லா.சா.ரா பிரதிகளை விரும்புவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
லா.சா.ராவின் ‘அகம் சார்ந்த தேடல்’ என்பது இந்திய இந்துத்துவப் பெருமரபைச் சேர்ந்த ஒன்று. அது தனது பண்பாட்டு எல்லைகளை மீறுகிற முனைப்புடன் எங்குமே இருந்தது இல்லை. உண்மையில் நான் ‘அபிதா’வில் இருந்த உணர்ச்சிக்குவிப்பு, மூர்க்கமிக்க அலைக்கழிக்கும் விபரிப்புகளில் ஊறிப்போய், ‘இறுதிவரை அம்பி, அபிதாவின் விரல்நுனியைக் கூடத் தீண்டாமல் இருந்தான்’ என்பதற்கு இருக்கும் மரபார்ந்த அற உணர்ச்சிசார் பொறுப்புணர்வைக் கவனிக்கவில்லை. அபிதா நாவலின் முன்னுரையின் ‘அபிதா’ என்பதை ‘உண்ணாமுலையம்மன்’ என்கிற அர்த்தம் வரும்படிக்கு விளக்கியிருப்பார் லா.சா.ரா. வேட்கை, காமம் பற்றிய விபரிப்புகள் கூட எல்லை மீறாமல் ஒருவித புனிதப்படுத்துகையுடன் இடப்படுத்தப்பட்டிருப்பதையும், அதன் மூலம் கிரேக்கக் கதார்ஸிஸ் ஒன்று நிகழ்த்தப்பட்டு மனதை நிர்மலமாக்குகிற ஆன்மீகநோக்கமே இயங்குகிறது என்பதையும் அதிர்ச்சியுடன் உணர நேர்ந்தது.
தனது பிரதியாக்கமுறை பற்றி எழுதுகிற லா.சா.ரா Mysticismஉடன் தன்னை இனம்காட்டிக்கொள்ள விரும்புவதைக் காணலாம். லா.சா.ராவின் mysticismஉம் பின்நவீனம் ஆதரிக்கிற சிறுமரபுசார் தொன்மங்களின் mythopoetic textsஉம் வேறுவேறு. லா.சா.ராவின் Mysticism ஆன்மீகத்தன்மையான சங்கேதங்கள், புனிதக் குறியீடுகள், மர்மம், ஆன்மவிசாரத்தைச் சாத்தியமாக்குகிற கவிதையியல், கதார்ஸிஸைக் கொணரும் அழகியல் விபரிப்பு என்பதையே தனது கூறுகளாய்க் கொண்டியங்குகிறது. இந்தவகை எழுத்து முறையை லா.சா.ரா இந்துத்துவக் கூறுகளுடன் இணைக்கும்போது அவரது பிரதி ஓர் இந்துத்துவ அரசியல் பிரதியாக மாறி விடுகிறது.
லா.சா.ராவின் பிரதியாக்க நுட்பத்தை ‘நனவோடை உத்தி’(Stream of consciousness) எனக் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இந்த உத்திக்காக அறியப்படுகிற ஜேம்ஸ் ஜொய்ஸையும் லா.சா.ராவையும் ஒருசேரப் படிப்பவர்கள் லா.சா.ராவின் பிரதிகளில் இயங்குகிற ‘புனித ஒழுங்கை’ உணர முடியும்.
ஜேம்ஸ் ஜொய்ஸ் குறித்து லா.சா.ராவிடம் கேட்கப்பட்ட போது யுலிஸிஸ் நாவல் ‘அப்பட்டம், வக்கிரம், குப்பை, ஆபாசம், சாக்கடை கலந்தது’ எனக் கூறி நிராகரிக்கிறார். அந்த நேர்காணலிலேயே தனது பிரதிகளில் கையாளுகிற நனவோடை உத்தியை ஜேம்ஸ் ஜொய்ஸிடமிருந்து வேறுபிரித்து அணுகும்படியும் லா.சா.ரா கேட்டுக்கொள்கிறார்: “நீங்களெல்லாம் எண்ணுகிற நனவோடை அல்ல அது. எண்ணத்திலேயே பரிசுத்தமாக அதை நான் கையாண்டு இருக்கிறேன். குதிரை பசும்புல்லைத்தான் தின்னும், வைக்கோலைத் தின்னாது. அது போலப் பசும்புல்லை மேயவிட்டிருப்பேன்.”
இக்கூற்றிலிருந்து லா.சா.ராவின் பிரதிகளில் வைக்கோலைத் தின்னுகிற கழுதை, மலத்தை உண்கிற பன்றி அன்னபிற விலங்குகளுக்கு வழங்கப்படுகிற இடத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். தலித்துக்கள், விளிம்புநிலை மனிதர்கள், மனப்பிறழ்வுற்றோர், வன்முறையாளர்கள் எல்லாம் லா.சா.ராவின் நனவோடையின் புனித எல்லைகளுக்கப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். லா.சா.ரா கூறுவதுபோல அங்கு பசும்புற்கள் தான் உண்டு, கருகிய புற்களின் கதியென்ன? இதனடியாக லா.சா.ரா தனது பிரதிகளை, அவற்றின் அழகியலை எந்த வர்க்கத்தின்/சாதியின் சொல்லாடல்களுடன் இணைக்கிறார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
[இடதுசாரி விமர்சகர்களின் கண்டனத்துக்குள்ளான சௌந்தர்ய உபாசகம்Xவியட்னாம் நிலமைகள் சிக்கலில் லா.சா.ராவின் சாய்வே எனக்கு இப்போதும், அதில் அவர் ஒரு நேர்மையான மனிதராய் நமக்குத் தெரிகிறார். அன்றாடம் கொலை நடக்கிற இந்தச்சூழலிலும் எமது அதிகாலைத் தேநீரை ரசித்துக் குடிக்க முடிகிறதே அது போலத்தான்.]
லா.சா.ராவின் மறைவையொட்டி நான்காவது பரிமாணம் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்(Nov.03 ‘ஐ’ அலைவரிசை) உரையாடலில் கலந்துகொண்ட எஸ்.எல்.எம் ஹனீபாவின் கருத்துக்களைக் கேட்ட போது லா.சா.ரா பிரதிகளின் மரபுவாத/பழமைவாதக் கூறுகளை மேலும் தீவிரமாய் உணர முடிந்தது. எஸ்.எல்.எம்.ஹனீபா லா.சா.ராவின் மொழி, பிரதிநுணுக்கங்கள் பற்றிக் கவனம் குவிக்கவேயில்லை; மாறாகா லா.சா.ராவிடமிருந்து இக்காலத்திய இளைஞரொருவர் ‘கற்றுக்கொள்ள’ வேண்டிய விடயங்களைப் பட்டியலிடுகிற காரியத்தையே அவர் (மிகவும் உவப்புடன்) செய்தார். லா.சா.ராவின் பிரதிகள் வலியுறுத்துகிற கூட்டுக்குடும்ப மரபுகள், அவர்களின் பண்பாட்டு ஒழுங்கமைப்பு, வாழ்தல் நோக்கங்கள் ஆகியவற்றின் உயரிய தன்மை என்பன சிலாகிக்கப்படுகையில் குறித்த குடும்ப நிறுவனத்திற்குள் சிக்குண்டு மூச்சுவிடவே திணறிக்கொண்டிருக்கிற ஒரு சிறு பொடியனாய்/பெட்டையாய் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களிடம் லா.சா.ரா பற்றி உருவாக்கியளிக்கப்படுகிற சித்திரம் எதுவாயிருக்கக் கூடும்?
லா.சா.ராவை இவற்றுக்காக நிராகரித்துவிடுதல் சாத்தியமில்லை. அவரது பிரதிகளில் மிக இளம் தலைமுறையினர் வாசிக்க வேண்டிய நிறைய வேறு விடயங்கள் உண்டு. எஸ்.எல்.எம் கூறிய விடயங்களை/ அல்லது லா.சா.ராவின் பேட்டிகள் வலியுறுத்துகிற விடயங்களைத் தான் நாம் அப்பிரதிகளில் வாசிக்க வேண்டுமென்பது இல்லை.
இன்றைக்கு லா.சா.ராவை நான் வாசிக்கும்போது முன்புபோல் அவரது மொழியின் போதையேற்றலில் மயங்கிக் கிடப்பதில்லை. அவரது பிரதியின் சொல்லப்படாத பக்கங்களைச் சேர்த்து வாசிக்க முடிகிறது. இதுவும் கூட இன்பம் தருவதுதான். மொழிபுகளின் லாவகமான நெளிவு சுளிவுகளில் வழுக்கியபடி லா.சா.ராவின் அரசியலை வாசிப்பது இன்னொருவித கிறக்கத்தைத் தருகிறது. இதுகூட அவரது மொழியின் அசாத்தியமான தன்மையால்தான் என நினைக்கிறேன். ஏனெனில் க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களிடத்து கட்டுடைப்பு வினையென்பது அவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. ஏனெனில் அங்கு மொழிவிளையாட்டுக்கு, அர்த்தங்களை ஊகித்துச் செல்வதற்கு இடமேயில்லை. இங்கு அர்த்தங்களைச் சந்தேகப்படுத்தி, வேறுவேறு சூழமைவுகளில் இடப்படுத்தியணுகிற ஒரு தன்மை இருக்கிறது. இந்த நிலமையைத்தான் ‘நல்ல இலக்கியத்துக்கான’ தகுதியாக ரோலன் பார்த் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த மொழியை நாம் லா.சா.ராவிடத்து இன்னும் ஆழமாய் புரிந்து வாசிக்க முயல வேண்டும். அதே போல இந்த ஆண்மொழி முக்கியமானது. தி.ஜானகிராமன், நகுலன்(சுசீலா), லா.சா.ரா(அபிதா, ஏகா, ஜனனி) போன்றவர்களிடம் masculine language என்பது இயங்குகிற விதம், அதில் ‘பெண்மை’/”பெண்’ ஆகியவை எங்கனம் மற்றும் எவ்விதத்தில் இடப்படுத்தவும் இடமழிக்கவும் பட்டிருக்கின்றன என்பதை வாசிப்புச் செய்ய வேண்டும். இப்படியாக லா.சா.ராவை முன்வைத்து உரையாட ஏராளம் விடயங்கள் உண்டு; அவரது பிரதிகளுக்கும் கர்நாடக சங்க்கிதக் கட்டுமானத்துக்கும் இடையேயிருக்கிற இசைவிணைவுகள், அவரது பிரதிகளில் கையாளப்பட்ட நனவோடை உத்தியில் Continuity of conscience (பிரக்ஞையின் தொடர்ச்சி) மற்றும் Conscience of continuity (தொடர்ச்சி குறித்த பிரக்ஞை) எனுமிரண்டும் ஒன்றையொன்று குறுக்கீடு செய்கிற விதம், இப்படியான குறுக்கீட்டால் அமைக்கப்படுகிற அவரது narrative installments, இந்தக் கதைசொல்லல் துண்டுபடுத்தப்படுகிற விதம், இந்தத் துண்டுகள் தமக்கிடையிலாகப் பேணிக்கொள்கிற ஒருவித அதீத ஒழுங்கு(meta-structure of fragmented narratives)… இவை பற்றியெல்லாம் லா.சா.ரா பிரதிகளை முன்வைத்து உரையாட வேண்டும்; குறிப்பாகப் பெண்ணியர்கள் மற்றும் பின்நவீன பிரதியாளர்கள். எமது முன்னைய தலைமுறை லா.சா.ராவை நிராகரித்தது(கைலாசபதி), விளங்கவில்லை என்று அப்பால் வைத்தது. நாம் லா.சா.ராவை மீள வாசிக்க வேண்டும். மேலும் மேலும் சிக்கலடைந்து செல்கிற பிரதிகளை விளங்கிக் கொள்ள இதுபோன்ற மீள்வாசிப்புகள் அவசியமானவை. லா.சா.ராவின் பிரதிகள் பற்றிய உரையாடல் தமிழில் உரிய காலகட்டத்தில் நடந்திருந்தால் இன்றைக்குக் கோணங்கியை, பிரேம்-ரமேஷை விளங்கிக் கொள்வதில் நாம் இவ்வளவுக்குப் பின்நிற்கத் தேவையில்லை. மாறாக இன்னும் தீவிரமாக இவர்களது பிரதிகளை வாசிப்புச் செய்வதற்கான தகமைகளை பெற்றுக்கொண்டிருந்திருப்போம்.
லா.சா.ராவை வாசிப்பதென்பது அவ்வளவு கடினமான, சுமையான விடயமில்லை. அந்த அனுபவம் அலாதியானது. அதிலும் லா.சா.ராவும் அவரது பிரதிகளை வியாக்கியானப்படுத்துகிற பழைய தலைமுறையினரும் சொல்கிற மாதிரித்தான் லா.சா.ராவை நாமும் வாசிக்க வேண்டும் என்பது இல்லை. தலைமுறைகள், கோட்பாடுகள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் கடந்து, அவற்றை மீறி லா.சா.ராவின் மொழிக்கு இருக்கிற அந்த அரூபமான, மௌனமான இசை என்னை மிகவும் வசப்படுத்தி அலைக்கழித்தது. இப்போது அரசியல் புரிந்திருக்கிற நிலையிலும் அப்பிரதிகளை வாசிப்பது இன்பம்தருகிற ஒன்றாகவே இருக்கிறது. அந்த இசை ஓய்ந்து போய்விடவில்லை.
நகுலன் இறந்த போது ‘நகுலன் இறந்த பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ எனும் வாக்கியத்தை கோணங்கியின் ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’ தொகுப்பிலிருந்து எடுத்து முகப்பில் பிரசுரித்திருந்தது உயிர்மை இதழ். லா.சா.ரா இறந்துபோய்விட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இந்த ஒலிநாடா வாக்கியம்தான் உடனடியாய் நினைவில் வந்தது. இதை எழுதுவதற்காய் லா.சா.ராவின் பிரதிகள் சிலதை மீள வாசிக்கும்போது அப்போதெல்லாம் கேட்ட, நான் உபாசித்த, ரசிகனாயிருந்த அதே இசை கேட்கிறதா எனக் கவனித்தேன்: மௌனம், மௌனம் மேலும் குளிர்கிற மௌனம். எதிர் இருக்கையில் இருந்து உரையாடிக்கொண்டும் இசைத்துக்கொண்டும் இருந்த, பல காலம் பழகிய ஒருத்தர் எழுந்து போய்விட்டிருக்கிறார். அந்த இருக்கை வெறுமையாகவே இருக்கிறது, அப்படியான ஒரு வெறுமையை பிரதிகளை-குறிப்பாக அபிதாவை வாசிக்கும் போது மிகவும் பௌதீகமாகவே உணரக்கூடியதாய் இருந்தது. லா.சா.ரா என்கிற மனிதருடன் இவ்வளவு காலமும் உரையாடிக்கொண்டா இருந்திருக்கிறேன்?! அப்படியானால் ‘பிரதியாளரின் மரணம்’?? சொல்லத் தெரியவில்லை.

***


January 17th, 2008

பாதையில் நிற்பவர்கள்

Print This Post Print This Post

தலைக்கவசம், கனமான சீருடை, துப்பாக்கி, தொடர்புச் சாதனம் மற்றும் கவலைகள் பயங்களைத் தாங்கியவாறு வெயிலுக்குக் கீழ் வீதியில் நிற்பது அவனது கடமை. பாதையில் நிற்கும் அவனது படைப்பிரிவே சமாதானத்துக்கான பாதையில் நிற்பதாக பேப்பரில் பார்த்த குறிப்பு அவனுக்கு ஞாபகம் வந்தது. சிரித்த கணத்தில் மேலுதட்டு வியர்வையை களைப்புடன் உணர்ந்தான். கைக்குட்டையால் நெற்றியையும் மேலுதட்டையும் அழுந்தத் துடைத்தவாறு நாளை மறு நாளில் இருந்து தனக்கு கிடைக்கவிருக்கும் மூன்று மாத கால விடுமுறையினை ஆசுவாசத்துடன் நினைவூட்டிக்கொண்டான். நின்று நின்று கால் உளைவதை உணர்ந்தவன் அருகில் இருந்த இடிந்த மதில் துண்டொன்றில் அமர்ந்து கொண்டான். தன்னுடைய சீருடைக்கும் ஆயுதங்களுக்கும் அந்நியமானவனாக திடீரெனத் தன்னை உணர்ந்தான். தனக்கும் அவற்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலுணர்ந்த மறுகணமே தாங்க முடியாத சுய பரிதாபம் ஏற்பட்டது.. தாகம் எடுத்தது. போத்தலினுள் குடிநீர் முடிந்திருந்தது. ஆத்திரத்தில் எட்ட இருந்த கல்லொன்றை பூட்ஸ் காலால் உதைத்தான். எச்சில் கூட்டி விழுங்கி பின் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டான்.
வெய்யில் அவனுக்கு அறவே பிடிப்பதில்லை . குளிர் நிழல்களால் ஆன தரை கொண்டது அவன் கிராமம். அதன் நீர் நிலைகளையும் தாமரைக் குளங்களையும் ஆதங்கத்துடன் நினத்துக் கொண்டான். மூன்று வருடங்களாக பெரும் சிக்கல்கள் இன்றிக்கழிந்து போன அவனது பணி தற்போது மிகவும் சிரமமூட்டக்கூடியதொன்றாகவும் அச்சம் தக்கூடியதாகவும் மாறிவிட்டது. கிரனேட்டுகள் எந்நேரமும் வீசப்படலாம் என்பது மட்டுமே அவன் இந்த வெய்யிலிலும் மயங்கி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரே காரணி. பெரிய கருமேகம் ஒன்று சூரியனை மறைத்துக் கொண்டது. குளிர்ந்த காற்றாக பத்மாவை அவன் உணர முடிந்தது. ஒரு குறுஞ் சிரிப்பு அவன் உதடுகளில் ஓடி மறைந்தது. நாளைக்கு இதே நேரம் வவுனியா கழிந்த பிறகு தானும் அவளும் ரயில் ஜன்னலோர இருக்கை நெருக்கத்தில் செய்யக்கூடியவற்றை மீண்டும் காட்சிப்படுத்தி ஊகித்தான்.அந்த நினைப்பு அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது.
மேகம் மீண்டும் விலகியது. தங்கியிருக்கும் பதுங்கு அரணுக்கு செல்வதற்கான பேரவா அவனுள் தோன்றியது. ஜினசேன தயாரித்துத் தரும் நெல்லிக்கோர்டியல் மீதுஅவனுக்கு திடீர்க் காதல் ஏற்பட்டது.

மல்லிகை கொடியை தகரக்கூரைகளுக்கும் மண்மூடைகளுக்கும் மேலாகப்படர விட்டு ஜினசேனவும் மூன்று வருஷம் முன்பு சமரில் பலியான நிசங்கவும் அவ்வரணின் உள்ளே நிலவும் வெப்பத்தைத் தடுத்திருந்தனர். காலப் போக்கில் கொடி கிசுகிசுவென்று வளர்ந்து அரணை அடையாளம் தெரியாதவாறு மறைத்திருந்தது. பாம்பு, புழு, பூச்சி பயம் என்பதால் சொந்தச் செலவில் கம்பி நெற் அடிக்க வேண்டி இருந்தது. கூரையில் நீக்கல் இல்லாமல் பேப்பர் ஒட்ட வேண்டியும் இருந்தது. ஆனால் ஜினசேன, எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஜப்பான் ரோஸ்களையும் வாடாமல்லியையும் அரண் சூழலில் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.
மூன்று மாதங்களுக்கு முன்பெல்லாம் இரவின் சுகமான குளிருடன் கலந்து வரும் மல்லிகையின் சுகந்தத்துடன் ஜினசேன மார்பு ரோமங்களுக்குள் ஊதி விளையாடும் சிகரெட் புகையின் கதகதப்பையும் சேர்த்து அனுபவிப்பது ஒரு சுகானுபவமாக இருந்தது. ஜினசேனவுடன் இருப்பதென்பது போதை மருந்தேற்றிக் கவலைகளை மறந்து போகச் செய்வதைப் போன்றது எனவும் அவன் சிந்தித்ததுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் புணர்விற்கான வாதை முற்றிய தருணங்களில் நிகழும் யந்திரமயமான செயற்பாடாக அது மாறி விட்டது. சுய பரிதாபத்தையும் இழிவுணர்வையும் ஏற்படுத்தும் ஒன்றாகவும் தவிர்க்க முடியாததாகவும் அது மாறிவிட்டது. மேலும் ஜினசேனவை இவன் குதத்தில் புணருகையில் ஜினசேன முனகியவாறே வீதியை அவதானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. ஒருமுறை ஜினசேனவின் வாயில் குறியைக் கொடுத்து விட்டு அவனது தலைமயிரை அளைந்தவாறு வீதியை அவதானித்துக் கொண்டிருந்தான். தூரத்தில் தெரிந்த ஒளிப்பொட்டொன்றின் மீது பயத்துடன் கூடிய கவனம் பதிந்ததில் ஸ்கலிதமாகு முன்னரே உறுப்பு சிறிதாகி விட்டது. பின் ஜினசேன ஆயிரம் வித்தை காட்டி அதை விரைப்படையச் செய்ய வேண்டி இருந்தது.
இந்த பதுங்கு அரணுக்கு வந்து சேர்ந்த காலத்தின் ஆரம்ப நாட்களில் ஜினசேன ஒரு அண்ணன் காரனைப் போலவே நடந்து கொண்டான். இவன் இருபதுகளின் தொடக்கத்திலும் அவன் முப்பதுகளின் நடுவிலுமாய் இருந்தது அதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஜினசேன சற்று நாட்செல்லச்செல்ல ஒரு நெருங்கிய நண்பன் போல பேப்பர்களில் பிரசுரமாகியிருந்த யசோதாவின் புகைப்படத்தின் கிளுகிளுப்பூட்டும் அம்சத்தை அதன் பின் ஊரின் காதற்பொழுதுகளை கிளர்ச்சிகளைப் பேசத் தொடங்கினான். இதுவே குளிக்கும் போது இவன் மார்பின் அடர் ரோமத்தை அவன் கிண்டல் செய்வதாய் அவனது மதர்த்த மார்பகங்களை இவன் கிண்டல் செய்வதாய் வந்து முடிந்தது. இவ்வாறான நாட்களின் மாலைப் போதொன்றில் இவன் சிறுநீர் கழிப்பதற்காக கையில் பிடித்திருந்த குறியை ஜினசேன உற்றுப்பார்த்துச் சிரித்ததில் இருந்து போடப்பட்ட இந்த ஒப்பந்தம் இவனுக்குத் தற்போது அலுத்து விட்டது. உறவின் ஆரம்பக் காலத்தில் இருந்த அசிங்க உணர்வு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் ஜினசேனவின் உறுப்புக்காகப் பிரித்த உதடுகளை விகாரையில் புத்தர் முன் பிரிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டான். இப்பொழுதெல்லாம் ஜினசேனவுடனான புணர்ச்சி அருவருப்பாகத் தோன்றுவதற்கான காரணம் வேறு என்பதை அவன் அறிவான். அந்த உறவை விடவும் பத்மாவை முலைகளாகவும் உதடுகளாகவும் பின்னங்களாகவும் சந்தனாதித் தைல வாசனையாகவும் உணர்ந்தபடி சுயமைதுனம் செய்வது அவனுக்கு உவப்பாயிருக்கிறது. சுயபோகத்தின் பின்னரான வெறுமையும் அச்சமும் சுயபச்சாத்தாபமும் அவனை சோர்வச்சமடையச் செய்தபோதும் வேறெந்த நிகழ்வும் தன்னை நிம்மதியடையச் செய்ய முடியாது - இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கேனும் - என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். பத்மா முலைகளாகவும் சந்தன்னாதித் தைல வாசனையாகவும் உணரப்படாத பொழுதெல்லாம் அவன் மனது கவலையும் விரக்தியும் நிரம்பித் தளும்பத் தொடங்கி விடுகிறது.

பத்மா இவனுக்கு அறிமுகமாகி சில மாதங்கள் கூட ஆகியிருக்காது என்ற உண்மை மீது இவனுக்குப் பலத்த சந்தேகம். பல ஜென்மப் பிணைப்பு பந்தம் என நீளும் அவனது கவிதைகள் இந்தச் சந்தேகத்தின் அடிப்படையிலானவையே. பத்மாவின் தம்பி மூலமாகத் தான் பத்மா இவனுக்கு அறிமுகமானாள். இவன் இங்கு வர முன்னரே பத்மாவின் தம்பி ஜினசேனவுக்கு சிகரெட் வங்கித் தர அது வங்கித் தர இது வங்கித் தர என உபயோகப்பட்டுக்கொண்டிருந்தான். இவனுக்கு பத்மாவின் தம்பியை மிகவும் பிடித்திருந்தது. பொடிமல்லியை நினைவூட்டுவதாயிருந்த அவனது தோற்றமும் செயற்பாடுகளும் இனிப்புகள் வங்கித்தருவதற்கான காரணங்களாயிருந்தன. பத்மாவைக்காட்டி தனது அக்கா என அவன் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இனிப்பு வங்கித் தர வேறு காரணமிருந்தது.
ஒரு முறை இவனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. றக்ரர் ஒன்றை சொந்தமாக வாங்கிக் கொள்ளும் பொருட்டு இவன் சேர்த்து வைத்திருந்த பணம் முழுதும் தாயின் வைத்திய செலவுக்குக் கரைந்து கொண்டிருந்ததில் இன்னும் எத்தினை நாளைக்கு முகாமில் கிடக்கவேண்டியிருக்கப் போகிறதோ என்ற கவலைகள் கூடியது. யோசனைகள் முற்றிய நாளொன்றில் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்த பத்மாவையும் பொடிமல்லியையும் இவன் கண்டான். கண்கலங்கியவாறு அரைகுறைத் தமிழில் விபரம் விளக்கி தாயின் பெயரும் நட்சத்திரமும் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்ன போது சத்தியமாக அவன் மனதில் எவ்வித மென்னுணர்வுகளும் இருக்கவில்லை. பத்மா, பூசை முடிந்து வீடு திரும்புகையில், தேங்காய்ப் பாதியொன்றினுள் குங்குமம், திருநீறு, வீபூதி, நித்தியகல்யாணிப் பூக்கள் வாழைப்பழம் இட்டு நிரப்பி அவனிடம் தந்தாள். சைகையும் சிங்களமும் இதந்தரு புன்னகையும் கலந்த மொழியொன்றில் அவனது தாய் குணமாகி விடுவாள் என பத்மா கூறிய நொடியிலிருந்து அவளை குளிர்ந்த காற்றாக, சந்தனாதித் தைல வாசனையாக, புன்னகையாக உணரும் செயற்பாடு இவனுள் தொடங்கியிருந்தது.
வெசாக்கின் போது இதய வடிவிலான வெசாக் கூண்டொன்றை பத்மாவுக்கென வடிவமைத்துப் பரிசளித்தான். சனங்களுக்குக் கொடுப்பதற்காக படைத்தலமையகம் அளித்திருந்த பாற்சோற்றுப் பார்சல்கள், உடைகள், பலகாரங்கள், போன்றவற்றை வெற்று ஷெல் பெட்டியொன்றினுள் இட்டு பத்மா வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான். பிரத்தியேகமான இத்தகைய செயற்பாடுகளின் மூலம் தன்னைப் பத்மாவிடம் சொல்லிவிட முடியும் என அவன் நம்பினான். பதிலுக்கு, பொடிமல்லியுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடுகையில் அவள் முகம் புன்னகையுடன் ஜன்னலருகே தெரிந்தது. பிறிதெரு நாள் வீதியால் சென்று கொண்டிருந்த இவள் தடுமாறி கல்தடக்கி விழவும் அவன் ஓடி வந்து பிடிக்கவும் நாடகத்தனமாக காதல் தொடங்கியாகி விட்டது. விழுந்த பத்மா, பேச்சுச் சிங்களம் புத்தகம் அவன் கண்களில் பட வேண்டும் என்பதற்காகவே பிறிம்பாய் அதை விழுத்தினாள். அது அவனது கவனத்தை ஈர்க்கும் வகையில் விழுந்து கிடந்தது. ‘சிங்களம் படிக்கிறது? .. ஆ?’ என்று கேட்டவாறு முதல் பக்கத்தைத் திறந்த அவன் அதிர வேண்டியிருந்தது. அவனது பெயர் நெளிநெளியாக சிங்களத்தில் எழுதப்பட்டு வண்ணாத்துப் பூச்சி ரோஜாப்பூ படங்கள் கலர் பேனைகளால் வரையப்பட்டு இருந்தது. இரண்டு இதயங்களும் ஒரு அம்புக்குறியையும் தெளிவாகவே பத்மா கீறியிருந்தாள். புத்தகத்தைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாள் அன்று. இச்சம்பவத்துக்குப் பின் வீட்டுக் கேற்றடிக்கு முற்றம் கூட்ட வரும் அவளை இவன் ஒருவித உரிமையோடு உற்றுப் பார்ப்பதும் சைகைகளை வெட்கத்துடன் அவள் பரிமாறிக்கொள்வதும் நடந்தன.
சம்பளத்தில் வீட்டுக்கு அனுப்புவது, தனியான வோக்மன் வாங்க, றக்ரர் வாங்க என்று சேமிப்பது போக தங்கச்சிக்காரிக்கு தோடு வாங்கவெனவும் பணம் சேமிப்பில் வைத்திருந்தான். அந்தப் பணத்தில்தான் தீபாவளி வந்த போது சாறி ஒன்றும் குமாரோதய வர்த்தகப் பதிப்புக்களும் வாங்கி இதயம் அச்சிடப்பட்ட பரிசுப்பொதித் தாளில் பொதிந்து பத்மாவுக்கென பரிசளித்தான். அந்தச் சேலைஅவளுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பொடிமல்லியிடம் 50 ருhபாய் லஞ்சம் கொடுத்து அவளுக்குப் பிடித்தமான கலரைத் கெரிந்து கொள்ளவேண்டியிருந்தது. அதன் பின்னான அவர்களுடைய இரகசியச் சந்திப்பில் வீட்டில் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டானென கடிந்து கொண்டாள். பதிலுக்கு அவள் அதை எங்கனம் சமாளித்தாள் என அவன் வினவிக்கொண்டிருக்கவில்லை. அவளுடைய கோபத்தின் இடுக்குகளில் வெளித்தெரியும் புனித காதலை அவதானித்தவாறு குறுநகை புரிந்தான். அவள் அவனது மார்பில் குத்திச் சிரித்தாள்.
அவனுடைய மூன்று சகோதரிகள் பற்றி, அவர்களுக்குப் பிடித்தமானவை பற்றி, நகைச்சுவையாக உரையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. கடிதம் ஊரிலிருந்து வரும் நாட்களில் அவளுக்கு அதை மொழிபெயர்த்து சேர்ந்து சிரிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. அவளுடன் இருப்பது மாத்திரமே அவனுக்கு ஆறுதலளிக்கும் ஒரே விஷயம்.

இதுவரை அவர்களுக்கிடையே உடலுறவு ஒரே ஒரு முறை தான் நடந்தது. இன்றும் அந்த நிகழ்வை ஓர் அசௌகரியமான, அச்சமூட்டக்கூடிய ஒன்றாகவே அவனால் நினைவு கூரமுடிகிறது. உடலெங்கும் ஓடிமறைந்த குறுகுறுப்பில் அவளை இறுக்கி அணைத்து முரட்டுத்தனமாக அவளுடலைச் சுவைக்க முயன்ற வேளை பெரும் அச்ச உணர்வை அவன் அடைந்தான். மார்பகங்களைக் கையாளுகையில் பயத்துடன் உதடுகளைக் கடிக்க வேண்டியிருந்தது. அவள் கண்களை மூடிய நிலையில் இருந்தது சற்று ஆசுவாசமளித்தது. உறவுக்கு அவள் சம்மதித்த நாள் தொட்டு அவனைப் பயப்படுத்திக்கொண்டிருந்த விடயம் விந்து முதலிலேயே வெளியேறிவிடுகிற பிரச்சனை தான். வார இதழொன்றின் மருத்துவக் கேள்விபதில் பகுதியில் இதைப்பற்றி இவன் வாசித்தறிந்திருந்தான். பத்மாவினுள் புகுந்து நீண்ட நேரம் இயங்கியும் விந்து வெளிப்படவில்லை. குறி விறைத்தபடியே இருந்தது. இந்த நிலமை அவனுக்கு மேலும் பயத்தைக் கொடுத்தது. குறி சுருங்கிவிடக்கூடும் என அவன் மிகவும் அஞ்சினான். மனதை ஒருமுகப்படுத்தி இயங்குவதற்காக பதமாவின் மார்பகங்களை நோக்காது அவற்ரைக் கசக்கத் தொடங்கினான். இயலாமல் போகவே பத்மாவை மனத்திரையில் தூஷண வார்த்தைகளுக்கிடையில் இயக்கிப் பார்த்தும் தோல்வி கண்டான். கண்களை மூடியவாறே ஜினசேனவுடனான அனுபவங்களை மீட்டு, சில தூஷணங்களை முணுமுணுத்து உச்சமடைந்து இயங்கிச்சரிகையில் அவனுக்கு அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. பத்மாவின் மார்பகங்களுக்குள் புதைந்து விம்ம ஆரம்பித்தான். பத்மா பிடரித் தலைமயிரை அளைந்து அழுத்தியது அவனது ஆழுகையை மேலும் அதிகரிப்பதை உணர்ந்து உடைகளை அணிந்து கிளம்பினான்.
இதன் பிறகு, பத்மாவை உடலுறவுக்கென அவன் அழைத்தது இல்லை. திருமணமானால், தனது உடமையாக அவள் ஆகிவிட்டால் பயம் இருக்காது என அவன் நம்பினான். அவளை சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டி இருப்பதற்கான காரணங்களில் இதுவுமொன்றாயிற்று. அவனுடைய தமக்கைக்கும் தாய்க்கும் பத்மாவின் புகைப்படத்தை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஊருக்குக் கூட்டிவந்தால் உடவத்த முதலாளியுடன் கதைத்து ஒருமாதிரி பன்சாலைக் காரங்களை ஒப்பவைக்க ஏலுமென அக்கா கடிதமெழுதியிருந்தாள். குழந்தை பிறந்தவுடன் தாயையும் தம்பியையும் புத்தளம் பக்கமாக கூப்பிட்டுவிடலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை இவன் செய்யமுடியுமெனவும் பத்மாவுக்குக் கூறினான். கடிதமெழுதி வைத்துவிட்டு புறப்படுவதென பத்மா தீர்மானித்தாள். இவன் எல்லையற்ற மகிழ்வடைந்தான்.

‘அலாம்’ அடித்தது. அதன் தொடர்ச்சியான கீ கீ, அவனுக்கு எரிச்சலூட்டியது. மணிக்கட்டை பற்றி ஆத்திரத்துடன் அலாமை நிறுத்தி பதுங்கு அரணை நோக்கி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் ஜினசேன வருவது தெரிந்தது. பிளாஸ்க்கினுள் தேநீர் வாங்கி வைத்த்கிருப்பதாய்க் கூறி இவனைக் கடந்து போனான் ஜினசேன.
கிணற்றடிக்கு மேல்கழுவப் போன போது வேலி இடுக்கினால் பத்மா இவனை அழைத்தாள். மிகவும் பயமாயிருப்பதாய் கிசுகிசுத்தது அவளது குரல். புற்கள் சலசலத்ததில் பறந்த நுளம்புகள் காதுக்குள் கீ என்றன. பயப்படத்தேவையில்லை வவுனியாவில் சந்திக்கலாம் எனக்கூறி இனம்புரியாத பயத்துடன் அரணுக்கு வந்து சேர்ந்தான்.
மெழுகுதிரியைக் கொளுத்தி வீதியை அவதானித்தான். கப்பினுள் தேநீரை ஊற்றி கிழங்கு ரொட்டியிடன் சேர்த்துக் குடித்தான். குரல்களேதுமற்ற நிசப்தம் அவனுக்குப் பயத்தை தருகிறது. ஜினசேன திரும்பி வர பதினொரு மணியாகும். அவனால் இன்று நித்திரை செய்ய முடியாது. இதை அவனே நன்கறிவான். றேடியோவில் ஸ்டேஷன் பிடிக்க முயற்சி செய்தான். வெறுமையே இருந்தது. தமிழ் எப்.எம் ஒன்றில் விட்டுவிட்டு கிழங்கு ரொட்டி சுற்றி வந்த ஆங்கிலப் பேப்பரைப் படிக்கத் தொடங்கினான் - எழுத்துக்கூட்டி.

ஜினசேன, இவன் கேட்காமலேயே சமகன் தூளை தேநீருள் போட்டுக் கலக்கி குடிக்க வைத்தான். துக்கம் நிரம்பி வழிந்தது. ஜினசேன மெழுகுதிரியை அணைத்தான். போர்வை தன்மீது போர்த்தப் படுவதை உணர்ந்தான். ஜினசேனவின் சூடான மூச்சுக்காற்றால் உடலைப் போர்த்திக்கொள்வதற்கான விருப்பம் வந்தது. போர்வையை அகற்றி மெல்ல நகர்ந்து ஜினசேனவின் மீது கைகளைப் பரப்பி அணைத்துக் கொண்டான். ஓலமிட்டு அழ அவன் மனம் மிகவும் விரும்பியது.
இன்றைக்கு எழுந்ததைப் போல அதைகாலையில் அவன் என்றுமே எழுந்தது கிடையாது. குத்தும் பனிக்குளிரில் நடுங்க நடுங்கக் குளித்துத் தயாராகியிருந்தான். புத்தர் சுருவத்தைக் கும்பிட்டு ஜினசேனவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அணைத்து விலகினான். கண்ணீரைக் கண்ட ஜினசேன கேலியுடன் பின்புறத்தில் தட்டிச் சிரித்தான். ஜினசேனவின் குரல் கரகரத்திருந்தது.
பத்மாவின் மாற்றுடுப்புகள் இரண்டும் இவனது பொருட்களும் அடங்கிய பாக்-ஐ எடுத்தவாறு அரணுக்கு வெளியில் வந்து ராணுவ பஸ்சுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான். சற்றுத் தூரத்தில் சூரியனின் வெள்ளொளியில் குளித்தவாறு பத்மா நின்றிருந்தாள். மனம் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கிற்று. அதீத சந்தோஷத்தில் அவளை நோக்கி கையசைத்த மறுகணம் காதைக்கிழிக்கும் வெடியோசையுடன் கதகதப்பான சிவப்புக் குருதியை முகமெங்கும் உணர்ந்தான். வெடியொலியின் பின்னணியில் காட்சிகள் மஞ்சள் நிறமடைவதையும் வெண்ணிறமான சூரியனை மறைத்தவாறு ராணுவ ஜீப்பில் இருந்து சிப்பாய்கள் குதித்தோடுவதையும் மோட்டர் சைக்கிள்கள் உறுமிப்பறப்பதையும் கண் இமைகள் மூடும்வரை பார்த்துக் கொண்டிருந்தான்.

November 2005


FireStats iconPowered by FireStats